தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இசுலாம்

மவ்லவி அல்ஹாஜ் B. முகம்மது சயீது பாகவி
இமாம் குத்பா பள்ளி, முதல்வர் பெண்கள் அரபிக் கல்லூரி
ஹஜ் குழு உறுப்பினர், புதுச்சேரி - 605 001.

வாழ்த்துரை

“இறை பேரொளி நபிகள் நாயகம் அருட்காவியம்” என்னும் தமிழ்
இலக்கியத்தைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிய புதுவைக் கவிஞர்
துரைமாலிறையனும் அவரோடு இல்லறத்தில் மட்டுமல்ல, இலக்கியச் சேவையிலும்
துணைபுரியும் அன்பு மனையாள் சூரியவிசயகுமாரியும் மிகவும் பாராட்டிற்குரிய
தம்பதியர்கள்.

இவர்கள் ஏற்கெனவே யாத்து வெளியிட்டுள்ள அருள்நிறை மரியம்மை
காவியமும், அருள் ஒளி அன்னை தெரேசா காவியமும் இவர்கள் இலக்கியத்தில்
ஆழ்ந்த புலமை பெற்றவர்கள் என்பதைச் சுட்டுவதோடு பரந்து விரிந்த உள்ளம்
படைத்தவர்கள் என்பதையும் காட்டுகின்றன. காரணம் குறிப்பிட்ட ஒருமதத்தைப்
பின்பற்றுபவர்களாக இருந்தும் அவ்வட்டத்துக்குள்ளேயே தங்கள் சிந்தனையைச்
சுருக்கிக் கொள்ளாமல் அதிலிருந்து வெளியேறிப் பல்சமயச்சிந்தனையில் தம்மை
ஈடுபடுத்திக் கொண்டுள்ளதைக் குறிப்பிடலாம்.

உலகத்தில் மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் நூறுபேர்களைப்
பட்டியலிட்ட ஒரு கிறித்தவ அறிஞர். அவ்வரிசையில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களையே முதன்மைப்படுத்தினார். அதற்கான காரணத்தையும் கூறினார்.
அத்தகு சிறப்புவாய்ந்த பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
வாழ்வைக் காவியமாகச் சமைத்துத் தந்திருப்பது இறை அன்புக்கு உவப்பானது
என்பதில் சந்தேகமில்லை.

மேலும்இக்காவியம் இஸ்லாமிய அன்பர்களுக்கு இலக்கியச் சுவையுடன்
நபிகள் நாயகம் ரசூலுல்லாஹிஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை
முழுவதுமாய்ப் புரியவைப்பதுடன் மாற்று மதத்து அன்பர்களையும் அறியவைக்க
முயன்றிருப்பது மெத்தவும் பாராட்டிற்குரியதே.

இவர்களுக்கு உடல் நலத்தையும், நெடிய ஆயுளையும் தந்து இதுபோன்று
இன்னும் பல ஆக்கங்கள் வெளிவர இறைவன் அருள்புரிய வேண்டும் என
பிரார்த்திப்பதோடு எனது பாராட்டையும் வாழ்த்தையும் மீண்டும் தெரிவித்துக்
கொள்கிறேன்.

இவண்

மவ்லவி அல்ஹாஜ் B. முகம்மது சயீது பாகவி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-10-2017 10:27:45(இந்திய நேரம்)