Primary tabs
-
5.4. பாரதம் பாடிய செய்தி
வில்லிபுத்தூரார் பாரதம் பாட நேர்ந்தது பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. அவற்றுள் சில வருமாறு:
5.4.1. இலக்கிய வரலாறு கூறும் செய்தி
வில்லிபுத்தூரார்க்கும் அவர் தம்பிக்கும் சொத்துப் பாகம் பற்றி வழக்கு உண்டாயிற்று. இருவருமே அரசனிடம் மதிப்புப் பெற்றிருந்த புலவர்கள். தம்பி அரசனிடம் சென்று முறையிட்டார். அரசன் வில்லிபுத்தூரார் புலமையை மதிப்பவன். எனவே அவரைக் கண்டிக்க மனம் ஒப்பவில்லை. ஆனால் இருவரின் வழக்கையும் தீர்க்க வேண்டும். இதற்கு அரசன் ஒரு வழியைக் கண்டறிந்தான். இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் “மகாபாரதத்தைத் தமிழில் பாடித் தந்தால் உங்கள் வழக்கைத் தீர்க்கிறேன்” என்று சொன்னான். அவ்வாறே இருவரும் உடன்பட்டனர். வில்லிபுத்தூரார் பாரதம் பாடத் தொடங்கினார். இப்பெருங்காப்பியத்தைப் பாடி முடிக்கும் தறுவாயில் இவருக்கும் ஞானம் பிறந்தது. தாயபாகச் சண்டையினால்தானே (தாயபாகம் = உடன்பிறந்தாருள் பாகப்பிரிவினை) பாரதப்போர் ஏற்பட்டது; பெரிய அழிவும் நேர்ந்தது என்பதை உணர்ந்தார். உடனே தம்பியை அழைத்து அவருக்குரிய பாகத்தை அளித்து விட்டார். பாரதத்தின் முற்பகுதியை இவர் பாடப் பிற்பகுதியை இவர் தம்பி பாடி முடித்ததாக இலக்கிய வரலாறு கூறுகிறது.
5.4.2. புலவர் புராணம் கூறும் செய்தி
புலவர் புராணம் என்னும் நூல் இக்கதையையே வேறு விதமாகக் கூறுகிறது. அது வருமாறு:
ஆண்டான் பிள்ளை என்ற அரசன் தமிழிலே பாரதம் வேண்டும் என்று ஆவல் கொண்டான். பாரதம் பாடத் தக்கவர் வில்லிபுத்தூராரே என்றும் கண்டு கொண்டான். ஆனால் திருமால் அடியவர் ஆன வில்லி, பாரதம் பாடுவதற்கு இசைய மாட்டார் எனவும் எண்ணினான். இதற்கிடையில் வில்லியும் அவர் தம்பியும் பாண்டிய மன்னனைப் பார்க்கும் பொருட்டு மதுரை சென்றனர். அச்சமயத்தில் மன்னன் ஒரு பார்ப்பனக் கிழவியை வில்லியின் இல்லத்திற்கு அனுப்பினான். கிழவி மூலம் வில்லி மனைவியிடமும் அவர் தம்பி மனைவியிடமும் பூசலை ஏற்படுத்தினான். சகோதரர்கள் மதுரையில் இருந்து திரும்பினர். குடும்பத்தில் பிரச்சனை பெரிதாகிச் சொத்துப் பாகப் பிரிவினை வரை சென்றது. வழக்கு மன்னனிடமும் வந்தது. அரசன் எதிர்பார்த்தபடியே பாரதம் பாடி முடித்தால் வழக்கை முடிப்பதாகக் கூறினான். வில்லியும் பாரதம் பாடி முடித்தார்.
காதறுக்கும் ஆணை
சிறப்பான முறையில் பாரதம் பாடியதைக் கண்ட மன்னன் புலவருக்குப் பெரும் பொருள் பரிசளிக்க எண்ணினான். ஆனால் புலவர் அதனை மறுத்து வேறு ஓர் உரிமையைப் பெற்றார். அதாவது தன்னோடு சந்தப் பாடல் (இசைப்பாடல்) பாடித் தோற்பவர் காதை அறுத்து விட ஆணையைப் பெற்றார். காதினை அறுக்கும் குறட்டையும் (கருவி) பெற்றார். பின்னர்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தம்மோடு போட்டி இட்டுத் தோற்றவர் காதுகளை எல்லாம் குறட்டால் அறுத்து எறிந்தார்.
அறுபடாத காது
ஒரு சமயம் அனந்தன் என்ற புலவர் இவரோடு போட்டியிட்டுத் தோற்றார். வழக்கம் போல் வில்லி அவர் காதை அறுக்க முற்பட்டார். அப்போது புலவர் “அய்யா அனந்தனுக்குக் காது இல்லை. என் காதை அறுத்து விட்டால் உண்மையாகவே நான் அனந்தன் ஆகி விடுவேன்” என்று கூறினார். அனந்தன் என்பது ஆதிசேடனின் பெயர். ஆதிசேடன் பாம்பு. பாம்பிற்குக் காது இல்லை என்பது வழக்கு. புலவரின் நயத்தை உணர்ந்த வில்லி அவர் காதினை அறுக்காது விட்டு விட்டார்.
வில்லியும் தோல்வியும்
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த வில்லிபுத்தூரார் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு ஓர் வீட்டில் தங்கி இருந்த போது அருணகிரியாரின் அன்பர் ஒருவர் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடிச் சென்றார். இதனைக் கேட்டு வில்லி எள்ளி நகையாடினார். அருணகிரியாரைச் சந்தப்பாடல் பாடும் போட்டிக்கு அழைப்பு விடுத்தார். இப்போட்டியில் அருணகிரியார் வென்றதாகவும், காதறுக்கும் குறட்டையை அவர் வில்லிபுத்தூராரிடம் இருந்து வாங்கி விட்டதாகவும் அருணகிரியார் புராணம் கூறுகிறது.