Primary tabs
-
5.3 வில்லிபுத்தூரார்
தமிழில் எழுதப்பெற்ற பாரதங்களுள் சிறப்புடையதாகப் போற்றப்படுவது வில்லி பாரதம் ஆகும். இதனை வில்லிபுத்தூரார் இயற்றியுள்ளார். இப்பெயர் இயற்பெயரா என்பது தெரியவில்லை. ஆயின் வில்லிபுத்தூர் ஆழ்வாரின் பெயரினை இவருக்குச் சூட்டியதாகத் தெரிகிறது.
பிறப்பு
இவர் தென் பெண்ணை ஆறு பாய்கிற திருமுனைப்பாடி என்னும் பகுதியில் உள்ள சனியூரில் பிறந்துள்ளார். இவர் தந்தை வீரராகவாசாரி ஆவார். இவர் வைணவ அந்தணர்.
வில்லிபுத்தூராரின் காலத்தைத் திட்டவட்டமாய் அறிய இயலவில்லை. வக்க பாகையில் அரசனாக இருந்தவன் கொங்கர் கோன் வரபதி ஆட்கொண்டான் ஆவான். இவனே வில்லிபுத்தூராரை ஆதரித்தவன். இவனை இரட்டைப் புலவர்களும் பாடி உள்ளனர். இதே இரட்டையரே இராச நாராயணச் சம்புவராயன் என்ற காடவர் குல மன்னனையும் பாடி உள்ளனர். ஆக, வரபதி ஆட்கொண்டான், வில்லிபுத்தூரார், இரட்டைப் புலவர்கள், சம்புவராயன் ஆகியோரை ஒரே காலத்தைச் சேர்ந்தவராகக் கருத முடியும்.
இவர்களுள் சம்புவராயன் காலம் கி.பி. 1331 - 1383 என்று வரலாற்று ஆசிரியர்களால் வரையறை செய்யப்படுகிறது. ஆதலால் வில்லிபுத்தூரார் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என்று கொள்வதற்கு இடம் உண்டு.
ஆதரித்த வள்ளல்
கொங்கர் கோன் வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல் ஆவான்.