5.3 மரபிலக்கியப் படைப்புகள்
மரபிலக்கியப் படைப்புகள்
ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மரபுக்கவிதை/ மரபு இலக்கிய வடிவம் இன்றும் நிலைபெற்று வருகின்றது. இலக்கியம் என்றாலே அது மரபுக்கவிதைதான் என்று விளங்கிய கால கட்டங்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் காண முடிகின்றது.
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்.
எனப் பாரதியார் பாடும் பாடல் மரபுக்கவிதையின் காலத் தொன்மைக்கும் பொருந்தக் கூடியதாகும். சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையில் தமிழிலக்கிய நெடும்பரப்பில் செங்கோல் செலுத்தி வந்த பெருமை, மரபுக்கவிதைக்கே உரியது. சங்க இலக்கியம், காப்பியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல்கள் என்னும் யாவும் மரபுக் கவிதைகளால் ஆனவையே ஆகும்.பாரதியார் காலந்தொட்டு வரும் மரபுக்கவிதை படைப்பாளர்களும் அவர்தம் படைப்புகளும் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவேயாகும்.
- பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில்பாட்டு
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - ஆசியசோதி, மருமக்கள்வழி மான்மியம்
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - தமிழன் இதயம், கவிதாஞ்சலி
- பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்பவிளக்கு, அழகின் சிரிப்பு
- கண்ணதாசன் - இயேசு காவியம், மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி
- சுத்தானந்த பாரதியார் - பாரதசக்தி மகாகாவியம், தமிழ்த் திருப்பாவை
- சுரதா - சிரிப்பின் நிழல், தேன்மழை, துறைமுகம்
- அழ.வள்ளியப்பா - மலரும் உள்ளம், பாட்டிலே காந்தி
- வாணிதாசன் - கொடி முல்லை
- வைரமுத்து - வைகறை மேகங்கள்
‘நற்றமிழ், தெளிதமிழ், வெல்லும் தூயதமிழ்’போன்ற இலக்கிய இதழ்களில் வல்லமை படைத்த மரபுக் கவிஞர்களின் படைப்புகளும், போட்டிக் கவிதைகள் பலவும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கவியரங்குகளில் மரபுக் கவிதைகள் சிறப்பிடம் பெறுகின்றன. ‘பாரதியார் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், சிவாஜிகணேசன் பிள்ளைத் தமிழ்’ என்பன போன்ற மரபுவழி இலக்கியங்கள் இன்றும் படைக்கப் பெற்று வருகின்றன.
மருதூர் அரங்கராசனின் ‘யாப்பறிந்து பாப்புனைய’ என்னும் நூல் இன்றைய நிலையில் மரபுக்கவிதை படைப்பவர்க்கு ஏற்ற வகையில் இயற்றப்பெற்றுள்ளது.
ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் தொடக்கக் கால கவிதை எழுத்தாளர்களிடம் காணமுடிகின்றது. அ.குமாரசுவாமிப் புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி.சி.கணேசையர், அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர், மாதகல் மயில்வாகனப் புலவர், கல்லடி வேலுப்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் கவிதைகள் இத்தகைய மரபு நிலைப்பட்டன.
மரபுக் கவிஞராக இனங்காணப்பட்ட சுவாமி.விபுலாநந்தர், பாரதியின் தாக்கத்தினால் உந்தப்பட்டு கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தவர். ‘கங்கையில் விடுத்த ஓலை, நீரரமகளிர், ஈசன் உவந்தளிக்கும் இன்மலர்’ போன்ற மரபுக் கவிதைகளினை எழுதிப் புகழடைந்தவர். இவருடைய வரிசையில் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் ‘பகவத்கீதை வெண்பா’வும் குறிப்பிடத்தக்கது. ‘வெண்பாவிற் புலவர்மணி’ எனப் பிற்காலத்தில் பலரும் அழைக்க இம்மரபுக் கவிதையே காரணமாக இருந்ததெனலாம்.
சிங்கப்பூர் குடியரசான பின்பு கவிஞர்கள் தங்கள் படைப்புகளைத் தமிழ் முரசு, வானொலி ஆகியவற்றின் வழியாகத் தந்தனர். தற்போதும் தந்து வருகின்றனர் என்பதனை முன்பே கண்டோம். இதுவரை 75க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
சிங்கப்பூர் மரபுக் கவிதை ஆசிரியர்களுள் முன்னோடிக் கவியாக விளங்குபவர் ந. பழநிவேல். மனித நேயத்தோடு கவித்துவத்தையும் குழைத்துத் தருபவர் சிங்கை முகிலன். சந்தக் கவிதைகளை வழங்குபவர் ஐ.உலகநாதன். இயற்கையைப் பாடுவதில் சிறப்புறுபவர் க.து.மு.இக்பால். இறைவனை உருகிப் பாடி இறை உணர்வை ஏற்படுத்துபவர் முருகதாசன். சமுதாயச் சிந்தனைகள் தளும்ப, வண்ண வண்ணக் கவிதைகளை வழங்கியவர்கள் பரணன், இளமாறன், திருவேங்கடம் முதலியோர் ஆவர். செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிதை அமைப்பவர் தங்கராசன். வெண்பாச் சிற்பி என்னும் பெயர்க்கு ஏற்ப வெண்பாக்களை அள்ளி வழங்குபவர் இக்குவனம். இவர்களைப் போன்று கவிஞர்கள் பலரும் கவிதைகளைப் படைத்துச் சிங்கை இலக்கியத்திற்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.
மலேசியத் தமிழ் இலக்கியம் என்றாலே அது சிங்கப்பூரின் தமிழ் இலக்கியப்படைப்புகளும் கலந்த நிலையிலேயே காணப்படுகின்றது. ஏனெனில் இவ்விரு நாடுகளும் ஒரே காலனித்துவத்தின் கீழ் ஒன்றாக நீண்டகாலம் இருந்துள்ளன. 1966க்குப் பின்னரே தனித்தனி நாடுகளாகச் செயல்படத் தொடங்கின. ஆகவே 1965 வரை இவ்விரு நாடுகளும் ஒரே இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. அவ்வகையில் 1886இல் சிங்கப்பூரைச் சேர்ந்த நாராயணசாமி நாயகன் என்னும் இசைப்புலவரால் பாடப்பெற்ற "இருந்தும் பயமென்ன' எனும் இசைப்பாடலே மலேசிய தமிழ்க் கவிதை இலக்கியத்தில் முதல் தமிழ்க்கவிதையாகும் என்ற ஒரு குறிப்பு தென்படுகிறது. முதல் கவிதைத் தொகுப்பான 'ஆறுமுகப் பதிகம்" நாகபட்டினம் மரு. வேங்கடாசலம்பிள்ளை என்பவரால் 1887இல் இயற்றப்பட்டதாக குறிக்கப்பெறுகிறது. தொடக்க காலங்களின் படைப்புக்களில் பக்தியும், சமயமும், பாடுபொருளாகி, அந்தாதி, பதிகம், மாலை போன்ற மரபு இலக்கிய வகையே கோலோச்சின.
இவற்றில் மலேசிய மண்ணின் மணம் முழுமையாகக் கமழவில்லை. மலேசியத் தமிழர்களின் வாழ்விடமான தோட்டப்புறமும், தோட்டப்புறச் சமுதாயமும், அவர்களின் வாழ்வியலும், வாழ்க்கை முறையும் பிரதிபலிக்கப்படவில்லை என்றாலும் எப்போதோ, எங்கோ ஒன்றிரண்டாக பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் சற்றே தோட்டப்புறத் துயரத்தையும் எட்டிப் பார்த்திருக்கின்றன. 6.1.1932இல் தமிழ் நேசனில் வெளிவந்த கவிதை ஒன்று அன்றைய மலாயாவின் தோட்டப்புறத் தொழிலாளியின் பரிதாபக் குரலாக ஒலிக்கிறது. 1930களில் மலாயாவின் பொருளாதாரம் படுவீழ்ச்சி கண்டு இந்தியத் தொழிலாளர்கள் தமது நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். அந்நிலையில் பால்மரம் சீவும் தொழிலாளி தோட்டத்தினையும் பால்மரத்தையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் சிந்துவதாக அக்கவிதையை தி.ரா.சுப்பிரமணிய ஐயர் இயற்றியுள்ளார்.
போய்வாரேன் பால்மரமே! போய்வாரேன் பால்மரமே!
பவுனுக்கும் பவுன்விலையாய் பாலுவித்த காலம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே பாலு வெட்டும் நிறுத்தலாச்சே யார்
செய்த மோசம் பாராய் எவரீட்ட சாபம் கூறாய்! (போய்)
உன்னை நம்பி வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்களுண்டு
அத்தனை பேர்களுமே அழுதுகொண்டு போறாரே
உயிரளவும் மறக்கமாட்டேன் ஊருக்குப் போய்வாரேன்! (போய்)
இந்நாட்டு மணம் கமழும் இலக்கியம் 1946க்குப் பின்னரே உருவாயிற்று. மணத்தையும் வளத்தையும் அழகையும் செழுமையையும் இலக்கியமாய்ப் படைத்தவர் இந்நாட்டிற் பிறந்து இங்கேயே கல்விகற்ற எழுத்தாளர்களேயாவார். மலேசியக் கவிதை உலகில் மறுமலர்ச்சி சிந்தனைகளைத் தோற்றுவித்த முதல் நூல், மலேசியக் கவிஞர்களுள் மூத்த முதுபெரும் கவிஞர் ந. பழநிவேலு இயற்றிய 'கவிதை மலர்கள்" (1947) ஆகும். இதற்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துரை வழங்கினார். அந்நூலில் "சித்தப் போக்கு" என்னும் தலைப்பில் வரும் பாடல், அக்காலப் பாடுபொருளின் பட்டியலாகவே விளங்குகின்றது.
மலேசியா விடுதலைக்குப் பின் மலேசியக் கவிதைகளும் வீறுகொண்டெழுந்து பன்முக வளர்ச்சி கண்டன. இதற்குப் பின்னரே மலேசியத் தமிழர்கள், தங்களுக்கே உரித்தான, தனித்த இலக்கியத்தைப் படைக்கத் தொடங்கினர். பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளையும் இயற்கை, காதல், இனவுணர்வு, மொழியுணர்வு, நாட்டுப்பற்று, போன்றனவற்றையும் பாடுபொருளாகப் புனைந்து கவிதைகள் பெருகத் தொடங்கின.
1966இல் வெளிவந்த ஐ. உலகநாதனின் "சந்தனக் கிண்ணம்", சிங்கை முகிலனின் "இதய ஓசை" (1960) போன்ற கவிதைத் தொகுப்புகள், புதிய இலட்சியப் பிடிப்புள்ள சமுதாயத்தைக் காணவிரும்பும் துடிப்பினை வெளிப்படுத்தி, உணர்ச்சிக் கொந்தளிப்பாய் மலர்ந்தன.
வலிமைக்கு விஞ்சிய உழைப்படா-மக்கள்
வயிற்றுக்கும் போதாத உணவடா!
எளியோர்க்கு நல்வாழ்வு ஏதடா? அவர்
இருக்கும் நிலை தன்னைப் பாரடா. (இதய ஓசை)
ஊரெல்லாம் விளக்கெரிய உறங்காமல் விழித்திருந்து
தன் வீட்டை இருள்மூழ்க விட்டவன்- இவன்
பாரெல்லாம் பிறருக்காக பாடுபட்ட குற்றத்தால்
பசிக்கயிற்றால் தூக்கிலிடப்பட்டவன். (சந்தனக் கிண்ணம்)
மலேசியாவின் இயற்கைச் சூழலையும் தன் "சந்தனக் கிண்ணத்தில்" வைக்கிறார் கவிஞர். அதனைத் தொடர்ந்தே அடுத்தடுத்த காலக்கட்டங்களில் காரைக்கிழாரின் கணைகள்(1977), தீ.சி.பொன்னுசாமியின் தீப்பொறி(1978) என புயலடிக்கத் தொடங்கின. இனவுணர்வும் மொழியுணர்வும் சமுதாயத்தைக் கடுமையாகத் தாக்கும் கணைகளாக நின்றன. அதே தோரணையில் கா.பெருமாள், சி.அன்பானந்தம், கரு.திருவரசு, வெ.பழநி போன்று இன்னும் பல கவிஞர்கள் மலேசியத் தமிழ்க் கவிதை இலக்கியத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர். இவர்கள் சில குறுங்காவியங்களையும் படைத்து வெற்றி கண்டுள்ளனர்.