தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • மின் திருக்கை

    Electric ray

    முனைவர் ச.பரிமளா
    பேராசிரியர் மற்றும் தலைவர்
    தொல்லறிவியல் துறை

    மின் திருக்கைகள், மின் திமிலைகள், புள்ளித் திமிலைகள் என்றழைக்கப்படும் இம்மீன்கள் இந்தியக் கடல்களிலும், மலாயா தீபகற்பம் முதல் சீனா வரையிலும் காணப்படுகின்றன. வலைகளில் அகப்படும் இம்மீன்களை அவை இறக்கும் வரை மீனவர்கள் தம் கைகளால் தொடுவதேயில்லை. மிகுந்த மின் ஆற்றலை உமிழும் இம்மீன்களின் மின் உறுப்புகள் ஒரு தற்காப்புச் சாதனமாகவும் வலுமிக்க எதிரிகளை விரட்டவும் பயன்படுகின்றன. உயிருள்ள மின் திருக்கை மீனை, கோட்ஸ் மற்றும் கோக்ஸின் ஆஸில்லோகிராப் கருவியுடன் இணைந்து அதன் மின் இயக்க ஆற்றல் அளந்தறியப்பட்ட போது இம்மீன்களின் மின் மூல அளவு (volt) ஏறத்தாழ 220 வோல்ட்ஸ் என்றும், ஒரு நிமிடம் கழித்து இந்த அளவு 60 ஆகக் குறைந்து விட்டது என்றும் கணக்கிட்டுள்ளனர். மிகப்பெரிய சுறா மீன்களையும் விலாங்கு மீன்களையும் தம் மின்னாற்றலால் எளிதில் பின் வாங்கச் செய்வதுடன், தன்னைத் தொடும் மனிதர்களையும் தாக்கிச் செயலிழக்கச் செய்து விடுகின்றன.

    இவை மணலில் புதையுண்டு வாழ்வதால் அங்கு வாழும் மெல்லுடலிகள், நண்டுகள், பிற ஓட்டுடலிகளை எளிதில் மின் தாக்குதலுக்கு உள்ளாக்கி இரையாக்கிக் கொள்கின்றன. இவை டார்பிடினிடே (Torpedinidae) குடும்பத்தைச் சார்ந்தவை. தமிழகப் பகுதியில் நார்சின் (Narcine மற்றும் நார்க் (Narke) என்னும் இரு பேரின வகையைச் சார்ந்த மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. முதல் வகை மீனை இரு மார்புத்துடுப்புகளைக் கொண்டும் இரண்டாம் வகையை ஒரே ஒரு மார்ப்புத் துடுப்பை கொண்டும் எளிதில் இனங்கண்டறியலாம்.

    இம்மீன்கள் பொதுவாக வட்ட வடிவமான உடலையும், வழவழப்பான மென்மையான, செதில்களற்ற தோலினையும், கடினமற்ற மெத்தென்ற ஜெல்லி போன்ற தசைப் பகுதியையும் கொண்டிருக்கின்றன. இம்மீன்களின் மிகச் சிறிய கண்கள் ஒரே பக்கத்தில் அருகருகே அமைந்துள்ளன. மற்ற திருக்கை மீன்களின் வால் பகுதி சாட்டையைப் போல நீண்டிருக்க, இம்மீனின் வால் பகுதி குட்டையாகவும், தடித்தும், உருண்டும் காணப்படுகின்றது. வாய்ப்பகுதி, உடலின் கீழ்ப்புறத்தில் குறுக்காக அமைந்திருக்கும் பற்கள் கூர்மையாகவும், வன்மையாகவும், நாற்கோண அடிப்பகுதிகளையும் பெற்றிருக்கின்றன.

    உடலின் மையக் கோட்டிற்கு இரு புறத்திலும், இரு பெரிய சிறுநீரக வடிவிலான மின் உறுப்புகள் அமைந்துள்ளன. இவ்வுறுப்பினுள் மின் தகடுகள் தூண்கள் போல வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன. இத்தட்டையான எலெக்ட்டோபிளேட்ஸ் என்னும் செல்தகடுகள் ஏறக்குறைய ஒரே முறையிலேயே அடுக்கப்பட்டு இருப்பதுடன் ஒவ்வொரு சிறப்பினத்திலும் இத்தகடுகள் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன. தலைப் பகுதியிலுள்ள செவுள் தசைகளே மாறுபாடு அடைந்து மின் உறுப்புகளாக உருமாறியிருக்கின்றன. இதன் தசை நார்களே மின் கலன்களாக மாறி மின்சாரத்தை உருவாக்குகின்றன. ஒரு தேன்கூடு போல காட்சியளிக்கும் அறுபக்க அறைகள் நிறைந்திருக்கும் இம்மின் உறுப்புகளால் மின் திருக்கைகளுக்கு ஊறு ஏதும் நேருவதில்லை. மற்ற மின் மீன்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க ஏதுவாக இதன் நரம்பு மண்டலம், மின் கடத்தாப் பொருள்களால் பாதுகாக்கப்பட்டு தசை அடுக்குகளாலும் கடினமான கொழுப்புத்திசு அடுக்குகளாலும் போர்த்தப்பட்டு இருப்பதால் இவை மின் தாக்குதல்களுக்கு ஆட்படுவதில்லை.

    மேலும், இம்மீன்கள் மிகக் குறைந்த அழுத்தமுடைய மின் ஆற்றலை உண்டாக்கி நீரினுள் செலுத்தி மற்ற மின் திருக்கை மீன்களுடன் தொடர்பு கொள்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இவை மின் மீன்களாக இருந்தாலும் உண்ணத் தகுந்த உணவு மீன்களாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:28:34(இந்திய நேரம்)