முகப்பு

5.5 விருதாளர்களும் சிறந்த படைப்புகளும்

விருதாளர்களும் சிறந்த படைப்புகளும்

தமிழ் இலக்கியப் படைப்புகளுக்காக வழங்கப்படும் விருதுகளுள் இந்திய அரசால் வழங்கப்படும் விருது சாகித்திய அகாதெமி விருதாகும். இவ்விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

இவ்விருது கிடைக்கப்பெற்றவர்களுக்கு 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. இந்த விருதானது இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழில் முதன்முதலில் 1955ஆம் ஆண்டு தமிழ் இன்பம் என்னும் கட்டுரைத் தொகுப்புக்காக ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து பலர் பல படைப்புகளுக்கான இவ்விருதினைப் பெற்றுள்ளனர். இறுதியாக சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக எழுத்தாளர் அம்பை 2021ஆம் ஆண்டு இவ்விருதினைப் பெற்றார்.

பாஷா சம்மன் விருது இந்திய அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத கிளை மொழிகளான சிறுபான்மை மொழிகளில் எழுதும் நூல்களுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது இந்த விருது 24 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்படும் சிறந்த நூலுக்கு வழங்கப்படுகிறது.

பால புரஷ்கார் விருது விருது சாகித்திய அகாதெமியால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் முதலில் வெளிவந்த படைப்பின் இந்திய எழுத்தளாருக்கு வழங்கப்படுகிறது.

யுவ புரஷ்கார் விருது விருது 35 வயதுக்குட்பட்ட இளம் இந்திய எழுத்தளார்களின் சிறந்த நூலுக்கு வழங்கப்படுகிறது.

2022ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதுகளுள், ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருதும், ‘மல்லிகாவின் வீடு’ என்ற நூலுக்காக ஜி. மீனாட்சிக்கு பால புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்த விருதை பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகம் வழங்குகிறது. இந்த விருதானது இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெற்றவர்களுக்கு இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயம், பாராட்டுப் பத்திரம், பித்தளையால் ஆன கலைமகள் சிலை ஆகியவை வழங்கப்படுகிறது. தமிழில் முதன்முதலில் 1975இல் சித்திரப்பாவை என்னும் நாவலுக்காக அகிலன் இவ்விருதினைப் பெற்றார்.

செம்மொழித் தமிழ்த் திட்டத்தின் சார்பில் தகுதியுள்ள அறிஞர்களுக்குக் கீழ்க்காணும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களால் வழங்கப்படும்.

• தொல்காப்பியர் விருது

மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஒர் இந்திய அறிஞருக்கு வழங்கப்படுகிறது. 2005 – 2006ஆம் ஆண்டு முதலில் பேராசிரியர் அடிகளாசிரியருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

• குறள்பீடம் விருது

மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் இரு விருதுகள் வழங்கப்படுகின்றன. அயல்நாட்டவருக்கு ஒன்று, அயல்நாடு வாழ் இந்தியருக்கு ஒன்று.

• இளம் அறிஞருக்கான விருது

மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஒரு இலட்சம் ரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஐந்து விருதுகள் முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குட்பட்ட இந்திய இளம் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் கீழ்க்காணும் விருதுகளை வழங்கிவருகிறது. சிங்காரவேலர் விருது, மகாகவி பாரதியார் விருது, ஐயன் திருவள்ளுவர் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுப் புலவர் விருது, ஜி.யு.போப் விருது, அம்மா இலக்கிய விருது, மொழிபெயர்ப்பாளர் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, கம்பர் விருது, இளங்கோவடிகள் விருது, இலக்கிய விருது, மொழியியல் விருது ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி, அயலகம் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்காகவும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.