தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஏனியட் - கருத்துக் களஞ்சியம்

  • 5.3 ஏனியட் - கருத்துக் களஞ்சியம்

    ஏனியட்டின் கதை, பல தளங்களில் இயங்குகிறது. உரோம் நாட்டின் வரலாற்றுப் புகழ், தொன்மக் கதைகள் மற்றும் நம்பிக்கைகளை எடுத்துக் கூறுவதோடு காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட சில அழியா உண்மைகளையும் பாடுபொருளாகக் கொண்டது. இக்காப்பியத்தின் அடிப்படைக் கருத்துகள் :

     உரோமின் வரலாற்றுச் சிறப்பு
    விதியின் வலிமை
    அழிவிலிருந்து ஆக்கத்தை நோக்கிய பயணம்

    5.3.1 உரோமின் வரலாற்றுச் சிறப்பு

    உரோமின் சரித்திரச் சிறப்பை ஏனியட் குறியீடுகளின் மூலமாகப் போற்றுகிறது. உரோமப் பேரரசு எழுந்த வரலாற்றை அந்நாட்டின் தொன்மக் கதைகளோடு வெகு அழகாக இணைத்துப் பாடுகிறார் வெர்ஜில். உரோமை ஆட்சி புரிந்த வெவ்வேறு மன்னர்களின் முன்னோடியாகத் திகழ்கிறான் ஏனியாஸ். அவனது வீரமும், விடாமுயற்சியும் தன்னலமற்ற பண்பும் அவனுடைய வழித்தோன்றல்களிடத்தும் காணலாம். இப்பண்புகளே உரோம் ஒரு மாபெரும் வல்லரசாக வளரத் துணைபுரிந்தன. பிற காப்பியங்களைப் போல் அல்லாது ஒரு நாட்டின் பெருமையைப் பாடுவதால் ஏனியட் உரோமின் தேசியக் காப்பியமாகப் போற்றப்படுகிறது.

    5.3.2 விதியின் வலிமை

    விதி மிகவும் சக்தி வாய்ந்தது. மனிதர்களின் வாழ்வு அவர்களின் விதி வழியேதான் அமைகிறது. விதியை மீறிய சக்தி எதுவும் இல்லை. இவ்வுண்மையை உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றங்களையும் துன்பங்களையும் சோர்வின்றி எதிர்கொள்ளும் வல்லமை படைத்தவர்களாகிறார்கள். ஏனியட் காப்பியக் கதை இக்கருத்தை வலியுறுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இக்காப்பியத் தலைவனான ஏனியாஸின் வாழ்க்கைப் பாதை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது. ஏனியாஸ் விதியை எதிர்த்துப் போராடாமல் அதன் வழியிலேயே சென்று வெற்றி அடைகிறான். தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகள் தனக்கென எழுதப்பட்ட விதிக்குப் புறம்பாக இருக்கும் சூழ்நிலைகளில் அவற்றைக் கைவிடுகிறான். நாணல் போல வளைந்து கொடுத்து விதியை எதிர்கொள்ளும் ஏனியாஸின் மனம் இதனால் மேலும் உறுதியடைகிறது. இடர்களையும் இழப்புகளையும் அவன் சந்திக்க நேர்கையில் இக்குணமே அவனைக் காப்பாற்றுகிறது. கார்த்தேஜின் அரசியான டிடோ மற்றும் ரூட்டிலியத்தின் இளவரசனான டர்னஸ் இதற்கு நேர் எதிரான பாத்திரங்களாக உள்ளனர். விதியின் காரணத்தால் ஏனியாஸைச் சந்திக்கும் டிடோ அதே விதியின் வசத்தால் அவனை இழக்க நேரிடும்போது ஏமாற்றமடைந்து தன்னை மாய்த்துக் கொள்கிறாள். தனது விதியைப் புரிந்து கொள்ளாத டர்னஸ் இறுதியில் ஏனியாஸின் வாளுக்கு இரையாகிறான். பழங்காலம் தொட்டே உரோமானியர்கள் விதியின் வல்லமையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களுடைய தொன்மங்களும் கடவுளர் பற்றிய கதைகளும் இதைப் பிரதிபலிக்கின்றன. வெர்ஜில் இயற்றிய ஏனியட்டின் மையக் கருவாகவும் இதுவே இயங்குகிறது.

    அழிவிலிருந்து ஆக்கத்தை நோக்கிய பயணம்

    ஏனியட்டில் பயணம் ஒரு முக்கியக் குறியீடாகத் திகழ்கிறது. மனிதனின் வாழ்க்கைப் பயணத்தையே இது சுட்டுகிறது. ஏனியாஸ் மற்ற ட்ரோஜன்களோடு மேற்கொள்ளும் பயணம், அழிவிலிருந்து வாழ்க்கைக்கான புதிய அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே பொருள் கொள்கிறது.

    5.3.3 உரோமானியர்களின் கடவுளரும் நம்பிக்கைகளும்

    ஏனியட், உரோமானியர்களின் நம்பிக்கைகள், கடவுளர் மற்றும் தொன்மக் கதைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. உரோமானியர்களின் தொன்மக் கதைகள் அவர்கள் வழிபட்ட பல்வேறு கடவுளரைப் பற்றியன. உரோமானியக் கடவுளரின் வரிசைப்படி ஜூப்பிட்டரே முதல் தெய்வம். கடவுளரின் அரசனான ஜூப்பிட்டரின் கீழ்ப் பல்வேறு சிறு தெய்வங்கள் செயல்பட்டன. மனிதர்களின் வாழ்வில் இத்தெய்வங்களின் குறுக்கீடு எப்போதும் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. மனிதர்கள் தெய்வங்களின் கைப்பாவைகளே என்று உரோமானியர்கள் நம்பினர். அதுமட்டுமின்றி விதியின் வலிமையிலும் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. கனவுகள், சகுனங்கள், எதிர்காலத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் ஆகியவற்றிற்கும் உரோமானியர்கள் முக்கியத்துவம் அளித்தனர். இவை, விதியின் திட்டத்தை முன்னரே அறிவிப்பன என்று நினைத்தனர்.

    ஜூப்பிட்டர்

    பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 18:29:58(இந்திய நேரம்)