Primary tabs


கணையும் வலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற
யாக்கை - கணையும்
வேலும் படைத்துணையாகக்
கொண்டு
பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற
யாக்கை, இருநிலம்
தீண்டா அருநிலை வகையொடு - நீர் அட்டை காலவயப்பட்டு
உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு,
இருபால் பட்ட ஒரு
சிறப்பின்று - இருபாற் படுக்கப்படும் அற்ற
துண்டம் இணைந்தது
போன்று ஆடலொத்த பண்பினையுடையது.
[இருநிலம் தீண்டா அரு - நீருட் கிடக்கும் அட்டை]
72. தானை யானை குதிரை என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்
வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான்மீண்டு எறிந்த தார்நிலை அன்றியும்
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்
ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக்
கூழை தாங்கிய பெருமையும் படையறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும்
களிறெறிந்து எதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு
பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும் வாள்வாய்த்து
இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்
செருவகத்து இறைவன் வீழ்வுறச் சினைஇ
ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலும் உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.
இஃது தும்பைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
நோனார் உட்கும் தானை யானை
குதிரை என்ற மூவகை
நிலையும் - பகைவரால் உட்கப்படுகின்ற தானையும் யானையும்
குதிரையுமாகியமூவகைப்பட்டவற்றினது நிலையும்.
தானைநிலை வருமாறு
"வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடன்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயருந் தோற்றின் நுமருள்
நாண்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கெனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
அரவுமிழ் மணியிற் குறுகார்
நிறைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே."
(புறம். 294)
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
(குறள். 774)
"நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர்த் தெறித்த
குடப்பால் சில்லுறை போலப்
படைக்குநோய் எல்லாந் தானா யினனே."
(புறம்.276)
"தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்கு
ஒற்கத்து உலந்தானும் ஆகுமால் பின்பின்
பலர்புகழ் செல்வம் தரூஉம்பற் பலர்தொழ
வானக வாழ்க்கையும் ஈயுமால் அன்னதோர்
மேன்மை இழப்பப் பழிவருவ செய்பவோ
தானேயும் போகும் உயிர்க்கு."
இஃது ஒரு வீரன் கூற்று.
யானை நிலை வருமாறு
"கையொடு கையொடு ஒருதுணி கோட்டது
மொய்யிலைவேல் மன்னர் முடித்தலை - பைய
உயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே அங்கோர்
வயவெம்போர் மாண்ட களிறு."
குதிரை நிலை வருமாறு
"நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ளம் ஒழிக்குங் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே நெருநை
உரைசால் சிறப்பின் வேந்தன் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலிற் போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்குமருப்பு யானை எறிந்த எற்கே."
(புறம். 303)
வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டு எறிந்த
தார்நிலையும் - வேல்வென்றி மிகலையே
கண்ணோக்குடையனாய்க்
களத்து முகப்பிற் சென்ற வேந்தனை மாற்றார் சூழ்ந்த இடத்து
வேந்தன் பாலினனாய மற்றொரு தலைவன் தன் நிலை விட்டுத்
தன்வேந்துமாட்டு அடுத்துத் துணையாய்
மாற்றாரை எறிந்த
தார்நிலையும்.
உதாரணம்
"நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே
இறையுறு விழுமம் தாங்கி அமரகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து
மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்று வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
ஈர்ந்தை யோனே பாண்பாசிப் பகைஞன்"
(புறம். 180)
எனப் பாணன் அது தோன்றப் புகழ்ந்தவாறு காண்க.
அன்றி இருவர் தலைவர்
தபுதி பக்கமும் அஃதல்லாமல்
படைநின்றுபொராநின்ற இருவரும் தம்முள்
பொருது படுதலும்.
உதாரணம்
"காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி
வேந்தர் இருவரும் விண்படர - ஏந்து
பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி
இருபடையும் நீங்கா இகல்."
(புறப். தும்பை. 12)
ஒருவன் ஒருவனை உடைபடை புக்கு
கூழை தாங்கிய
பெருமையும் - ஒருவன் ஒருவனைக் கெடுபடையின்கண் புக்குக்
கூழை தாங்கிய பெருமையும்.