தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1170


‘சேந்தன்’ என்பது இயற்பெயர். (39) 

40.  சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ்
சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். 

இச்   சூத்திரம்   என்னுதலிற்றோ  வெனின்,   ஒரு  பொருண்மேல்
இருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று.

உரை:  மேற்   சுட்டுப்பெயர்   இயற்பெயரின்  வழியே   கிளக்க
எனப்பட்டது   போலச்,   சுட்டு   முதலாகிய   காரணப்  பெயரையும்
இயற்பெயர்க்கு வழியே வைத்துச் சொல்லுக என்றவாறு.

வரலாறு: ‘சாத்தன் கையெழுதுமாறு  வல்லன்,   அதனால்,   தன்
ஆசிரியன் உவக்கும்; தந்தையுவக்கும்’ எனவரும்.

அதிகாரத்தான், வழிக்கிளத்தல், ‘வினைக்கொருங்கு இயலும்’ (தொல்.
சொல். கிளவி. 38) வழிக் கொள்க.

எழுதுமாறு  என்பது வினை. முதற்சூத்திரம்  பொருள்வழி  வந்தது;
இது பொருளது குணத்துவழி வந்தது. 

41.  சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், இதுவும் ஒரு பொருண்மேல்
இருபெயர் வழுக்காத்தது நுதலிற்று.

உரை:   சிறப்புப்பெயரும்  இயற்பெயரும்  ஒருவற்கு உளவாயின்,
அவ்விடத்து     அவனைப்     பெயர்க்கொடுக்குங்கால்,     அவன்
சிறப்புப்பெயரை முன்கூறி, இயற்பெயரைப் பின் கூறுக என்றவாறு.

வரலாறு: ஏனாதி நல்லுதடன் ; சோழன் நலங்கிள்ளி என வரும்.

*   உம்மையாற்   பிறப்பினாகிய   பெயர்க்கும்,  தொழிலினாகிய
பெயர்க்கும்,  கல்வியினாகிய  பெயர்க்கும்  இயற்பெயர்களை  வழியே
வைத்துச் சொல்லுக.

*  வரலாறு: பார்ப்பான் கண்ணன்  ; வண்ணான்  சாத்தன்  என
வரும். கல்வியினாகிய காரணம் வந்தவழிக் கண்டுகொள்க.

சிறப்புப்பெயர் என்பன சிறப்புடைய மன்னராற் பெறுவன. (41) 

42.  ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பி னொன்றிட னிலவே. 

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோவெனின்,  ஒரு  பொருண்மேற்  பல
பெயர் வழுக்காத்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:14:52(இந்திய நேரம்)