தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஏனியட் கதை அமைப்பும் பாடுபொருளும்

 • 5.2 ஏனியட் கதை அமைப்பும் பாடுபொருளும்

  முற்றுப் பெறாத காப்பியமான ஏனியட் 12 காண்டங்களைக் கொண்டது. முதல் ஆறு காண்டங்கள் ஏனியாஸ் தனது மக்களோடு புதிய நாடொன்றை அமைக்கத் தென்திசை நோக்கி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கின்றன. கடைசி ஆறு காண்டங்கள் ட்ரோஜன் மக்கள் ஏனியாஸின் தலைமையில் இத்தாலியில் நடத்திய பெரும் போரைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.

  5.2.1 ஏனியட் - கதைக் களம்

  ஏனியடின் கதைக்களம் கி.மு.12ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆசியா மைனரில் (Asia Minor) இருந்த மாபெரும் ட்ராய் நகரம் வீழ்ந்த பிறகு ட்ரோஜன்கள் மெடிட்டரேனியன் (Mediterranean) கடலில் சிறிய மரக்கலங்களில் இத்தாலி நோக்கிச் சென்றனர் என்பது வரலாறு. அவர்கள் உரோம் நகரில் இன்றும் ஓடும் டைபர் (Tiber) நதிக்கரையை அடைந்தனர். வரலாற்றின்படி, ட்ராய் கி.மு.1184ஆம் ஆண்டில் அழிந்தது. கி.மு.753இல் உரோம் உருவாக்கப்பட்டது. இவை இரண்டிற்கும் இடையேயான 400 ஆண்டுக் கால இடைவெளியை வெர்ஜில் ஒரு கவிஞனுக்கே உரிய கற்பனை நயத்தோடு கையாள்கிறார்.

  5.2.2 ஏனியட் - கதைச் சுருக்கம்

  ட்ரோஜன் போரில் வெற்றி பெறும் கிரேக்கர்கள் ட்ராய் நகரத்தை எரித்துச் சாம்பலாக்குகிறார்கள். நாட்டை இழந்த ட்ரோஜன்கள் ட்ராய் இளவரசன் ஏனியாஸின் தலைமையில் தென்திசையை நோக்கிப் பயணம் செய்கிறார்கள். இத்தாலியில் ஏனியாஸ் ஒரு பேரரசை நிறுவுவான் என்பதே விதியின் கூற்று.

  ஜுனோவின் இன்னல்களும் ஏனியாஸின் செயல்களும்

  ட்ரோஜன்களின் முக்கிய எதிரி ஜுனோ என்னும் வானுலகத்து அரசி அவர்களைப் பல இன்னல்களுக்கு உட்படுத்துகிறாள். சுமார் ஏழு வருடங்கள் ட்ரோஜன்கள் கடலிலேயே அலைகின்றனர். இத்தாலியை அவர்கள் நெருங்கும்போது, ஜுனோ கடலில் கடும்புயலை ஏற்படுத்துகிறாள். புயலில் சிக்கித் திசை மாறித் தவிக்கும் ட்ரோஜன்கள் ஆப்பிரிக்காவிலுள்ள கார்த்தேஜ் நகரை அடைகிறார்கள். கார்த்தேஜின் அரசி அழகிய டிடோ (Dido) ஆவாள். ஏனியாஸுக்கும் மற்ற ட்ரோஜன்களுக்கும் அவள் அடைக்கலம் தருகிறாள். ட்ரோஜன் பெரும்போரையும் அதன் விளைவையும் ஏனியாஸ் டிடோவுக்கு விவரிக்கிறான். மனைவியைப் பறிகொடுத்த ஏனியாஸ் தன் தந்தையோடும் மகனோடும் தப்பிய கதையைக் கூறுகிறான். வழியில் தந்தையை இழக்க நேரிட்ட சோகத்தையும் எடுத்துரைக்கிறான். இதற்கிடையே ஏனியாஸின் அன்னையான வீனஸ் தேவதை அவனைப் பற்றிக் கவலை கொள்கிறாள். கார்த்தேஜின் காக்கும் கடவுள் ஜுனோ. ஏனியாஸுக்கு எதிராக டிடோவின் மனதை ஜுனோ மாற்றிவிடக் கூடும் என்று அஞ்சுகிறாள். மகனைக் காக்கும் பொருட்டு டிடோவை ஏனியாஸின் மீது காதல் கொள்ளச் செய்கிறாள். காதல் வயப்பட்ட ஏனியாஸ் தனது இலட்சியத்தை மறக்கிறான். இவ்வாறு ஒரு வருடம் மகிழ்வாகக் கழிகிறது. கடவுளரின் அரசனான ஜூப்பிட்டர் (Jupiter) குறுக்கிட்டு ஏனியாஸை எச்சிக்கிறார். அவனை நம்பி வந்த ட்ரோஜன்களையும் அவனது கடமையையும் நினைவூட்டுகிறார். கடவுளரின் கட்டளைப்படி நடக்கும் ஏனியாஸ் மனம் வருந்துகிறான். இத்தாலியை நோக்கி மீண்டும் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறான். இதனால் மனமுடைந்த டிடோ தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

  புயலும் கப்பலும்

  பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

  சிசிலியில் ட்ரோஜன்கள்

  இத்தாலியை நோக்கிப் பயணிக்கும் ட்ரோஜன்கள், புயல் காரணமாக விரைவிலேயே சிசிலியின் (Sicily) கரையை வந்து சேர்கின்றனர். சிசிலி அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நாடு. அங்குதான் ஏனியாஸின் தந்தை அஞ்சிசேஸின் (Anchises) உடல் முந்தைய பிரயாணத்தின்போது புதைக்கப்பட்டுள்ளது. சிசிலியின் அரசன் அசெஸ்டீஸ் (Asestes) அவர்களை வரவேற்கிறார். சிசிலியில் அஞ்சிசேஸின் நினைவு நாளை ட்ரோஜன்கள் கொண்டாடுகின்றனர். வழிபாட்டிற்கும் வீர விளையாட்டிற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அஞ்சிசேஸின் கல்லறையில் ட்ரோஜன்கள் வழிபடுவதைக் கோபத்தோடு காண்கிறாள் ஜுனோ. துன்பங்களைக் கொடுக்கும் தேவதையான ஐரிஸை (Iris) ட்ரோஜன் பெண்களிடம் அனுப்புகிறாள். ஐரிஸ் கப்பல்களை எரித்துவிட்டு அவர்களைச் சிசிலியிலேயே தங்கிவிடுமாறு அறிவுறுத்துகிறாள். சுமார் ஏழு வருடங்கள் நாடற்று அலைந்து திரிந்த ட்ரோஜன் பெண்களுக்கு, இந்த ஆலோசனை ஏற்புடையதாகப்படுகிறது. அவர்கள் மரக்கலங்களை எரிக்க முற்படுகின்றனர். இதைக் கண்ட ஏனியாஸ், மனமுடைந்து ஜூப்பிட்டரை வேண்டுகிறான். பெரும் மழையைத் தருவித்து ஜூப்பிட்டர் நெருப்பை அணைத்து மரக்கலங்களைக் காக்கிறார்.

  தந்தையின் அறிவுரை

  சோர்வுற்ற ஏனியாஸ் வானத்தில் அவனது தந்தையின் உருவைக் காண்கிறான். அவர் ஏனியாஸுக்கு ஆறுதல் கூறுகிறார். ஜூப்பிட்டரின் கட்டளைப்படி, தான் அவன் முன் தோன்றியதாகக் கூறுகிறார். மேலும், ஏனியாஸ் இத்தாலியை அடையும் முன் பாதாள லோகத்தை அடைந்து அங்குள்ள அவர்னஸ் (Avernes) சதுப்பு நிலத்தில் தன்னைத் தேடிக் காண வேண்டும் என்று கூறுகிறார். அங்கு அவர் அவன் எப்படிப்பட்ட நகரை அமைக்க வேண்டும் என்றும் எப்படிப்பட்ட வழித்தோன்றலை அவன் பெறுவான் என்றும் காட்டுவதாகக் கூறி மறைகிறார். அதன்படி பாதாள உலகின் வழியே சொர்க்கத்தை வந்தடைகிறான் ஏனியாஸ். அங்குத் தந்தையைக் காண்கிறான்.

  ஏனியாஸின் நம்பிக்கை

  அஞ்சிசேஸ் உரோமின் நல்ல எதிர்காலத்தைக் காட்டுகிறார். அங்கு வருங்காலத்தில் தோன்றவிருக்கும் பேரரசர்களின் அணிவகுப்பையும் அவர்கள் புரியவிருக்கும் மகத்தான செயல்களையும் ஏனியாஸ் காண்கிறான். ஏனியாஸுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கிறது. இதன்பின் ஏனியாஸ் பூலோகம் திரும்புகிறான். மேலும் இத்தாலியை நோக்கிய பயணத்திற்குத் தயாராகிறான்.

  ஜுனோவின் தொல்லைகளும் ஏனியாஸின் வெற்றியும்

  அவர்களை நட்புக்கரம் நீட்டி இத்தாலியின் மன்னன் லாட்டினஸ் (Latinus) வரவேற்கிறான். அவனது மகள் லாவினியா (Lavinia) வெளிநாட்டவன் ஒருவனையே மணக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவு. ஆகையால் அவளை ஏனியாஸுக்கு மணமுடிக்க உறுதி செய்கிறான். இதைக் காணப் பொறுக்காத ஜுனோ புதிய இடர்களை உருவாக்குகிறாள். துன்பத்தின் மறுவுருவான அலக்டோ (Allecto) என்னும் தேவதையை அங்கு அனுப்புகிறாள். லாவினியாவின் தாய், அரசி அமாடாவை (Amata) ஏனியாஸுக்கு எதிராகத் தூண்டுகிறாள். அமாடா, லாவினியாவை அழைத்துச் சென்று, ஒரு மலைக் குகையில் மறைத்து வைக்கிறாள். பிறகு அலக்டோ ரூட்டிலியத்தின் இளவரசன் டர்னஸைக் காண்கிறாள். லாவினியாவை மணக்க எண்ணியிருந்த டர்னஸை ஏனியாஸுடன் போர் செய்யுமாறு தூண்டுகிறாள். லாட்டியம் கொடிய போர்க்களமாக மாறுகிறது. பெருத்த சேதத்திற்குப் பின், ஏனியாஸ் டர்னஸுடன் நேருக்கு நேர் மோதுகிறான். டர்னஸை வீழ்த்தி லாவினியாவை மணக்கிறான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 18:26:33(இந்திய நேரம்)