தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஏனியட் - உத்திகள்

  • 5.5 ஏனியட் - உத்திகள்

    வெர்ஜிலின் ஏனியட், முற்றுப் பெறாத காப்பியமே. காப்பியத்தின் சில பகுதிகள் மெருகேற்றப்பட்டு மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று எண்ணிய வெர்ஜில் இறக்கும் தறுவாயில் இப்படைப்பை எரித்து விடவே விரும்பினார். இருப்பினும் ஏனியட் இலக்கிய நயத்திலும் சுவையிலும் சிறந்தது. அழகிய படிமங்களும், காப்பிய உவமைகளும், குறியீடுகளும், வருணனைகளும் நிரம்பியது. ஹோமரின் காப்பியங்களைப் போல வாய்மொழி மரபைச் சாராத ஏனியட் கவிதை நயத்தில் ஒப்பற்றது.

    5.5.1 குறியீடு

    ஏனியட்டில் நெருப்பு ஒரு முக்கியக் குறியீடாக விளங்குகிறது. அழிவையும் கட்டுக்கடங்காத உணர்ச்சிக் கொந்தளிப்பையும் இக்குறியீடு சுட்டுகிறது. ஹெலனின் (Helen) மீது, பாரீஸ் (Paris) கொண்ட காதல் தீயே, ட்ராயின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. டிடோவின் அழிவிற்கும் அவள் ஏனியாஸ் மீது கொண்ட காதல் தீயே காரணம். டர்னஸின் தணியாத கோபத்தைச் சித்திரிக்கும்போதும் இக்குறியீடே இடம் பெறுகிறது.

    5.5.2 கலைப்பண்புக் கூறு (Motif)

    காப்பியம் முழுவதும் மீண்டும் மீண்டும் இடம்பெறும் கலைப்பண்புக் கூறுகள், கனவுகள், சகுனங்கள், எதிர்காலத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் காப்பியத்தின் கதையை முன்நகர்த்துகின்றன. இவை யாவும் எதிர்காலத்திற்கான விதியின் திட்டத்தை மறைமுகமாக அறிவித்தபடியே உள்ளன. அதேபோன்று ஒரு புதிய நகரை நிர்மாணிக்கும் முயற்சியும் ஒரு முக்கியக் கலைப்பண்புக் கூறாக உள்ளது. இரண்டாம் காண்டத்தில் ஏனியாஸ் ட்ராயின் வீழ்ச்சி பற்றி விவரிக்கும் போது தாய் நாட்டை விட்டு வெளியேறிய டிடோவும் கார்த்தேஜில் புதிய அரசை நிறுவிய கதையை அறிகிறோம். மூன்றாவது காண்டத்தில், பலமுறை ட்ரோஜன்கள் ஒரு புதிய வல்லரசை அமைக்கப் போராடுவது சித்திரிக்கப்படுகிறது. ஒரு நாட்டை நிர்மாணிப்பதற்கான முயற்சியும் அம்முயற்சியைத் தகர்த்தெறியும் தடங்கல்களும் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் இடையேயான போராட்டத்தைக் குறிக்கின்றன.

    வெர்ஜில் சொல்லோவியங்களான வருணனைகளை இயற்றுவதில் தேர்ச்சி பெற்றவர். ஏனியடில் உள்ள கடல் மற்றும் போர்க்களம் பற்றிய காட்சிகளே இதற்குச் சான்று.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 12:05:59(இந்திய நேரம்)