தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-வில்லி பாரதக் காப்பிய நலன்

  • 5.6 வில்லி பாரதக் காப்பிய நலன்

    வியாசர் பதினெட்டுப் பருவங்களில் மகா பாரதத்தைக் கூறினார். வில்லிபுத்தூரார் பத்துப் பருவங்களில் அதனைக் கூறினார். கதையைச் சுருக்கிக் கூறினும் காப்பியச் சுவையில் மேம்பட்டு நிற்குமாறு மகாபாரதத்தைப் படைத்துள்ளார். உவமையைக் கையாளுவதில் வில்லி பாரதம் புகழ் பெற்றுள்ளது. இதே போல், கற்பனை விரிந்து படர்ந்து சுவை மிக்கதாக அமைந்துள்ளது. வருணனைகளும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி ஒரு சிறிது இங்குக் காண்போம்.

    5.6.1 பாயிரச் சிறப்பு

    பாயிரம் என்பது ஒரு நூலுக்கு அமையும் முன்னுரை அல்லது முகவுரை போன்றது. இது சிறப்புப் பாயிரம் என்றும், தற்சிறப்புப் பாயிரம் என்றும் இரு வகைப்படும். நூலைச் சிறப்பித்துப் பிறர் பாடுவதைச் சிறப்புப் பாயிரம் என்பர். கடவுள் வாழ்த்து, காப்பியப் பாடுபொருள் முதலியன அமைய நூலாசிரியரே பாடுவது தற்சிறப்புப் பாயிரம் ஆகும். வில்லிபுத்தூரார் நூலுக்கு அவர் மகன் வரந்தருவார் என்பவர் சிறப்புப் பாயிரம் பாடி உள்ளார்.

    தமிழாகிய அன்னை

    சிறப்புப் பாயிரத்தின் முதற்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்து உள்ளது. பாண்டியன் அவையோடும் அகத்தியரின் பொதிய மலையோடும் தமிழ்ச் சங்கத்தோடும் தமிழ் அன்னை கொண்ட தொடர்பு கவிநயத்துடன் பாடப்பெற்றுள்ளது. அப்பாடல் இதோ:

    பொருப்பிலே பிறந்து தென்னன்
         புகழிலே கிடந்து சங்கத்து
    இருப்பிலே இருந்து வைகை
         ஏட்டிலே தவழ்ந்த பேதை
    நெருப்பிலே நின்று கற்றோர்
         நினைவிலே நடந்துஓ ரேன
    மருப்பிலே பயின்ற பாவை
         மருங்கிலே வளரு கின்றாள்

    (வில்லி பாரதம். சிறப்புப் பாயிரம். 1)

    (பொருப்பு = மலை - பொதிய மலை; தென்னன் = பாண்டியன்; வைகை = பாண்டிய நாட்டு ஆறு; பேதை = குழந்தை; ஏன மருப்பிலே பயின்ற பாவை = பூமி)

    பிற்காலத் தமிழ் நூல்கள் தமிழை அன்னையாகவும், குழந்தையாகவும் வருணிப்பதில் தலைசிறந்துள்ளன. தமிழின் தொன்மையைக் கூறுவது என்றால் மூன்று சங்கங்கள் பற்றிய செய்தியையும் இணைத்துக் கூற வேண்டும். சங்கங்களை உருவாக்கி ஆதரித்த பாண்டிய மன்னர்களையும் உடன் பாராட்டிக் கூற வேண்டும். இச்செய்திகளை எல்லாம் வில்லிபுத்தூரார் அழகாகப் பாடியுள்ளார்.

    இப்பாடலின் பொருளை அறிவோமா?

    தமிழ்த்தாயின் பெருமை

    அகத்திய முனிவன் வாழ்ந்த பொதிய மலையில் பிறந்தவள் தமிழ்த்தாய் ஆவாள். தென்னவன் ஆகிய பாண்டியன் புகழைக் கூறுவது தமிழ்த்தாயின் புகழைக் கூறுவதற்கு ஒப்பானது. பாண்டியன் புகழும் தமிழ்த்தாயின் புகழும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. பாண்டியர் நிறுவிய தலை, இடை, கடைச் சங்கங்களில் இருந்து நிலை பெற்று வளர்ந்தவள் தமிழ்த்தாய். புலவர்கள் கவிதைகளை எழுதி ஆற்றிலும் நெருப்பிலும் இட்டுத் தம் கவிதைகளின் இறவாத் தன்மையை (அமரத் தன்மையை) வெளிப்படுத்துவர். அவ்வாறு தமிழ்க் கவிதைகளை எழுதி வைகை ஆற்றில் விட்ட போது தமிழன்னை அந்த ஆற்றில் எதிர் நீந்தித் தவழ்ந்து வந்தனள். நெருப்பிலே வேகாது மூழ்கி எழுந்து வந்தனள். இக்குறிப்புகள் திருஞான சம்பந்தர் வாழ்க்கையில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளைச் சுட்டுவதாக இருக்கலாம். திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்த போது பூமியைத் தன் கொம்பிலே ஏந்தி நின்றார். அத்தகு பூமா தேவியின் பக்கத்திலேயே தமிழ் அன்னை வளர்ந்து வருகிறாள். இதுவே இப்பாடலின் கருத்து ஆகும்.

    விநாயகர் வணக்கம்

    தற்சிறப்புப் பாயிரத்தின் முதற்பாடல் விநாயகர் வணக்கமாக அமைந்துள்ளது. இப்பாடல் தோன்றியதற்கான கதை ஒன்றும் உண்டு.

    தனயனின் உதவி

    வில்லிபுத்தூரார்க்கும் அவர் மகனுக்கும் மனவேறுபாடு தோன்றியதால் மகன் அவரை விட்டுப் பிரிந்தான். அதன் பின்னர் வில்லிபுத்தூரார் வரபதி ஆட்கொண்டான் விருப்பப்படி தமிழில் பாரதம் பாடி முடித்தார். பாரதத்தை அரங்கேற்றம் செய்யும் நேரமும் வந்தது. "ஆக்குமா றயனாம்" என்னும் பாடலை முதற்பாடலாகக் கொண்டு வில்லிபுத்தூரார் நூலை அரங்கேற்றம் செய்தார். உடனே புலவர்கள் “வியாசர் ஐந்தாம் வேதமாக மகா பாரதத்தைச் சொல்ல விநாயகப் பெருமான் தம் கொம்பே எழுத்தாணியாகக் கொண்டு மேரு மலையையே ஏடாகக் கொண்டு எழுதிய பெருமை பாரதத்திற்கு உண்டு. விநாயகர் வணக்கம் சொல்லாத இந்தப் பாரதத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று கூறினர். இதனைக் கேட்டு வில்லிபுத்தூரார் திகைத்து நின்றார். அப்போது கூட்டத்தில் மறைந்து இருந்த அவர் மகன் வரந்தருவார் எழுந்தார். “எம் தந்தை விநாயக வணக்கம் செய்தது உண்டு. ஆனால் கண்ணன் வரலாறு நிறைந்த பாரதக் கதையில் விநாயகருக்கு வணக்கம் வெளிப்படையாகக் கூற வேண்டுவதில்லை. அப்பாடலை யாம் அறிவோம்” என்று கூறி அப்பாடலைப் பாடினார். அந்தப் பாடல் இதோ:

    நீடாழி உலகத்து மறைநாலொடு ஐந்தென்று நிலைநிற்கவே
    வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தம்சொன்னநாள்
    ஏடாக மாமேரு வெற்பாக அங்கூர் எழுத்தாணிதன்
    கோடாக எழுதும் பிரானைப் பணிந்துஅன்பு கூர்வாமரோ


    (வில்லி. தற்சிறப்புப் பாயிரம். 1)

    (ஆழி = கடல்; மறை = வேதம்; மறைநால் = இருக்கு, யசுர், சாம, அதர்வணம்: வாடாத = கெடாத; முனிராசன் = வியாசர்; ஏடாக = ஓலையாக; மேரு = மலை; கோடு = கொம்பு)

    விநாயகர் எழுதிய வேதம்

    பாடலின் பொருள் அறிவோமா?

    கடல் சூழ்ந்த உலகத்தில் நான்கு வேதங்களோடு சேர்த்து ஐந்தாம் வேதமாக வியாச முனிவன் பாரதத்தைப் படைத்தனன். அவ்வாறு வியாச முனிவன் பாரதத்தைச் சொல்ல விநாயகப் பெருமான் தன் கொம்பை எழுத்தாணியாகக் கொண்டு மேரு மலையாகிய ஏட்டில் எழுதினான். அவ்வாறு எழுதிய விநாயகப் பெருமானை அன்பு மேலிட வணங்குவோம் என்பது பாடலின் பொருள் ஆகும். இப்பாடலைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர். வில்லிபுத்தூராரும் பாரதத்தை அரங்கேற்றினார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இருந்த வேறுபாடும் மறைந்தது.

    5.6.2 வருணனை

    காப்பிய வருணனைகளில் சிறப்பிடம் பெறக் கூடியது இரு சுடர்த் தோற்றம் பற்றியது ஆகும். இரு சுடர் என்பது நிலவையும் ஞாயிற்றையும் குறிக்கும். இரவு, பகல் என்று காலத்தை வருணிக்கும் புலவர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சமூக நடைமுறையையும் அதில் இணைத்து விடுவார். சமூக நடைமுறை மட்டும் அல்லாது, மனித மனப்பண்புகளும் நடத்தைகளும் கூட அதில் இடம் பெறும்.

    இயற்கை நிகழ்வுகள்

    ஞாயிறு எழுவதும் மறைவதும், நிலவு எழுவதும் மறைவதும் இயற்கை நிகழ்வுகள். இந்த நிகழ்வுகளுக்குப் புலவர் கற்பனையாகச் சில காரணங்களைப் படைத்துக் காட்டுகிறார். இதோ பாடல்:

    பஞ்சவர் வாழ்வுறு பதம்பொ றாமையின்
    வஞ்சகம் இயற்றுவான் மனங்கொல் என்னவே
    மிஞ்சிய குளிர்மதி மேற்பொ றாதுஇகல்
    செஞ்சுட ரவன்குண திசையின் தோன்றினான்

    (வில்லி. சபா பருவம் - 2 : 123)

    (பஞ்சவர் = ஐவர் / பாண்டவர்; பதம் = பதவி; மிஞ்சிய = மிகுந்த; மதி = நிலவு; செஞ்சுடரவன் = ஞாயிறு; குணதிசை = கிழக்குத்திசை)

    ஞாயிறு தோற்றம்

    காலையில் கிழக்குத் திசையில் ஞாயிறு தோன்றுகிறது. மிகுந்த குளிர் உடைய நிலவின் மேல் பொறாமை கொண்டு தோன்றுவது போல ஞாயிறு உதயமாகிறாம். இது எவ்வாறு இருக்கிறது? பாண்டவர்களின் நல்ல வாழ்க்கையைக் கண்டு, வஞ்சகமாக அவர்களை அழிக்கத் திட்டமிடும் துரியோதனன் மனம் போல, ஞாயிறு திங்களை வீழ்த்தத் தோன்றுகிறதாம். இவ்வாறு புலவர் ஞாயிற்றின் தோற்றத்தை வருணித்துள்ளார். பாரதக் கதை சந்திர குலத்து மன்னர்களின் கதையாகும். எனவே, இதில் உட்பொருள் பொதிந்த ஒரு நயமும் உள்ளது அல்லவா?

    கதிரவன் மறைவு

    இதேபோல் கதிரவன் மறைவைச் சுட்டும்போதும் சில நிகழ்ச்சிகளை இணைத்துக் கூறியுள்ளார் புலவர். ஞாயிறு படை வீரர்களின் களைப்பைப் போக்குவதற்காக மறைகிறதாம் (வில்லி. சபா. 2 : 124). ஞாயிறு மறைவது எதனால் என்றால் திரௌபதிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு ஆற்றாது அதனால் மறைகிறதாம் (வில்லி. விராட. 3 : 46). ஞாயிறு மறைவு வீடுமன் மறைவை அவர் தந்தைக்குக் கூறுவதற்காகச் சென்றது போல உள்ளதாம் (வில்லி. வீட்டும. 10 : 46). இவ்வாறு வில்லிபுத்தூரார் ஞாயிறு மறைவது, தோன்றுவதை வைத்தே பல சுவையான செய்திகளைக் கூறியுள்ளதை அறிய முடிகின்றது.

    5.6.3 கற்பனைகள்

    காவியங்கள் கற்பனைப் படைப்பாலும் உவமைகளின் நலத்தாலும் சிறப்பு அடைகின்றன. உவமைகளைக் கையாளுவதில் புலவனின் கற்பனை தெறித்து நிற்கும். வில்லிபுத்தூரார் பாரதக் காப்பியம் முழுவதும் தெளிந்த உவமைகளைக் கற்பனை ஆற்றலோடு படைத்துள்ளார். சான்றுக்குச் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்.

    ஈண்டுநீ வரினும் எங்கள் எழில்உடை எழிலி வண்ணன்
    பாண்டவர் தங்கட்கு அல்லால் படைத்துணை ஆக மாட்டான்
    மீண்டுபோகு என்றுஎன்று அந்த வியன்மதில் குடுமி தோறும்
    காண்தகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற

    (வில்லி. உத்தியோக பருவம்- 26)

    (எழில் = அழகு; எழிலி = மேகம்; எழிலி வண்ணன் = கண்ணன்; குடுமி = உச்சி; காண்தகு = காண்பதற்கு இனிய; பதாகை = கொடி)

    பாண்டவர்க்கும் கௌரவர்களுக்கும் போர் தொடங்க இருக்கிறது. இருவருமே படை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கண்ணனின் துணையைப் பெறுவதற்காகத் தருமர் துவாரகைக்குச் செல்கிறார். துரியோதனனும் துவாரகைக்குச் செல்கிறான். துரியோதனின் வருகையைப் புலவர் கற்பனையாக வருணித்துள்ளார். விண்ணை முட்டும் மதில்களின் மேல் கொடிகள் காற்றில் அசைந்து அசைந்து பறக்கின்றன. அவ்வாறு பறப்பது ‘நீ இங்கு வராதே’ என்று கூறிக் கைகளால் தடுப்பது போல உள்ளதாம். “துரியோதனனே! நீ இங்கே வரினும் எங்கள் கண்ணன் உனக்குத் துணை ஆக மாட்டான். பாண்டவர்க்கே துணை ஆவான். நீ மீண்டும் திரும்பிப் போவாயாக”, என்று மதில் உச்சியில் உள்ள கொடிகள் துரியோதனனைத் தடுத்துத் திரும்பிச் செல் என்று கூறுகின்றனவாம். இதற்குத் தற்குறிப்பேற்ற அணி என்று பெயர்.

    நடுநடுங்கின

    வீமனுக்கும் சராசந்தனுக்கும் மல்யுத்தம் (ஆயுதங்களின் துணை இல்லாமல் செய்யும் போர்) நடைபெறுகிறது. இருவருமே மல்யுத்தத்தில் தலைசிறந்தவர்கள். அவர்களின் கடுமையான போரைக் கண்டு உலகமே நடுநடுங்குகிறதாம். புலவரின் கற்பனையை, வருணனையைப் படியுங்கள்:

    பூதலம் நடுங்க எழுகிரி நடுங்க
    போதகத் தொடுதிசை நடுங்க
    மீதலம் நடுங்கக் கண்டகண் டவர்தம்
    மெய்களும் மெய்யுற நடுங்கப்
    பாதலம் நடுங்க இருவர்மா மனமும்
    பறையறைந்து அயர்வுடன் நடுங்கச்
    சாதல்அங்கு ஒழிந்த இடர்எலாம் உழந்து
    தங்களில் தனித்தனி தளர்ந்தார்

    (வில்லி. சபா பருவம். 1 : 24)

    (பூதலம் = பூமி; எழுகிரி = ஏழுமலைகள்; போதகம் = யானை / திசைகளைத் தாங்கிக் காக்கும் எட்டு யானைகள்; மீதலம் = விண்ணுலகம்; பாதலம் = கீழ் உலகம்; அயர்வு = தளர்ச்சி)

    வீமனுக்கும் சராசந்தனுக்கும் நடைபெற்ற போரினைக் கண்டு பூமியானது நடுங்கியது; ஏழுமலைகளும் நடுங்கின; திக்கு யானைகள் தாங்கி இருக்கும் எட்டுத் திசைகளும் நடுநடுங்கின; விண்ணுலகம் நடுங்கியது; அப்போரைக் கண்டவர்களின் உடல்கள் மெய்யாகவே நடுங்கின; பாதாள உலகமும் நடுங்கியது. இவ்வாறு போரிட்ட இருவரும் மனம் தளர்ந்து சோர்ந்து மயங்கி வீழ்ந்தனர் என்று வில்லிபுத்தூரார் போரை வருணித்துள்ளார். இவ்வாறு வருணனை செய்துள்ளதைப் பல இடங்களில் படித்து மகிழ முடியும்.

    வீடுமன் இல்லாத சேனை

    வில்லிபுத்தூரார், தொடர்ச்சியாகப் பல உவமைகளைக் கூறிப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இதில் புலவரது கற்பனை சிறந்து தோன்றும். பாரதப் போர் நடந்து கொண்டு உள்ளது. பத்தாம் நாள் போர். அர்ச்சுனன் அம்புகளால் வீடுமர் உடலைத் துளைத்தெடுக்கிறான். உடல் முழுவதும் அம்புகள் பாய்ந்திருக்க வீடுமர் தேரிலிருந்து சாய்கிறார். போரில் மிகச் சிறந்த வீரரை இழந்து துரியோதனன் சேனை அவலம் அடைகிறது. புலவர் இக்காட்சியைப் பாடுகிறார்.

    மதியிலா விசும்பும் செவ்வி மணமிலா மலரும் தெண்ணீர்
    நதியிலா நாடும் தக்க நரம்பிலா நாத யாழும்
    நிதியிலா வாழ்வும் மிக்க நினைவிலா நெஞ்சும் வேத
    விதியிலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை

    (வில்லி. வீட்டும பருவம் - 1 : 5)

    (மதி = நிலவு; விசும்பு = வானம்; செவ்வி = செம்மை; தெண்ணீர் = தெளிந்தநீர்; மகம் = வேள்வி)

    வீடுமன் இல்லாத சேனை எப்படி உள்ளது என்பதை வில்லிபுத்தூரார் பாடுகிறார். நிலவு இல்லாத வானம் போல் உள்ளதாம்; மணம் இல்லாத மலர் போல் உள்ளதாம்; நதியில்லாத நாடு போல் உள்ளதாம்; நரம்பு கட்டாத யாழ் போன்று உள்ளதாம்; செல்வம் இல்லாத வாழ்க்கை போல் உள்ளதாம்; நிலையற்ற தன்மை கொண்ட நெஞ்சு போன்று உள்ளதாம்; வேத நெறிப்படி செய்யாத வேள்வி போன்று உள்ளதாம்.

    இது போன்று பல்வேறு பாடல்களைப் புலவர் கற்பனை நயம் தோன்றப் படைத்துள்ளதைப் படித்து மகிழ முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:27:25(இந்திய நேரம்)