முகப்பு

5.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

‘கற்க கசடறக் கற்பவை’ என வாழ்க்கைக் கல்வி கூறும் வள்ளுவர், ‘நிற்க அதற்குத் தக’, செவிச்செல்வம் என விளக்குவதும் இலக்கியக் கல்விக்கே மிகவும் பொருந்தும். மனித இனம் பேசத் தொடங்கிய நாளிலிருந்தே எல்லையற்ற தொடர்புகளுக்கு வழிகோலும் அமைப்புகளான மொழிகள் பரவத் தொடங்கின. மொழிகள் ஒவ்வொரு மனிதருக்கும் சமுதாயத்திற்கும் சொந்தமான எண்ணத் தொகுப்புகள் ஆகும். இவ்வெண்ணத் தொகுப்புகள் கலைவடிவம் பெற்றபோது ‘இலக்கியங்கள்’ என்று அழைக்கப்பட்டன.

இலக்கியம் மனித உணர்வின் புலப்பாடு; அவன் படைத்த, படைக்கும் கலைகளில் எல்லாம் சிறந்து நிற்கும் சாதனை; தன்னை உருவாக்கிய நல்லுணர்வுகளை மேலும் விழுமிய நலங்களாக்கித் தரும் விந்தைமிகு கருவி; ஒரு மொழியில் தோன்றிய சிந்தனையை உலகச் சிந்தனையாக்கும் பொது உடைமை; மனித குலப் பண்பாட்டைப் பேணிக் காத்துவரும் களஞ்சியம்; கற்பனைச் சிறகுகளை விரிக்கப் புதுப்புது வானங்களைத் தேடும் முடிவற்ற பயணம்.

படைப்பாளியின் அனுபவத்திற்கும் உணர்ச்சிக்கும் ஏற்ப, சமுதாய விழைவிற்கும் காலத்தேவைக்கும் தக்க இலக்கியங்களும் பலப்பலவாய் அமைந்து வந்துள்ளன. அச்சுக் கலை பரவிய பின்னர், இலக்கிய ஆக்கங்கள், உலகச் சிந்தனை அரங்கில் மிகப்பெரிய தாக்கங்களை உருவாக்கித் தந்துள்ளன.

தமிழ் இலக்கியம் என்பது தற்போது தமிழ்நாட்டில் மட்டும் படைக்கப்படுவதோ படிக்கப்படுவதோ அல்ல. பல்வேறு நாடுகளில் கலாச்சார, பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் சொந்த ஈடுபாடு, ஆர்வம், அக்கறையின் அடிப்படையில் எழுதுகிறார்கள். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் சிலர் தற்போது எழுத்தாளர்களாக வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்துள்ளனர்.

உலகளாவிய அளவில் தமிழ்ப் படைப்பாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் அவர்கள் பெற்ற விருதுகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் இவ்வியல் அமைகிறது.