Primary tabs
சில பாடல்களைப் பின்னர்ச் சேர்த்தேன். அவற்றில்
பெரும்பாலானவை மிகச் சிறு குழந்தைகளுக்கானவையே.
என் பாடல்களில் சில மொழிபெயர்க்கப்பட்டு
Children’s World,
(New Delhi) போன்ற ஆங்கில இதழ்களிலும், இந்தி, குஜராத்தி, மராத்தி,
கன்னடம் முதலிய மொழிகளில் சில இதழ்களிலும் வெளி வந்துள்ளன.
தெலுங்கிலே பல பாடல்களை டாக்டர் சல்லா இராதாகிருஷ்ணசர்மா மொழி
பெயர்த்து அவை நூலாக வெளிவந்துள்ளன. பிற மாநிலங்களில் நடைபெறும்
கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் நான் கலந்துகொள்ளும்போது அங்கு
வருபவர்கள் என் பெயரை ஓரளவு அறிந்துள்ளனரே தவிர, என் பாடல்கள்
எத்தகையன என்பதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை.
எனவே, இந்நூலுக்குத் தமிழுடன் ஆங்கிலத்திலும் ஓர்
அணிந்துரை
இருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணினேன். உடனே மதிப்பிற்குரிய
கே. ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களின் நினைவுதான் வந்தது.
ஆங்கில அறிஞர் உலகம் பெரிதும் மதித்துப் போற்றுகின்ற
பேராசிரியர் அவர். ஆந்திரப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக
விளங்கியவர்; சாகித்ய அகாதமியின் துணைத் தலைவராய்த் திகழ்ந்தவர்.
தற்போது சாகித்ய அகாதமியின் fellowவாக இருப்பவர்.
நான் ஆங்கிலத்தில் அணிந்துரை கேட்டதும், “தமிழ் நூலுக்கு ஆங்கிலத்தில் அணிந்துரையா!” என்று வியப்புடன் கேட்டார்.