Primary tabs


இளையர், விருந்தினர், கூத்தர், அறிவர், கண்டோர்.
இவருள் தோழி வாயிலாதல் மேற்கூறுதலின் ஒழிந்த வாயில்கள்
ஈண்டுக் கொள்ளப்படும்.
"அன்னாய் இவனோர் இளமா ணாக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ்செம் மலனே."
(குறுந்.33)
இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது.
"நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடினீ பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே."
(குறுந்.75)
இது வருகின்றான் என்ற உழையர்க்குக் கூறியது:
"ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையிற் பெருங்கை தூவா
வறனில் புலத்தி யெல்லித் தோய்ந்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அஞ்சி லோதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊசல் உறுதொழிற் பூச லூட்டா
நயனின் மாக்களொடு குழீஇப்
பயனின் றம்மவிவ் வேந்துடை அவையே." (நற்றிணை.60)
இது பாங்கனைக் குறித்துக் கூறியது.
"நெய்யுங் குய்யும் ஆடி மையொடு
மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுந்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வர்ப் புல்லிப் புனிறுநா றும்மே
வாலிழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற் கொத்தனெம் அல்லேம் இதனாற்
பொன்புரை நரம்பின் இன்குரற் சீறியாழ்
எழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல்
புரையோ ரன்ன புரையு நட்பின்
இலையோர் கூம்புகை மருள்வோர் ஆங்குக்
கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்
பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப்
புரவியும் பூணிலை முனிகுவ
விரகில மொழியல்யாம் வேட்டத்தில் வழியே."
(நற்றிணை.380)
`வாயிலின் வரூஉம் வகை' என்றமையான்,
தன் ஆற்றாமையும்
வாயில்களாக் கொள்ளப்படும் என்பது பெற்றாம்.
"புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்
கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்
படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக்
காலணைந் தெதிரிய கணைக்கோட்டு வாளை
அள்ளலங் கழனி உள்வா யோடிப்
பகடுசே றுதைத்த புள்ளிவெண் புறத்துச்
செஞ்சால் உழவர் கோற்புடை மதரிப்
பைங்காற் செறுவின் அணைமுதற் புரளும்
வாணன் சிறுகுடி அன்னஎன்
கோல்நேர் எல்வளை நெகிழ்ந்த நும்மே." (நற்றிணை.340)
இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது.
`புள்ளிமி ழகல்வயின்' என்ற மருதக் கலியுள்,
"பூங்கட் புதல்வனைப் பொய்பா ராட்டி
நீங்காய் இகுவாய் நெடுங்கடை நில்லாதி
ஆங்கே அவர் வயின் சென்றீ அணிசி தைப்பான்
ஈங்கெம் புதல்வனைத் தந்து."
(கலித்.79)
என்று புதல்வன் வாயிலாகக் கூறியது காண்க. (6)
146. புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து
இடைச்சுரத் திறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய்வினைக்கு அச்ச மாகும்.
என்-எனின், இதுவும் தலைமகட்குரிய கிளவிக்கட்
படும் இலக்கணம்
நுதலிற்று.
களவிற் புணர்ந்து உடன்போகிய தலைமகள் கற்புக் கடன்பூண்
டொழுகுங்காலத்து மனைக்கணிருந்து தான்
முன்னர் இடைச்சுரத்தில்
தலைவனுடன் கண்ட கருப்பொருண் முதலியவற்றையும்
அவற்றின
தொழிலையும் குறித்துக் கிழவன் அன்புறுதற்குத் தக்கவற்றைக் கூறுதலே
தலைமகன் இயற்றுந் தொழிற்கு அஞ்சும்
அச்சமாகும் என்றவாறு.
எனவே புணர்ந்துடன் போகாத தலைவி அங்ஙனமிருந்து கூறல்
தலைவற்கு அவன் செய்வினைக்கண் அச்சமாகாதென்றவாறு.
உதாரணம்
"கான யானை தோல்நயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர் கொல்லோ தாமே யாம்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே".
(குறுந்.79)
இதனுள் அஞ்சியவாறு காண்க. பிறவும் அன்ன.
147. தோழியுள் உறுத்த வாயில் புகுப்பினும்
ஆவயின் நிகழும் என்மனார் புலவர்.
என்-எனின், இதுவுமது.
தோழியுள்ளிட்ட வாயில்களைப்
போகவிட்ட அக்காலத்தும்
முற்கூறிய நிகழுமென்றுரைப்பர் புலவர் என்றவாறு.
உதாரணம் வந்தவழிக் காண்க.
148. பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த
தெற்றகரு மரபிற் சிறப்பின் கண்ணும்
அற்றமழி வுரைப்பினும் அற்றம் இல்லாக்
கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ்
சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும்
அடங்கா ஒழுக்கத் தவன்வயின் அழிந்தோளை
அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்
பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி
இழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும்
வணங்கியல் மொழியான் வணங்கற் கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியுஞ்
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்
மாணலந் தாவென வகுத்தற் கண்ணும்
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினுஞ்
சூள்வயின் திறத்தால் சோர்வுகண் டழியினும்
பெரியோர் ஒழுக்கம் பெரிதெனக் கிளந்து
பெறுதகை யில்லாப் பிழைப்பினும் அவ்வழி
உறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய
கிழவோள் பால்நின்று கெடுத்தற் கண்ணும்
உணர்ப்புவயின் வாரா ஊடலுற் றோள்வயின்
உணர்த்தல் வேண்டிய கிழ