தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalingathuparani


'முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட
முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட
வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும்'

என்னும் தாழிசையில் உணர்த்துகின்றார் ஆசிரியர். ஈண்டுக்
குலோத்துங்கன், வெள்ளாறு, கோட்டாறு என்னுமிடங்களைச் சார்ந்த
காட்டரண்களைக் கொளுத்தியழித்தானென்றும் குறிக்கப்படுமாறு காண்க.

இவன் சேரரையும் வென்றி கொண்ட தன்மையை,

'போரின் மேல்தண்டெ டுக்கப்பு றக்கிடும்
சேரர் வார்த்தை செவிப்பட்டதில்லையோ'

என்றவிடத்து உணர்த்தினார் ஆசிரியர்.

இவன் சேரனை வென்றிகொண்டு, திருவனந்தபுரத்திற்குத் தெற்கேயுள்ள
விழிஞம், காந்தளூர்ச்சாலை என்னும் சேரர் துறைமுகங்களில் இருந்த
மரக்கலங்களைச் சிதைத்தழித்தனன். இச்செய்தியை,

'வேலை கொண்டுவி ழிஞம ழித்ததும்
சாலை கொண்டதும் தண்டுகொண் டேஅன்றோ'

என்றவிடத்து உணர்த்தினார் ஆசிரியர்.

இங்ஙனம் வடநாடும் தென்னாடும் வென்றிகொண்டு பேரரசனாய்த்
திகழ்ந்திருந்தனன் இவன் என்பதை,

'பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே
கங்கை மணாளனை வாழ்த்தினவே'

என, ஆசிரியர் குறிக்குமாற்றால் உணர்க.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 13:32:30(இந்திய நேரம்)