தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    இந்திய இலக்கிய வரலாற்றில் இதிகாசங்கள் என்று போற்றப்படும் காவியங்கள் இரண்டே. அவை இராமாயணமும் மகாபாரதமும் ஆகும். (இதிகாசம் = மிகப் பழமையான பெரிய கதை). திருமாலின் அவதாரங்கள் (பிறப்புகள்) பத்து. அவற்றுள் இராம அவதாரம் இராமாயணத்திலும், கிருஷ்ணன் அல்லது கண்ணன் அவதாரம் மகாபாரதத்திலும் இடம் பெற்று உள்ளன. மகாபாரதத்தில் கண்ணன் முதன்மை பெற்று இருந்தாலும் பஞ்ச பாண்டவர்களே தலைமைப் பாத்திரங்களாக விளங்குகின்றனர். சந்திர குலத்தைச் சேர்ந்தவன் துஷ்யந்த மன்னன். இவனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் பரதன். இந்தப் பரதனது வம்சத்தைப் பாடுவதால் பாரதம் என்று இந்நூல் அழைக்கப்பட்டது. பரதனது வம்சத்தைச் சேர்ந்தவர்களே பாண்டவர்களும் கௌரவர்களும் ஆவர். இவர்கள் வாழ்க்கையையும், இவர்கள் தமக்குள்ளே நடத்திய போரினையும் மகாபாரதம் விரிவாக விவரித்துள்ளது.

    மகாபாரதம்

    பரத வம்சத்தினரைப் போரில் வல்லவர்கள் என்று ரிக் வேதம் கூறுகிறது. பரதனைக் குறித்த செய்திகளைச் சில பிராம்மணங்கள் கூறியுள்ளன. (ரிக்வேதம், பிராம்மணம் - வடமொழி நூல்கள்.) இவர்களுடைய நாடு குரு நாடு என்று பெயர் பெற்றது. இந்த நாட்டைப் பற்றிய குறிப்பை யசுர் வேதம் வழங்கி உள்ளது. பரத வம்சத்தவரான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஏற்பட்ட பாகப்பிரிவினை இறுதியில் போரில் முடிந்தது. பாண்டவர்கள் சூதாட்டத்தால் தம் நாடு, மக்கள், சொத்து, மனைவி அனைத்தையும் கௌரவர்களிடம் இழந்தனர். இதனால் அவர்கள் வனவாசம் செல்ல நேரிட்டது. வனவாசம் முடிந்த பின்னர்க் கௌரவர்கள் பாண்டவர் நாட்டைத் திருப்பித்தர மறுத்தனர். சூதாட்டத்தில் வைத்து இழந்த பாண்டவர் மனைவி, அரசவையில் கௌரவர்களால் துகில் உரியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாள். இதனால் இரு தரப்பார்க்கும் பாரதப் போர் மூண்டது. பாரதக் கதையின் முதன்மையான சூத்திரதாரியாகக் (வாழ்க்கை நிகழ்வுகளை ஆட்டி வைப்பவனாக) கண்ணன் காணப் பெறுகிறான். இறுதியில் கௌரவர் குலமே அழிகிறது. பாண்டவர் மட்டுமே உயிரோடு இருக்க, ஏனைய அனைவரும் போரில் மடிகின்றனர். இந்த நிகழ்ச்சிகளே மகாபாரதமாக உருவெடுத்தன. கால ஓட்டத்தில் இம் மகாபாரதத்தில் ஏராளமான கிளைக் கதைகளும், தத்துவங்களும் சேர்ந்தன. இச்சேர்க்கையில் ஒன்றே புகழ் பெற்ற பகவத் கீதை என்பது. கண்ணன் போர்க்களத்தில் நின்று பாண்டவருள் ஒருவனான அருச்சுனனுக்கு உபதேசம் செய்தவையே கீதையாகும். மக்கள் இடையே வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்த இந்தக் கதை வியாசர் என்னும் முனிவரால் வடமொழியில் தொகுத்து வைக்கப்பெற்றது.

    வில்லி பாரதம்

    மகாபாரதத்தின் செல்வாக்கு இந்தியப் பகுதி முழுவதும் பரவியுள்ளது. இந்திய மொழிகளில் ஏராளமான மகாபாரதங்கள் பலரால் பாடப்பெற்றுள்ளன. தமிழ்நாட்டிலும் சங்க காலத்திலேயே மகாபாரதம் செல்வாக்குச் செலுத்தி இருந்தது. என்றாலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இடைக்காலத்தில் வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதமே சிறந்த பாரதமாகப் போற்றப்பெற்றுள்ளது. நண்பர்களே! இந்தப் பாடப் பகுதியில் தமிழ்நாட்டில் உள்ள மகாபாரதச் செல்வாக்கினையும் வில்லி பாரதம் பற்றிய செய்திகளையும் அறிய இருக்கிறோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:27:09(இந்திய நேரம்)