தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • காவிரி ஆறு

    தமிழ் நாட்டில் காவிரி ஆறு (Cauvery river) இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் மலைத் தொடரில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ.

    தலைக்காவிரி

    துணை ஆறுகள்

    திருமுக்கூடல் கபினி
     

    கபினி, எமாவதி, ஆரங்கி , இலட்மண தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி ஆகியவை கர்நாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல் ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. 'பொன்படு நெடுவரை'ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர். சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு166) இதனைத் தெளிவுபடுத்துகிறது

     

    கிருட்டிணராச சாகர் அணை

    அணைகள்

    மேட்டூர் அணை, கிரட்டிணராச சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.

     

     

     

    அருவிகள்

    சிவசமுத்திரம் அருவி
     
    ஒகேனக்கல் அருவி

    கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்

     

     

     

    தீவுகள்

    கர்நாடக மாநிலத்தில் சீரங்கப்பட்டணம் மற்றும் சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் சீரங்கம் தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் சீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது, இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்கு கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. சீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (சீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.

     

    அரங்கநாதன் கோயில்

    கர்நாடகத்தில் காவிரியின் போக்கு

    குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஆரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கம் மைசூருக்கு அருகில் உள்ளது. எமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி சீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி மற்றும் சொர்ணவதி ஆறுகள் காவிரியுடன் இணைந்து கொள்கின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது.இங்கு இரு பிரிவுகளாக பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (Gaganachukki)அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாகப் பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. ஆடு கூட இங்கு காவிரியை தாண்டிவிடலாம் என்பதால் இவ்விடத்திற்கு மேகேதாத்து (Mekedatu) என்று பெயர். இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர்.

    தமிழகத்தில் காவிரியின் போக்கு

    மிகக் குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பில்லிகுண்டுவை தாண்டி ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து. இங்கிருந்தே தமிழகக் காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி குளித்தலை நகரங்களைத் தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்குக் காவிரி இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒரு கிளைக்குக் கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி நீர்ப் படுகை பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே (சீரங்கம்) திருவரங்கம் தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாகப் பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி படுகை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி படுகை அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் & புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி படுகை சேர்ந்தவை.

    நீர் பங்கீடு

    நீர் பங்கீடு
     

    காவிரி படுகை புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகா & தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி நேரடியாகப் பாய்கிறது. நீர்ப் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோரக் காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணைஆறுகளின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளும் அமராவதி & பவானியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.

    கர்நாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ

    தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ

    கர்நாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 11:58:45(இந்திய நேரம்)