முகப்பு

5.6 தொகுப்புரை

தொகுப்புரை

உணர்வுகளின் புலப்பாடே இலக்கியம் ஆனமையால், இந்த உணர்வுகளின் வேறுபாடுகள் இலக்கிய வகைகளையும் வேறுபடுத்தித் தந்துள்ளன. ஒவ்வொரு புலப்பாட்டிற்கும் உரியதொரு தனி வடிவம் இருப்பது போல, இலக்கிய வெளிப்பாட்டிலும் தனித்தனிப் போக்குகள் ஏற்பட்டுள்ளன என்பதனைக் கண்டோம். உலக அரங்கில் தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் தம் முத்திரையைப் பதித்துக்கொண்டு வருகின்றன.

அவ்வகையில் தமிழில் குழந்தைப்பாடல்கள், கவிதை, மரபிலக்கியங்கள், சிறுகதைகள் அச்சு இயந்திர வருகைக்குப் பின் இதழ்களின் வளர்ச்சியால் பெரும் முன்னேற்றம் கண்டன. தமிழ் தான் வாழும் இடங்களில் எல்லாம் தன் ஆட்சியைச் செலுத்திவருகிறது. இதனை இலங்கை, சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் உள்ள இலக்கிய வளர்ச்சிகளின்மூலம் காணமுடிகிறது. படைப்பு என்பது மனிதனின் உணர்வு சார்ந்தது. அவ்வுணர்வு தான் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்பாக மொழியின் மூலமாக பல படைப்புகளாக வெளிவருகின்றன என்பதனைக் கண்டோம்.

ஆனால், ஆக்கக் கருவியான இலக்கியம் ஒரு கலை எனக் கருதப்படினும் அதைப் படைப்பது அரியதொரு கைவினைப் பொருள் செய்தலைப் போன்றதாகும். படைப்பது மட்டுமன்றி, இலக்கியத்தைப் பயில்வதும், பயிற்று விப்பதும் கலை உணர்வோடு, கைவினைத் திறத்தோடு கைக்கொள்ளுதற்கு உரிய களங்கள் ஆகும். ஆசிரியர்கள் இதனை உணர்ந்து மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும். படைப்புக்கலை கைவரப்பெற வேண்டுமெனில் மாணவர்கள் சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளைப் படித்தல் இன்றியமையாததாகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1. மரபுக் கவிதை – குறிப்பு வரைக.
  2. இலங்கையில் மரபிலக்கியங்கள் குறித்து எழுதுக.
  3. தமிழில் சிறுகதைகள் குறித்து எழுதுக.
  4. சாகித்திய அகாதெமி விருது – சிறுக் குறிப்பு வரைக.
  5. சாகித்திய அகாதெமி வழங்கும் பிற விருதுகளைக் கூறுக.
  6. குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் விருதுகள் யாவை?