தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3248


திறத்தானும்     -  உண்மைப்  பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்
திடத்துங்  கூறுபடுத்துக்  கூறிய  நூல்களாற் பெறும் பயனைக் கருதிய
ஒரு கூற்றின் கண்ணும்;

என்றது,  வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு
மென்றதாம்.    இதற்குத்   தலைவன்  கூற்றாக  உதாரணம்  வருவன
உளவேற் கொள்க.

புகழும்     மானமும் எடுத்து வற்புறுத்துலும் - போகம் வேண்டிப்
பொதுச்சொற்  பொறுத்தல்   (புறம்.8)  அரசியலன்றாதலிற்  றமக்கேற்ற
புகழும்   பெருமையும்    எடுத்துக்காட்டி   இதனாற்  பிரிது  மெனத்
தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்;

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

தூது  இடையிட்ட வகையினானும் - இருபெரு வேந்தர் பொருவது
குறித்துழி  இருவரையுஞ்   சந்து செய்வித்தற்பொருட்குக் கூட்டத்திற்கு
இடையிட்ட பிரிதற் பகுதிக்கண்ணும்:

ஒருவனுழை     ஒருவன் மாற்றங்கொண் டுரைத்தலிற் றூதாயிற்று.
‘வகை’யென்றார்,  வணிகரின்  அரசர்க்கும்  அரசரின் அந்தணர்க்குந்
தூது   சிறந்ததென்றற்கும்,   குறுநிலமன்னர்க்குப்  பெரும்  பான்மை
யென்றற்கும்,     வேந்தர்தம்மின்     இழிந்தாருழைத்   தூதுசேறல்
உரித்தன்றென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்- தனக்கு ஆக்கஞ் சிறந்த
நட்புடையோராகித்   தோன்றும்  நட்புடையோர்க்கு உற்றுழி  உதவச்
சேறற்கண்ணும்;

இதற்கு  ‘‘மலைமிசைக்  குலைஇய’’   (அகம்.84)  என்பதூஉம்
‘‘இருபெரு வேந்தர் மாறுகொள்’’(அகம்.174) என்பதூஉம் முன்னர்க்
காட்டினாம். (சூ.24.உரை) அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க.

மூன்றன் பகுதியும்-  அறத்தினாற்  பொருளாக்கி  அப்பொருளாற்
காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்;
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:55:32(இந்திய நேரம்)