முகப்பு

5.1 குழந்தை இலக்கியங்கள்

குழந்தை இலக்கியங்கள்

குழந்தை இலக்கியம் என்றாலே குழந்தைகள் மட்டும் படிப்பதற்கு என்று எண்ணிவிடக் கூடாது. குழந்தைகள் பற்றி எழுவதே குழந்தை இலக்கியம் ஆகாது. குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றன படைப்பதே குழந்தை இலக்கியமாகும். இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று; பொறுமை, பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை. தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்க முடியாத குடும்பச் சூழலில் நடந்த மாற்றமும், அச்சுக் கலை உருவானதும் தான் சிறுவர் இலக்கியம் உருவாக முதன்மைக் காரணங்களாகும். தமிழில் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சியினைக் காணலாம்.

இந்திய மொழிகளில் தமிழ்மொழியில் மட்டும்தான் குழந்தை இலக்கியம் மிகப்பெரும் அளவில் வழங்கி வருகிறது. தமிழில் குழந்தை இலக்கியம் அல்லது சிறுவர் இலக்கியத்தை முதலில் படைத்தவர் ஔவையார். அவரின் “ஆத்திசூடி” குழந்தை இலக்கியத்துக்கு உரிய எளிமை, இனிமை, சிறிய தொடர்கள், சிறந்த கருத்துகள் ஆகியவற்றைக்கொண்டு விளங்குகின்றன. ஆத்திசூடியைத் தொடர்ந்து அவரின், கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, கல்வி ஒழுக்கம் போன்றவையும் குழந்தை இலக்கியத்தில் அடங்கும். இந்நூல்கள் எல்லாம் சிறார்களை நல்வழிப்படுத்துவன. இரண்டு சொற்களில் ஒரு வரியில், இரண்டு வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த பெருமையும், அகரவரிசைப்படுத்தி, குழந்தைகளின் மனத்தில் எளிதில் பதியும்படி பாடல்களைப் பாடிய பெருமை ஔவையார் ஒருவருக்கே உரியது.

அவரைத் தொடர்ந்து, நீதிநெறிகளை எளிமையாக்கி மனத்தில் பதிய வைக்கும் பாடல்களை அதிவீரராம பாண்டியனார் (வெற்றிவேற்கை), உலகநாதர் (உலகநீதி) ஆகியோர் தந்தனர். குழந்தைகள் தாமே விரும்பிப் படிக்கும்வண்ணம், கற்கும்வண்ணம், பாடும்வண்ணம் பாடல்கள் அமைந்துள்ளமை பெருஞ்சிறப்பாகும்.

20ஆம் நூற்றாண்டில் கவிமணியின் ‘மலரும் மாலையும்’, பாரதியின் ‘பாப்பா பாட்டு’, பாரதிதாசனின் ‘இளைஞர் இலக்கியம்’ ஆகியவை தொடர்ச்சியாக எழுந்தன. இவர்கள் குழந்தை இலக்கியம் என்ற நோக்கோடு பாடவில்லை எனினும் குழந்தை இலக்கியத்தைத் தொடங்கி வைத்தார்கள். இதற்குப் பின் கா.நமச்சிவாய முதலியார், மணிமங்கலம் திருநாவுக்கரசு, மயிலை சிவமுத்து, அ.கி.பரந்தாமனார், எம்.வி.வேணுகோபால் ஆகியோர் குழந்தை இலக்கியம் படைத்தனர். அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றிப் பலர் இன்று வரையில் தொண்டு செய்து வருகிறார்கள். ஆயினும் தமிழில் குழந்தை இலக்கியம் ஆழமும் அகலமும் சிறப்பாகப் பெற்றிட ‘மலரும் உள்ளம்’ தந்த அழ. வள்ளியப்பாவின் பங்கும் பணியும் போற்றத்தக்கது.

அழ. வள்ளியப்பா

முழு வீச்சாகக் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதியவராக அழ. வள்ளியப்பா திகழ்ந்தார். இவர்தம் 13ஆவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். ஏறக்குறைய 60 நூல்கள் படைத்துள்ளார். குழந்தை எழுத்தாளர் சங்கம் நிறுவியது இவரது பெருஞ்சாதனை. இவரது முதல் நூல் மலரும் உள்ளம். பாட்டிலே காந்தி, பாப்பாவுக்குப் பாட்டு, பெரியோர் வாழ்விலே, நல்ல நண்பர்கள் (கதை), சின்னஞ்சிறு வயதில், பிள்ளைப்பருவத்திலே என்பன அவர் இயற்றிய சில நூல்களாகும். மேலும் 1950இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவினார். சிறார் இலக்கியத்தில் இயங்குவதற்கான தளமாக இந்தச் சங்கம் தமிழ்ச் சிறார் உலகில் திகழ்ந்தது

வட்டமான தட்டு

தட்டு நிறைய லட்டு

லட்டு மொத்தம் எட்டு

எட்டில் பாதி விட்டு

எடுத்தான் மீதி கிட்டு

மீதம் உள்ள லட்டு

முழுதும் தங்கை பட்டு

போட்டாள் வாயில் பிட்டு

கிட்டு நான்கு லட்டு

பட்டு நான்கு லட்டு

மொத்தம் தீர்ந்தது எட்டு

மீதிக் காலித் தட்டு

(அழ.வள்ளியப்பா, மலரும் உள்ளம், ப.28)

அழ. வள்ளியப்பாவை முன்னோடியாகக் கொண்டு பலர் இன்றும் குழந்தை இலக்கியத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்திய மொழிகளில் தமிழ்மொழி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் தாய்மொழியாக உள்ளது. இந்த நாடுகளில் தமிழ்ப் படிப்பும் உள்ளது. தமிழ் இலக்கியப் படைப்பும் உள்ளது. கடந்த 60 ஆண்டுக்கும் மேலாகத் தமிழில்குழந்தை இலக்கியம்படைக்கும்முயற்சியில்இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்போன்ற வெளிநாடுகளிலுள்ள கவிஞர்களும்எழுத்தாளர்களும்ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் பணியினைக் காணலாம்.

இலங்கையில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மக்களும் தமிழ்மொழியும் வாழ்ந்து வரும் நாடு அது. அந்நாட்டில்௧. சோமசுந்தரப்புலவர், குழந்தைகளுக்கான ஆடிப்பிறப்பு, கத்தரி வெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்த கிளி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். தாடி அறுந்த வேடன், எலியும் சேவலும் உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

காவல் புரிகின்ற சேவகா! – நின்று

காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

வேலை புரிபவன் வேறுயார்! – உன்னைப்போல்

வேலை புரிபவன் வேறுயார்? (நவாலியூர் சோமசுந்தரப்புலவர்)

இலங்கையில் குழந்தைகள்விரும்பும்பல பாடல்களைத் தொகுத்து 1935ஆம்ஆண்டு “பிள்ளைப்பாட்டு” என்னும் பெயரில் வெளிவந்தது. கே.எஸ்.அருணந்தி என்னும்கல்வித்துறை அலுவலர்பதிப்பித்த இந்நூலில்12 கவிஞர்கள்பாடிய 74 பாடல்கள்உள்ளன. இலங்கையிலுள்ள மட்டக்களப்பிலிருந்து 1965ஆம்ஆண்டு மற்றொரு தொகுப்பு நூல்வந்தது. திமிலை மகாலிங்கம்பதிப்பித்த “கனியமுது” என்னும்இத்தொகுதியில்41 கவிஞர்களின்குழந்தைப்பாடல்கள்இடம்பெற்றுள்ளன.

சிறுவர்க்கான பாடல்கள் பலவற்றை அழகாகப் பாடித் தந்தவர்களில் வேந்தனார் என்பவர் குறிப்பிடத்தக்கவர். பள்ளிக்கூடச் சிறுவன் தன் தாயைப் போற்றுவதாகப் பாடியுள்ள பாட்டு ஒன்றில், பள்ளிக்கூடம் விட்டுச் சிறுவன் வீட்டுக்குத் திரும்பும்போது தாய் எதிரே பாதி வழி வந்து மகனைத் தூக்கித் தோள் ஏந்திச்சென்று மகிழ்வதை உருக்கமாகப் பாடியுள்ளார். எளிய சொற்களில் அந்த உருக்கம் இனிமையாக அமைந்து, சிறுவன் கூறும் மொழியாகவே உள்ளது:

பள்ளிக் கூடம்விட்ட நேரம்

பாதி வழிக்கு வந்து

துள்ளி ஓடும் என்னைத் தூக்கித்

தோளில் போடும் அம்மா.

சச்சிதானந்தம் முதலான சிலரும் நல்ல கற்பனைகளை அமைத்து நயமாகப் பாடல்கள் தந்துவருகின்றனர்.

சிங்கப்பூரில் குழந்தை இலக்கியம், செய்தித்தாள், வானொலி இவற்றின்மூலம்தான் வளர்ந்தது. சிங்கப்பூரில் குழந்தை இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் கவிஞர் ந. பழநிவேலு. இவரின் தாய், தந்தை என்னும் இரு குழந்தைப் பாடல்களும் 1937இல் தமிழ்முரசு என்னும் நாளிதழில்தான் வெளிவந்தன. மேலும் பல காலக்கட்டத்திலும் எழுதிய பாடல்களின் தொகுப்பைப் ‘பாப்பா பாடல்கள்’ என வெளியிட்டார். இவரை அடுத்து பாவலர் கா. பெருமாள் எழுபதுகளிலேயே குழந்தைகளின் பருவத்திற்கு ஏற்பப் பாடல்கள் இயற்றினார். இவரின் ‘சிங்கப்பூர்ப் பாடல்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பில் குழந்தைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மெ.இளமாறன் குழந்தைகளின் மகிழ்ச்சியை முன்னிறுத்தித் ‘திங்கள் – மாணவர் பாத் தொகுப்பு’, ’பனிக்கூழ்’ (1988) என்னும் இரு நூல்களைப் படங்களுடன் வெளியிட்டார். இவரது பனிக்கூழ் நூலில் இடம்பெற்ற,

பனிக்கூழ் பனிக்கூழ் பார் பார் பலவகைப்

பழம்பால் கொக்கோ சேர்ந்தது சுவை சுவை!

ஆங்கில மொழியில் ஐசுக்ரீம் என்பார்

அதைநாம் தமிழில் பனிக்கூழ் என்போம்!

என்னும் பாடலே நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. இவர்களைப் போன்று பரணன், முத்துமாணிக்கம், பெரி நீல பழநிவேலன், ஆ.பழனி போன்றோர் சிறுவர் பாடல்களை இயற்றியுள்ளனர்.

அடுத்தாகக் குழந்தைகளுக்கெனக் கதைகளைச் செய்தித்தாள்களில் படைத்தவர் “இராகி” ஒருவரே. இவர் இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர் கதைகளைத் தீட்டியுள்ளார். இவர் கதைகள் 2002இல் நூல் வடிவமாக வெளிவந்துள்ளன.

சிங்கப்பூரைப் போன்றே மலேசியாவிலும் குழந்தை இலக்கியங்கள் வளர்ச்சிபெற நாளிதழ்களும் வானொலியும் பெரும் பங்கு வகித்தன.

தக்க வழிநடப்போம் – ஒரு

தாயின் பிள்ளைகள் போல்!

ஒக்க உழைத்திடுவோம் – தம்பி

ஓர் குலமாயிருப்போம்.

கவிஞர் தேவதாசன் வழங்கிய இச்சிறுவர் பாடலே மலேசியச் சிறுவர் இலக்கியத்தின் முதல் பாடலாய்த் திகழ்கிறது. மலேசியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க குழந்தைக் கவிஞர் பாப்பா புலவர் முரசு நெடுமாறனார் ஆவார். மலேசியத் தமிழ் கவிதையிலக்கியத்தில் நிறைய குழந்தை இலக்கியங்களைப் படைத்தவரும் இவரே. மலேசியாவின் நூற்றாண்டுகாலக் கவிதைத் தொகுப்பினை “மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்னும் பெயரில் வெளியிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்களுள் முதன்மையானவர் மா. சி. அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட சோமசன்மா ஆவார். 'கவிச்சுடர்', 'மலேசியக் கவியரசு' என்ற பல சிறப்புப் பட்டங்களைக் கொண்டவர். இவரின் பாடல்கள் பெரும்பாலும் மொழிப்பற்றை ஊட்டுவனவாக அமைந்தன.

எ.கா :

தாய்மொழியில் பற்றுகொண்டு நடநட தம்பி

தாய்மொழியை மறக்க வேண்டா நட நட

மலேசியக் குழந்தை இலக்கிய எழுத்தாளர்களுள் பலர் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களாக இருந்தனர். சி. வேலு சுவாமி, கவிஞர் பரிதி, பொன்முடி என்ற கெ. சுப்பிரமணியன், மதிதாசன், மா. இராமகிருஷ்ணன், லாபீஸ் மாயவன், எம். பகதூர், தமிழ்க்குயில் கலியபெருமாள், கு. கிருஷ்ணன், ஜோசப் செல்வம், ந. சிவராமன், ஆ. சின்னத்தம்பி, சி. காவேரிநாதன், தங்கா தமிழ்ப்பாணன், கோவி. தியாகராசன் என்று படைப்பாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றியதனால் இவர்கள் குழந்தைகளின் உள்ளங்களைப் புரிந்துகொண்டு, பாடல்களைக் குழந்தைகளின் தேவைக்கும் தகுதிக்கும் ஏற்பப் பாடினர்.

மலேசியக் குழந்தை இலக்கிய உலகில் மு. கந்தன் என்னும் இயற்பெயரைக் கொண்ட கவிஞர் பரிதியின் 'முழுநிலா' என்ற மலேசியச் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூலே முதல் நூலாக விளங்குகிறது. முரசு. நெடுமாறன், சி. வேலுசுவாமி ஆகியோர் தங்கள் எழுத்துகளை நூல் வடிவில் வெளியிடக் கவிஞர் பரிதி முன்னோடியாவார். இருபது கவிதைகளைக் கொண்ட இந்நூலில் பறவைகள், இயற்கை, நன்னெறிகளைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

எ.கா :

நீலக்கடலில் ஊர்ந்து செல்லும்

ஜாலம் மிக்க ஓடம்போல்

ஞாலம் வியக்க நீந்திச் செல்லும்