5.4 சிறந்த சிறுகதைகள்
சிறந்த சிறுகதைகள்
மக்களின் கதை கேட்கும் ஆர்வம் தொல்பழங் காலந்தொட்டே வேரூன்றியுள்ளது. அதன் பல்வேறு வெளிப்பாடுகளாகப் பலவகை இலக்கிய வகைகள் தோன்றியுள்ளன. அவ்வகையில் அச்சு இயந்திரங்களின் வருகையால் சிறுகதை என்ற புதிய இலக்கிய வகை உருப்பெற்றது. இன்றைய நிலையில் இலக்கிய உலகில் சிறுகதைகளுக்கென்றே ஒரு தனித்த இடம் உள்ளது. கல்வி அறிவின் வளர்ச்சியும் இதழ்களின் வளர்ச்சியும் மக்களிடையே சிறுகதை படிக்கும் ஆர்வத்தை வளர்த்துள்ளன.
தமிழில் மேலைநாட்டு மரபை ஒட்டிய நவீனச் சிறுகதை முயற்சிகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவல் படைத்து வந்த அ.மாதவையா 1910ஆம் ஆண்டில் இந்து ஆங்கில நாளிதழில் வாரம் ஒரு கதையாக 27 சிறுகதைகளை எழுதினார். பின்பு இக்கதைகள் 1912இல் Kusika’s Short Storiesஎன்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன. பின்பு அது தமிழில் குசிகர் குட்டிக் கதைகள் என்று வெளியிட்டார். சமூகச் சீர்திருத்த நோக்குடன் இக்கதைகளைப் படைத்ததாக மாதவையா அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். நவதந்திரக் கதைகள், வேணுமுதலி சரித்திரம், மன்மத ராணி, பூலோக ரம்பை, ஆவணி அவிட்டம், ஸ்வர்ண குமாரி, ஆறில் ஒரு பங்கு, காந்தாமணி, ரயில்வே ஸ்தானம் என்று பல கதைகளை எழுதியுள்ளார். பாரதியார் கதைகள் சம்பவங்களைப் பேசுகின்றனவே தவிர, இவற்றில் சிறுகதைகளுக்குரிய உணர்ச்சி இல்லை என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.
வ.வே.சு. ஐயரின், குளத்தங்கரை அரசமரம் என்ற கதையே தமிழின் முதல் சிறுகதையாகப் பல விமர்சகர்களால் சுட்டப்படுகின்றது. வ.வே.சு.அய்யர் இக்கதையில் பாத்திர ஒருமை, நிகழ்ச்சி ஒருமை, உணர்வு ஒருமை என்ற மூன்றையும் சிறப்பாக அமைத்துள்ளதாக இலக்கிய விமர்சகர்கள் கூறுகின்றனர். வரதட்சணைக் கொடுமை இக்கதையின் கருப்பொருளாகும். ருக்மணி என்ற பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. வரதட்சணைப் பிரச்சினை காரணமாக, சாந்தி முகூர்த்தம் தடைபட்டு, கணவனுக்கு வேறு திருமணம் நிச்சயமாகியது. இதனால் ருக்மணி தற்கொலை செய்து கொள்கிறாள். தன் தவற்றை உணர்ந்த கணவன் துறவு பூணுகிறான். ஒரு மரம் இக்கதையைச் சொன்னதாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
அவரைத் தொடர்ந்து நாராயணத் துரைக்கண்ணன் முதல் புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, மௌனி, கல்கி, ராஜாஜி, கே.எஸ்.வேங்கட ரமணி, சிட்டி, சங்கரராம், லா.ச.ரா. போன்றவர்களும் சிறுகதை எழுதியுள்ளனர். புதுமைப்பித்தன் சாகாவரம் பெற்ற சிறுகதைகளைப் படைத்து, தமிழ் இலக்கியக் கருவூலத்திற்கு வளம் சேர்த்துள்ளார். ந.பிச்சமூர்த்தியின் கதைகளிலும் சிறுகதையின் வடிவமும் உத்தியும் சிறப்பாக அமைந்துள்ளன. மனித மன ஆழத்தை அவர் தம் கதைகளில் சிறப்பாக வடித்துள்ளார். தி.ஜானகிராமன், தமிழ் எழுத்துலகில் நாவல், சிறுகதை என்ற இரண்டு இலக்கிய வகைகளிலும் முன்வரிசையில் நிற்பவர். கு.ப.ரா.வைப் போன்று ஆண், பெண் உறவைக் கதைப் பொருளாக்கிக் கொண்டவர் ஆவார். கதைமாந்தர் படைப்பிலும், மொழி ஆளுகையிலும் வெற்றி பெற்ற இவர் மறதிக்கு, செய்தி, முள்முடி, சிலிர்ப்பு போன்ற பல கதைகளை எழுதியுள்ளார்.
திராவிட இயக்கச் செல்வாக்குடன் பகுத்தறிவுப் பாதையில் கதை படைத்தவர்களுள் அண்ணா, மு.கருணாநிதி, ஆசைத்தம்பி, தென்னரசு, டி,கே,சீனிவாசன், தில்லை வில்லாளன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் உள்ளடக்கம், உத்தி, நடை ஆகியவற்றை முழுமையாகக் கையாண்டு கதை படைத்தவர்களுள் அண்ணா முதன்மையானவர். சாதி சமய மறுப்பு, வறுமை, கலப்பு மணம், பலதார மணம், விதவை மணம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டன இவருடைய கதைகள். செவ்வாழை இவருடைய மிகச் சிறந்த கதையாகும். ஏழ்மையின் கொடுமையை இக்கதையில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். வடிவ உத்தியுடன் பகுத்தறிவுப் பாதையில் கதை எழுதியவர் மு.கருணாநிதி. குப்பைத்தொட்டி, கண்டதும் காதல் ஒழிக, நளாயினி, பிரேத விசாரணை, தொத்துக் கிளி, வாழ முடியாதவர்கள் போன்ற இவருடைய சிறுதைகள் குறிப்பிடத்தக்கன. இக்காலக் கட்டத்தில் எழுதிய ஜெயகாந்தன் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
எழுபதுகளில் சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன், வண்ணநிலவன், வண்ணதாசன், சுஜாதா, நவபாரதி, சுப்பிரமணிய ராஜு, பாலகுமாரன் போன்றவர்களும் பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், கிருஷ்ணன் நம்பி, ஜெயமோகன், ஜி.நாகராஜன் போன்றவர்களும் சிறுகதைப் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகத் தடம் பதித்துள்ளனர்.
இருபத்தோராம் நூற்றாண்டு தொடர்பு யுகம், கணினி யுகம் என்றெல்லாம் சுட்டப்படுகிறது. இந்நூற்றாண்டில், இணைய இதழ்கள் என்ற புதுவகை இதழ்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் உலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஒருங்கே இடம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த காஞ்சனா தாமோதரன், கீதா பென்னட், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் தொடர்ந்து இவ்விதழ்களில் எழுதி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் சங்கமிக்க இணைய இதழ்கள் வழி அமைத்தால் அது தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை மற்றோர் உயரத்திற்கு உறுதியாக இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் ‘மணிக்கொடி’ வாயிலாகச் சிறுகதைகள் வளர்ந்த காலத்தில் இலங்கையில் சிறுகதை வளர்ச்சிக்கு உதவியவர்கள் சிவபாதசுந்தரம், வைத்தியலிங்கம் முதலானவர்கள். நகுலன் எழுதிய சிறுகதைகள் ‘கன்னிப்பெண்’, ‘இப்படி எத்தனை நாள்’ என்ற தொகுதிகளாக அமைந்தன. ‘கொட்டும் பனி’ என்ற சிறுகதைத் தொகுதியை அளித்தவர் கதிர்காமநாதன். ‘தண்ணீரும் கண்ணீரும்’, ‘பாதுகை’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைத் தந்தவர் டொமினிக் ஜீவா. முற்போக்கான நோக்கங்கள் அவருடைய கதைகளில் பொதிந்து கிடக்கும்.
சிவஞானசுந்தரம் ‘இலங்கையர்கோன்’ என்ற இலக்கியப் புனைபெயர் கொண்டு பல சிறுகதைகளைப் படைத்துள்ளார். ‘வெள்ளிப் பாதரசம்’ என்ற தொகுதி சிறந்த கதைகள் கொண்டது. சிறுகதை, நாடகம், நாவல் ஆகிய துறைகளில் பலவற்றைப் படைத்துத் தந்தவர் கனக. செந்திநாதன். அவர் திறனாய்வுத் (criticism) துறையிலும் விளக்கங்கள் தந்து வருபவர். அவருடைய ‘வெண்சங்கு’ என்ற சிறுகதைத் தொகுதி பெயர்பெற்றது. ‘நெடுந்தூரம்’ என்ற நாவலும் பல சிறுகதைகளும் இயற்றியவர் டானியல்.
எஸ். பொன்னுத்துரை இருநூறு சிறுகதைகளுக்கு எழுதியுள்ளவர்; ‘வீ’ முதலான சிறுகதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன. சில புதிய முறைகளைக் கையாண்டு சிறுகதைகள் எழுதி வெற்றிபெற்றவர் அவர். ‘அணி’ என்ற சிறுகதை, முன்னே ஒருவனை நிறுத்தி அவனுடன் பேசுவது போலவே முழுவதும் அமைந்துள்ளது. இலங்கையில் வெவ்வேறு வட்டாரங்களில் பேசப்படும் வெவ்வேறு வகையான பேச்சுமொழிகளில் சில கதைகளை எழுதியுள்ளார். ‘விலை’ முதலான சில கதைகளில் நனவோடைமுறையை (stream of consciousness) கையாண்டுள்ளார். கதைமாந்தரின் பேச்சு, பழக்கம், மனநிலை, நெறி தவறிய பாலுணர்ச்சி முதலியவற்றைச் சிறிதும் மாற்றாமல், ஆசிரியராகிய தாம் சிறிதும் அவற்றில் தலையிடாமல், அவற்றை அவ்வாறே கதைகளில் தரும் ஆர்வம் உடையவர் அவர். இங்கும் அங்கும் சிறு கோடுகளை இழுத்து, அவற்றாலேயே பொருள்பொதிந்த ஓவியங்களைத் தீட்டிக் காட்டவல்லவர் போல், சிறு சிறு வாக்கியங்களாலேயே கதைமாந்தர்களின் பண்புகள் விளங்குமாறு செய்து விடுகின்றார். கவர்ச்சியும் புதுமையும் விறுவிறுப்பும் உள்ள பல சிறுகதைகளை எழுதி அவற்றைப் பல தொகுப்பாக்கித் தந்தவர் செ. கணேசலிங்கம்.
மலேசிய சிறுகதைகள் வெறும் கதைகளாக இல்லாமல், சமுதாயத்தைப் பிரிதிபலிப்பவையாக விளங்கின. எம்.எஸ்.வேலு, ஜி.ஜான்சன், நா.கோவிந்தசாமி, மா.இளங்கண்ணன், பெரி.நீல.பழநிவேலன், எஸ்.முகம்மது ரஃபீக் ஆகியோரும் சிறுகதை படைக்கலாயினர். சிங்கப்பூர் சிறுகதைக்கு முன்னோடியாக விளங்கியவர்களுள் ந. பழனிவேலும் ஒருவர். சமுதாயச் சிக்கல்களையும் சீர்திருத்தக் கருத்துகளையும் மையமாக வைத்துக் கதை படைத்து வரும் ஆற்றல் மிக்க படைப்பாளர் இவர்.
1924இல் கோலாலம்பூரில் தமிழ் நேசன் என்ற நாளிதழும், 1931இல் சிங்கப்பூரில் தமிழ் முரசு என்ற நாளிதழும் தோற்றம் பெற்றன. இவ்விரு நாளிதழ்களும் மலேசியா, சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு முக்கியக் களங்களாகத் திகழ்கின்றன. இந்நாடுகளில் வெளியாகும் பாரத மித்திரன், திராவிட கேசரி என்ற இதழ்கள் மணிக்கொடி, விகடன், கலைமகள் ஆகிய இதழ்களிலிருந்து நல்ல சிறுகதைகளை எடுத்து வெளியிட்டுள்ளன. சிங்கப்பூர் சிறுகதை வளர்ச்சிக்கு நாளிதழ்கள் பெரும்பங்காற்றிவருகின்றன. அவற்றில் வெளியாகும் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுப் பல நூல்களாக வெளிவருகின்றன.
மலேசிய எழுத்தாளர்களின் பல சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. ‘நினைவின் நிழல்’ என்பது செ. குணசேகரர் படைத்த சிறு கதைகளின் தொகுப்பு ஆகும். மலேசியத் தமிழர் வாழ்வின் சில பகுதிகள் அவற்றில் சொல்லோவியம் ஆக்கப்பட்டுள்ளன. ‘அன்பு அன்னை’ என்பது மு. துரைசாமியின் சிறுகதைத் தொகுப்பு ஆகும். அதன் நடை சுவையானது.
‘அன்பு இதயம்’ என்பது மலேசியச் சிறுகதைகளின் நல்ல தொகுப்பு. துரை, குமார், இராமையா, அன்பானந்தன், சாப்பசான், வீரப்பன், நாகுமணாளன், நெடுமாறன், கிருஷ்ணசாமி, வேலுசாமி, கமலநாதன், இளம்வழுதி, வடிவேல், திருவேங்கடம், மகேசுவரி ஆகிய புதிய எழுத்தாளர் பலருடைய சிறுகதைகள் அதில் உள்ளன. அவர்களுள் பெரும்பாலோர் ரப்பர்த் தோட்டங்களை அடுத்துள்ள பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். மலேசியப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அவர்கள் தங்கள் அனுபவத்தைக் குழைத்துக் கதைகள் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. ‘குரங்கு ஆண்டுப் பலன்’ என்ற கதையில் சீனர்களின் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் இடம் பெறுகின்றன. மற்றக் கதைகளில் மலாய் மொழித் தொடர்களும் வருகின்றன. ‘கழுவாய்’ என்ற ஒரு கதையில் ஒருவன் குடும்ப வாழ்க்கையை அன்பாக நடத்தி அமைதி பெற அறியாத காமுகனாக இருக்கிறான்; பல பெண்களை நாடி அலைகிறான்; கடைசியில் ஒரு நாள் தன் பெண்கள் மூவரையே கண்டு அவர்களின் அழகில் மயங்குகிறான்; அவன் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டுக் கற்சிலை போல் அமர்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ரப்பர்த் தோட்டத்தில் ஒற்றுமையாய் வாழத் தெரியாத தமிழர் படும் இடர் ஒரு கதையில் சொல்லோவியம் ஆக்கப்படுகிறது. இவ்வாறு மலேசியாவின் சிறுகதை இலக்கியம் மெல்ல மெல்ல, தெளிவாக, வளரத் தொடங்கி, தமிழுக்குத் தொண்டாற்றி வருகிறது.