தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   51


 

து
கைசெய்தூண் மாலை யவர்."               (குறள். 1035)

"பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி."               (புறம். 35)

"இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோ
டொன்றா உணரற்பாற் றன்று."     (நாலடி. குடிப்பிறப்பு. 4)

"வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே."       (புறம். 183)

இவை ஆறும் வந்தவாறு காண்க.

மறுவில் செய்தி  மூவகைக்   காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்
தேயமும் - குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய
மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்.

இறந்தகாலம்  முதலாகிய  மூன்று   காலத்தினையும்   நெறியினால்
தோற்றிய  அறிவன்     பக்கம்     என்றாலோ    வெனின்,   அது
முழுதுணர்ந்தோர்க் கல்லது புலப்படாமையின் அது  பொருளன்றென்க. பன்னிரு படலத்துள், "பனியும  வெயிலுங்  கூதிரும்  யாவும்,  துனியில்
கொள்கையொடு நோன்மை எய்திய   தணிவுற்று   அறிந்த   கணிவன்
முல்லை"  எனவும்  ஓதுதலின்  மேலதே பொருளாகக் கொள்க.

அறிவன் என்றது   கணியனை. மூவகைக்   காலமும்  நெறியினால்
ஆற்றுதலாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப்  பார்த்து
ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந்  தூமமும் மீன்வீழ்வும்
கோள்நிலையும்   மழைநிலையும்   பிறவும்  பார்த்துப்  பயன்  கூறல்.
ஆதலான் 'மூவகைக் காலமும் நெறியின் ஆற்றின் அறிவன்' என்றார்.

உதாரணம்

"புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி."            (புறப்.வாகை. 20)

நால் இரு வழக்கின்   தாபத    பக்கமும்   -   எட்டுவகைப்பட்ட
வழக்கினையுடைய தாபதர் பக்கமும்.

அவையாவன;-  நீராடல்,   நிலத்திடைக்  கிடத்தல்,  தோலுடுத்தல்,
சடைபுனைதல்,    எரியோம்பல்,    ஊரடையாமை,      காட்டிலுள்ள உணவுகோடல், தெய்வப்பூசையும் அதிதி பூசையும் செய்தல்.

உதாரணம்

"நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோல்உடையாச்
சோர்சடை தாழச் சுடர்ஓம்பி - ஊரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத்து உய்க்கும் வழி."             (புறப்.வாகை. 14)

"ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின
பாவை யன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக்கண் நெடுவரை அருவி ஆடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே."        (புறம். 251)

"கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம்பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்ளிலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே."   (புறம். 252)

இவற்றுள்ளும் சில வந்தவாறு காண்க.

பால் அறி மரபின் பொருநர் கண்ணும்    -   பாகுபாடு   அறிந்த
மரபினையுடைய பொருநர் பக்கமும்.

அஃதாவது, வாளானும் தோளானும் பொருதலும்  வென்றி  கூறலும்
வாகையாம் என்றவாறு.

வாளால் மிகுதல் வருமாறு

"ஏந்துவாள் தானை இரிய உரைகழித்துப்
போந்துவாள் மின்னும் பொருசமத்து - வேந்தர்
இருங்களி யானை இனமிரிந் தோடக்
கருங்கழலான் கொண்டான் களம்."       (புறப்.வாகை. 26)

மல்வென்றி வருமாறு

"இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
போர்அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகு மல்லற் கடந்தடு நிலையே."          (புறம். 80)

அனை     நிலைவகையொடு  -  வாளானும் தோளானும் பொருது
வேற லன்றி அத்தன்மைத்தாகிய நிலைவகையான் வேறலொடு.

அஃதாவது,    சொல்லான் வேறலும், பாட்டான் வேறலும், கூத்தான்
வேறலும், சூதான் வேறலும், தகர்ப் போர் பூழ்ப் போர் என்பனவற்றான்
வேறலும். பிறவும் அன்ன.

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்."             (குறள். 148)

இது சொல் வென்றி.

"வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணான் பாடினான்
வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக்
கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ்
அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து." 
                              (புறப்.பெருந்திணை.18)

இது பாடல் வென்றி.

"கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக்
கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்பூப்
படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின்று ஆடும்
தொடுகழல் மன்னன் துடி."        (புறப்.பெருந்திணை. 17)

இஃது ஆடல் வென்றி.

"கழகத் தியலுங் கவற்று நிலையும்
அளகத் திருநுதலாள் ஆய்ந்து - கழ

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:48:57(இந்திய நேரம்)