Primary tabs


கண்ணும் என்பது -
தாழ்ந்த இயல்பினையுடைய மொழியினான்
வணங்குதற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"உண்துறைப் பொய்கை வராஅல் இனம்இரியுந்
தண்துறை யூர தகுவதோ - ஒண்தொடியைப்
பாராய் மனை துறந் தச்சேரிச் செல்வதனை
ஊராண்மை யாக்கிக் கொளல்." (ஐந்திணையெழு.52)
எனவரும்.
புறம்படுவிளையாட்டுப் புல்லிய
புகர்ச்சியும் என்பது புறப்பட்ட
விளையாட்டினைத் தலைவன் பொருந்திய
புகர்ச்சிக் கண்ணும் கூற்று
நிகழும் என்றவாறு.
புகர்ச்சி - குற்றம்.
உதாரணம்
"காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர் மரீஇய சென்ற
மல்ல லூரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவர் தாயே
தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே."
(குறுந்.45)
என வரும்.
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் என்பது - இருவர்க்குஞ்
சிறந்த புதல்வனை நினையாமையால் தலைமகன்
தனிமையுறுதற்
கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"நெடுநா ஒண்மணி கடிமனை இரட்டக்
குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென ஒருசார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செவிலியோடு புதல்வன் துஞ்ச
ஐயலி அணிந்த நெய்யாட் டீரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை யீரிமை பொருந்த
நள்ளென் கங்குற் கள்வன் போல
அகன்துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே."
(நற்றினை.40)
எனவும்,
"நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீன் உணங்கல் கவருந் துறைவனைக்
கண்ணினாற் காண அமையுங்கொல் என்றோழி
வண்ணந்தா வென்கந் தொடுத்து." (ஐந்திணையெழு.64)
எனவும் வரும்.
மாணலந் தாவென வருத்தற்கண்ணும்
என்பது - நீ கொண்ட
நலத்தினைத் தந்து போஎனக் கூறுதற்கண்ணும்
கூற்று நிகழும்
என்றவாறு.
"விட்டென விடுக்கு நாள் தருக அது நீ
நொந்தனை யாயின் தந்தனை சென்மோ
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சேக்குந்
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் நலனே." (குறுந்.236)
என வரும்.
பேணா வொழுக்கம் நாணிய பொருளினும் என்பது - தலைமகளைப்
பேணாத ஒழுக்கத்தினால் தலைமகள் நாணிய
பொருண்மைக் கண்ணும்
கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பொய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி யோதம் மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானுந்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்முள் நாணிக் கரப்பா டும்மே."
(குறுந்.9)
என வரும்.
சூள்வயிற் றிறத்தாற் சோர்வுகண் டழியினும் என்பது - தலைமகள்
சூளுற்ற
சூளுறவிற் சோர்வுகண்டு அழிந்து கூறினும் கூற்று நிகழும்
என்றவாறு.
உதாரணம்
"எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுது புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறுஞ்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரொ டுற்ற சூளே."
(குறுந்.53)
என வரும்.
பெரியோரொழுக்கம் பெரிதெனக்
கிளந்து பெறுதகையில்லாப்
பிழைப்பினும் என்பது -
பெரியோ ரொழுக்கம் பெரிதாகுமெனச்
சொல்லித் தலைமகளைப் பெறுந்தகைமை யில்லாத பிழையின் கண்ணும்
கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"வெள்ளி விழுத்தொடி மென்கரும் புலக்கை
வள்ளி நுண்ணிடை வயின்வயின் நுடங்க
மீன்சினை அன்ன வெண்மணற் குவைஇக்
காஞ்சி நீழல் தமர்வளம் பாடி
ஊர்க்குறு மகளிர் குறுவழி விறந்த
இறாஅல் அருந்திய சிறுசிரல் மருதின்
தாழ்சினை யுறங்குந் தண்துறை ஊர
விழையா உள்ளம் விழையு மாயினும்
என்றும், கேட்டவை தோட்டியாக மீட்டாங்கு
அறனும் பொருளும் வழாமை நாடித்
தற்றக வுடைமை நோக்கி மற்றதன்
பின்னா கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால்
அரிய பெரியோர்த் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய்யாண் டுளதோஇவ் உலகத் தானே." (அகம்.286)
என வரும்.
அவ்வழி யறுதகை யில்லாப் புலவியின்
மூழ்கிய கிழவோள்
பால்நின்று கெடுத்தற் கண்ணும் என்பது - மேற் சொல்லிய வாற்றாற்
றலைவன் பிழைத்தவழி அவனா லுறுந்தகைமையில்லாத
புலவியின்
மூழ்கிய தலைவி பக்கத்தாளாகி நின்று
அதனைக் கெடுத்தற்கண்ணும்
கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"மானோக்கி நீ யழ நீத்தவன் ஆனாது
நாணில னாயின் நலிதந் தவன் வயின்
ஊடுவ தென்னோ வினி."
(கலித்.87)
என வரும்.
உணர்ப்புவயின் வாரா வூடனுற் றோள்வயி னுணர்த்தல் வேண்டிய
கிழவோன் பானின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும் என்பது
- தலைவன் ஊடல்