முகப்பு

5.2 சிறந்த புதுக்கவிதைகள்

சிறந்த புதுக்கவிதைகள்

சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது

சொற்புதிது சோதி மிக்க நவகவிதை.

எனப் பாரதியார் மரபுக் கவிதையில் விடுத்த அழைப்புதான், புதுக்கவிதை வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் அமைந்தது. இதனை, சாலை இளந்திரையன் உரை வீச்சு எனக் கூறுவார்.

எதுகை, மோனை வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதையாகும்.

மேனாட்டாரின் இலக்கியத் தாக்கத்தால் இருபதாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் சிறந்தெழுந்த வகைப்பாடாகும் இது. புதுக்கவிதை, பாரதியாரின் காட்சிகள் என்னும் வசனக் கவிதைத் தொகுப்பில் தொடங்குகிறது.

ஞாயிறே, இருளை என்ன செய்து விட்டாய்?

ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கி விட்டாயா?

. . . . . . . . . . . . . .

உணர்வே நீ வாழ்க

நீ ஒன்று நீ ஒளி

நீ ஒன்று நீ பல

நீ நட்பு, நீ பகை

உள்ளதும் இல்லாததும் நீ

அறிவதும் அறியாததும் நீ

நன்றும், தீதும் நீ

நீ அமுதம், நீ சுவை

நீ நன்று, நீ இன்பம்

பழைய சொற்களில் புதிய கற்பனைக் கோலங்களைப் பயன்படுத்தி அழகும் எளிமையும் உணர்ச்சியும் மீதூரப் பாரதியார் மொழியினைக் கையாளத் தொடங்கினார்.

பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை படைக்கலாயினர். புதுக்கவிதைகள், பத்திரிகைகளில் வெளியிடப் பெற்றுப் படிப்படியாகச் செல்வாக்குப் பெற்றன.

கி.பி.1930-1945 காலகட்டத்தில் மணிக்கொடிக் குழுவினர், பாரதியாரை அடுத்துப் புதுக்கவிதை இயற்றியவர்களாவர். அவர்களுள் கு.ப.இராசகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மணிக்கொடி இதழின் காலக்கட்டத்திலேயே ஜெயபாரதி, சூறாவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இதழ்களிலும் புதுக்கவிதைகள் பல இடம் பெற்றன.

கி.பி.1950-1970 ஆண்டுகளில் இரண்டாம் நிலை வளர்ச்சி அமைந்தது என்பார் ந.சுப்புரெட்டியார். எழுத்து, இலக்கிய வட்டம், நடை போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன. 1962ஆம் ஆண்டு புதுக்கவிதை வரலாற்றில் சிறப்புடையதாகும்.

எழுபதுகளில் தாமரை, கசடதபற, வானம்பாடி போன்ற இதழ்களில் புதுக்கவிதைகள் வெளியிடப் பெற்றுச் சிறப்புற்றன. புள்ளி, வெள்ளம், உதயம், கதம்பம், ரசிகன், நீ, அலைகள், ஐ என்னும் புதுக்கவிதைச் சிறு தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. புதுக்கவிதை நூல்கள் பலவும் எழுபதுகள் தொடங்கி வெளிவரலாயின. அவற்றுள் சில:

  1. ந.பிச்சமூர்த்தி – காட்டுவாத்து
  2. வேணுகோபாலன் - கோடை வயல்
  3. வைத்தீஸ்வரன் - உதய நிழல்
  4. நா.காமராசன் - கறுப்பு மலர்கள்
  5. இன்குலாப் - இன்குலாப் கவிதைகள்
  6. ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை
  7. கலாப்ரியா - தீர்த்த யாத்திரை
  8. சி.சு.செல்லப்பா – புதுக்குரல்கள்
  9. தமிழன்பன் - தோணி வருகிறது
  10. வல்லிக்கண்ணன் - அமர வேதனை
  11. ப.கங்கை கொண்டான் - கூட்டுப் புழுக்கள்
  12. சி.மணி - வரும் போகும்

தற்காலத்தில் புதுக்கவிதை ஹைக்கூ (துளிப்பா), சென்ரியு (நகைத் துளிப்பா), லிமரைக்கூ (இயைபுத் துளிப்பா) என்னும் வகைகளில் நாளும் தழைத்து வருகின்றன.

இலங்கைக் கவிஞர்களின் புதுக்கவிதைகள், சொற்செட்டும் வீரியமும் கொண்டு சொந்த வெளிப்பாட்டுடன் பொதுத்தன்மையும் கொண்டு விளங்குகின்றன என்கிறார் சா. கந்தசாமி. மஹாகவியில் இருந்து, முருகையன், நீலவண்ணன், ஜெயபாலன், சேரன், தர்மு சிவராமு, சிவரமணி என்று பலரும் புதுக்கவிதையில் சிறந்து விளங்குகின்றனர் தமிழகத்திலே பாரதிக்குப் பின்னர் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளை நிராகரிக்கும் பிச்சமூர்த்தி வழிவந்த புதுக்கவிஞர்களாகவே இருப்பதுபோல் ஈழத்தில் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளைப் பயன்படுத்திய மஹாகவி வழிவந்த நவீன கவிஞர்களேயாவர் என்பது முதன்மைக் கவனத்திற்கு உரியது.

ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே

வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை

என்று

வந்தான் ஒருவன்... (தேரும் திங்களும், மஹாகவி)

ககனப் பறவை

நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்

எறியும் பார்வை

கடலுள் வழியும்

அமிர்தத் தாரை

கடவுள் ஊன்றும்

செங்கோல். (மின்னல், தர்மு சிவராமு)

1970க்கு முன்பே ஈழத்துக் கவிதை உலகில் புதுக்கவிதை / வசன கவிதைப் போக்கு இருந்தது. இன்று தென்னிந்திய இலக்கியத்துடன் தன்னை முற்றிலும் இணைத்துக்கொண்ட புதுக்கவிதையாளர் தருமு சிவராமு ஈழத்தவரே. 60களில் மு. பொன்னம்பலம், கே.எசு. சிவகுமாரன், தா. இராமலிங்கம் முதலியோரும் புதுக்கவிதைகள் எழுதினர். தா. இராமலிங்கம் முதன்மை கவனத்துக்குரிய தனித்துவமான புதுக்கவிதை கவிஞர் ஆவார். இவரது புதுமெய்க்கவிதைகள், காணிக்கை ஆகிய இரு நல்ல புதுக்கவிதைத் தொகுதிகள் வெளிவந்தன. புதுக்கவிதை, ஈழத்திலும் மறுமலர்ச்சி, பாரதி, ஈழகேசரி, மல்லிகை, கவிதை போன்ற இதழ்களில் சிறப்புற வளர்ந்து வந்துள்ளமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

மு. கனகராசனின் ‘முட்கள்’, அன்பு சவகர்சாவின் ‘காவிகளும் ஓட்டுண்ணிகளும்’, திக்வல்லைக்காமலின் ‘எலிக்கூடு’, மேமன் கவியின் ‘யுகராகங்கள்’, சௌமினி, சிவம் ஆகியோரின் ‘கனவுப்பூக்கள்’, பேனா மனோகரனின் ‘சுமைகள்’, மூதூர் முகையதீனின் ‘முத்து’, லோகேந்திரலிங்கத்தின் ‘போலிகள்’, செந்தீரனின் ‘விடிவு’, பூநகர் மரியதாஸின் ‘அறுவடை’ முதலிய புதுக்கவிதைத் தொகுப்புகள் 1970க்குப் பின்னர் வெளிவந்துள்ளன. தொகுப்புகள் எதுவும் வெளியிடாதபோதிலும் சபா-ஜெயராசா, சாருமதி, ஜவாத் மரைக்கார் முதலிய அனேகர் இங்கு புதுக்கவிதை எழுதிவருகின்றனர். அன்பு ஜாவகர்ஷா தொகுத்த பொறிகள், சரவணையூர் சுகந்தன் தொகுத்த ‘சுவடுகள்’ ஆகிய புதுக்கவிதைத் தொகுப்புகளில் ஐம்பதுக்கும் அதிகமான கவிஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் புதுக்கவிதையின் முன்னோடியாகத் திகழ்பவர் க. இளங்கோவன். விழிச்சன்னல்களின் பின்னாலிருந்து என்னும் இவரின் நூல் 1979ஆம் ஆண்டு வெளியாகியது. மௌனவதம் (1984), TRANS CREATIONS (1988 ) முதலிய நூல்களையும் இவர் படைத்துள்ளார். TRANS CREATIONS என்னும் இவரது நூலில் இவரே ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளார். இவர் படிமக் கவிதைகளையும் இருண்மை மிக்க கவிதைகளையும் படைப்பதில் வல்லவர். நையாண்டி, எள்ளல் முதலிய சுவைகளைத் தம் கவிதை வழி தருபவர். சிங்கை அரசியல் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் துணிவாகச் சாடி இருப்பதை இவர் கவிதைகளில் காணலாம். ஆங்கில இலக்கியப் புலமையின் வெளிப்பாடும் பிறமொழிக் கலப்பும் இவரது கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.

புதுக்கவிதை ஆசிரியர்களுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றொருவர் க.து.மு.இக்பால். இவர் மரபுக் கவிதைகளோடு புதுக்கவிதைகளையும் படைத்து வருகிறார். தமது முகவரி என்னும் நூலில் மரபுக் கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் இடம்பெறச் செய்துள்ளார். இவரைப் பின்பற்றிப் பிச்சினிக்காடு இளங்கோ புதுக்கவிதைகளைப் பாடி வருகிறார். இளந்தலைமுறையைச் சார்ந்து இன்று புதுக் கவிதைகளைப் பலர் படைத்து வருகின்றனர். அமீருத்தீன், V.S.தாஜூதீன், முகமது அலி, அழகிய பாண்டியன், ராஜசேகர், ரவி, ஞானப் பிரகாசம் மொனிக்கா, சி.மீனாட்சி முதலியோரும் தங்கள் புதுக்கவிதைகளை நூல் வடிவம் பெறச் செய்துள்ளனர். லதா, ஷாகுல் ஹமீது, மலர்தமிழ் முதலியோரும் புதுக்கவிதைகள் படைத்து வருகின்றனர். ஞாயிறு தோறும் தமிழ்முரசில் பலரும் புதுக்கவிதைகள் எழுதி வருகின்றனர். வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பற்றிய செய்திகள் இதில் இடம்பெறுகின்றன.

மலேசியா விடுதலை அடைந்தபின் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1963) தோற்றம் கண்டது. இது புதுக்கவிதை இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு நல்கியது.

மலேசியத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டு இலக்கியப் போக்கினை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டுப் போக்கிற்கேற்ப வடிவு கொண்டு வளரும் ஒரு துறையாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் அறுபதுகளில் புதுக்கவிதை சுறுசுறுப்புடன் வளர ஆரம்பித்த போது, அந்தத் தாக்கம் மலேசிய நாட்டிலும் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் புதுக்கவிதை 30களில் தோன்றி, 15 ஆண்டுகள் நிலவி, அதன்பின் சுமார் 15 ஆண்டுகள் தொய்வு கண்டு, 60களுக்குப் பின்தான் தொடர்ந்து வளர ஆரம்பித்தது. தமிழக புதுக்கவிதையாளர்களான சி.சு. செல்லப்பா, சி.மணி, பசுவையா, தருமு சிவராம், தி.சோ.வேணுகோபாலன், வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் போன்றவர்களின் புதுக்கவிதைகள், மலேசிய நாட்டு கவிஞர்களுக்கு புதுக்கவிதையின் மேல் ஆர்வம் மேலோங்க காரணமாக அமைந்தன. புதுக்கவிதை எழுதி, மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்திற்குப் பிள்ளையார் சுழிபோட்ட பெருமைக்குரியவர் சி.கமலநாதன் அவர்கள். 1964இல் இவர் எழுதிய "கள்ளபார்டுகள்" எனும் புதுக்கவிதையே மலேசியாவின் முதல் புதுக்கவிதை எனப் போற்றப்படுகிறது. அக்கவிதையின் சில வரிகள்:

"மதியின்றிப் பிதற்றுவதும் - இங்கு

உள்ளவரை தின்று, ஊதிப் பெருப்ப தல்லால்

உருப்படியாய் செய்வதென்ன?"

1970களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஆதி குமணன் ஏற்றார். அவர் நடத்திய “வானம்பாடி” வார இதழ் மலேசியாவில் புதுக்கவிதை வளர களம் அமைத்துத் தந்தது. மலேசியாவில் நடைபெற்ற முதலாவது புதுக்கவிதைக் கருத்தரங்கம், டத்தோ சாமிவேலு பொன்விழா புதுக்கவிதைப் போட்டி, மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை புதுக்கவிதை அரங்கு போன்றவை நிகழ்ந்து கவிதையுலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்தின.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1. குழந்தை இலக்கியங்கள் பற்றி குறிப்பு வரைக.
  2. அழ.வள்ளியப்பா பற்றிக் கூறுக.
  3. இலங்கையில் குழந்தை இலக்கியம் தோன்றியதைக் குறித்து எழுதுக
  4. புதுக்கவிதை – சிறுக் குறிப்பு வரைக.
  5. சிங்கப்பூர் புதுக்கவிதைகள் பற்றிக் கூறுக.
  6. மலேசியப் புதுக்கவிதைகள் குறித்து எழுதுக.