தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஏனியட்

 • 5.1 ஏனியட்

  கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் இடையே நடந்த ட்ரோஜன் போரின் (Trojan War) முடிவிலிருந்து தொடங்கும் கதையே ஏனியட். வானுலகத்தின் அரசியான ஜுனோவின் (Juno) தணியாத கோபத்தால் விளைந்தது இக்கதை. ட்ரோஜன்களின் மீது தீராத வெறுப்புக் கொண்ட ஜுனோ, ட்ராய் (Troy) நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறாள். சிதறுண்ட தனது மக்களை அழைத்துக் கொண்டு ட்ராயின் இளவரசன் ஏனியாஸ் (Aeneas) தெற்கு நோக்கிப் பயணம் செய்கிறான். ஜுனோவின் கோபம் அவர்களை நிலத்திலும் கடலிலும் தொடர்கிறது. இறவா வரம் பெற்ற வீனஸ் என்னும் தேவதை, ஏனியாஸின் அன்னை. அவளது பூரணமான அருள் ஏனியாஸைக் காக்கிறது. ஜுனோவின் கோபத்தைக் காட்டிலும் பெரியது விதியின் வலிமை. செயல்வீரனான ஏனியாஸ், பிறப்பிலிருந்தே பெரும் புகழுக்குரியவன். இத்தாலியின் பேரரசு ஒன்றை நிறுவுவான் என்பதே அவனது விதி. அதன்படி ஏனியாஸ் பல இடர்களை மீறி வெற்றி பெறுகிறான்.


  ஜுனோ


  ஏனியாஸ் ட்ராய்


  ஏனியாஸ்


  வீனஸ்

  பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

  5.1.1 ஆசிரியர் வெர்ஜில் வரலாறு

  கி.மு. 70ஆம் ஆண்டில், உரோம் (Rome) நகரத்திற்கு வடக்கேயுள்ள மான்டுவா (Mantua) என்னும் ஊரில் வெர்ஜில் பிறந்தார். வெர்ஜிலின் தந்தை பெரும் செல்வர். வெர்ஜிலுக்குச் சிறந்த கல்வி புகட்டினார். வெர்ஜில் அரசியலிலோ வணிகத்திலோ தலைசிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார். தேர்ந்த மேடைப் பேச்சாளனாக வளர வெர்ஜிலை அவரது 17ஆம் வயதில் உரோம் நகருக்கு அனுப்பி வைத்தார். இயற்கையிலேயே கூச்ச சுபாவமுள்ள வெர்ஜில் மேடைப் பேச்சைக் காட்டிலும் எழுத்திலேயே நாட்டம் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாது உள்நாட்டுப் பூசல்களும் பகையும் நிரம்பிய உரோம் நாட்டின் அரசியல் அவரை வெகுவாகக் கவரவில்லை. அவர் நேப்பில்ஸ் (Naples) சென்று தத்துவம் பயின்றார். இக்காலக் கட்டத்தில் கவிதை எழுதத் தொடங்கினார். மாமன்னன் அகஸ்டஸின் ஆட்சியின் கீழ் உரோம் நாட்டில் அமைதி பிறந்தது. இந்தச் சூழலில்தான் வெர்ஜில் ஏனியடை இயற்றினார். வெர்ஜில் அவர் தொடங்கிய காப்பியத்தை முடிக்கும் வரை வாழவில்லை. முற்றுப் பெறாத இக்காப்பியத்தை எரித்துவிடவே விரும்பினார். அகஸ்டஸின் குறுக்கீட்டால் இக்காப்பியம் காப்பாற்றப்பட்டது.

  5.1.2 ஏனியட் எழுந்த காலம்

  கி.மு. 44ஆம் ஆண்டின் ஜூலியஸ் சீசரின் (Julius Ceasar) மறைவுக்குப் பின்னர் உரோம் அரசியல் குழப்பங்களுக்கு உள்ளானது. வெர்ஜில் பிறந்த கி.மு.70ஆம் ஆண்டிலும் இந்நிலை மாறவில்லை. உள்நாட்டுப் பூசல்களால் பிளவுபட்ட உரோமில் வீதிச் சண்டைகளும் கலவரங்களும் அதிகரித்தன. இச்சூழ்நிலையில் கி.மு.31ஆம் ஆண்டில் உரோமில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மாமன்னன் அகஸ்டஸ் உள்நாட்டுப் பூசல்களை முடிவுக்குக் கொண்டு வந்தான். முதல் முறையாக வெர்ஜிலுக்குத் தனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறந்தது. அகஸ்டஸின் ஆட்சிச் சிறப்பைப் போற்றும் காப்பியமாகவே வெர்ஜில் ஏனியட்டைப் படைத்தார். உரோமானியர்கள் தங்கள் நாட்டின் வரலாற்றையும் வல்லமையையும் தொன்மக் கதைகளையும் பற்றிப் பெருமை கொள்ளும் விதத்தில் அமைந்தது இக்காப்பியம்.


  ஜூலியஸ் சீசர்


  அகஸ்டஸ் சீசர்

  பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

  5.1.3 ஐரோப்பியக் காப்பியங்களும் தமிழ் காப்பியங்களும்

  இலக்கிய வடிவங்களிலேயே மிகவும் பழமை வாய்ந்தது காப்பியம். கிரேக்கக் கவிஞரான ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி ஆகிய இரண்டும் ஐரோப்பியக் காப்பியங்களின் முன்னோடியாகக் கருதப்படுகின்றன. கிரேக்க நாட்டின் சரித்திரத்தையும் தொன்மக் கதைகளையும் பாடுபொருளாகக் கொண்ட இவ்விரண்டு காப்பியங்களும் வாய்மொழி மரபைச் சார்ந்தவை. இலியட், ட்ரோஜன் போரைப் பற்றியது. ஒடிசி, ட்ரோஜன் போரின் முக்கியப் பங்கு வகிக்கும் யுலிஸஸ் (Ulysses) என்னும் வீரன் தன் தாய்நாடு திரும்பும் கதையைக் கூறுகிறது. ஹோமருக்குப் பின்னர் இத்தாலியப் பெருங்கவிஞரான வெர்ஜில் காப்பிய வடிவத்தை மேலும் செழுமைப்படுத்தினார். அவரது தலைசிறந்த காப்பியமான ஏனியட் உரோமானிய வீரன் ஏனியாஸின் கதையைப் பாடுகிறது. ஆங்கில இலக்கியத்தின் முதல் காப்பியமாகப் போற்றப்படுவது பியோவுல்ப் (Beowulf) என்னும் காப்பியம். வாய்மொழி மரபில் தோன்றிய இக்காப்பியம் ஸ்காண்டினேவிய (Scandinavian) மாவீரனான பியோவுல்ப்பின் கதையையும் புகழையும் கூறுகிறது. 17ஆம் நூற்றாண்டில் வெளிவந்த மில்டனின் (Milton) சொர்க்க நீக்கம் (Paradise Lost) என்பது காப்பிய வடிவத்தின் உச்சமாகக் கருதப்படுகிறது. இது, ஆதாமும் ஏவாளும் சொர்க்கத்தை விட்டு வெளியேற்றப்பட்ட கதையை விவரிக்கிறது. இக்காப்பியம் இலக்கிய நயத்திலும் சுவையிலும் ஒப்பற்றது.


  மில்டன்


  ஆதாமும் ஏவாளும்

  பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகியவை தமிழின் ஐம்பெருங்காப்பியங்களாகும். இவற்றுள் இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழின் முதல் காப்பியமாகும். தமிழ்க் காப்பியங்கள் உத்திகளிலும், கட்டமைப்பிலும், நடையிலும் ஐரோப்பியக் காப்பியங்களைப் பெரும்பாலும் ஒத்துள்ள போதிலும் அவை எடுத்தாளும் பாடுபொருளும் கதைக்கருவும் பெரிதும் மாறுபட்டவையாகும். தமிழ்க் காப்பியங்கள் போரைப் பின்னணியாகக் கொண்டவையல்ல. அவை நாட்டின் சரித்திரத்தைச் சித்திரிக்கும் நோக்கோடு இயற்றப்படவில்லை. தமிழரின் கலை, பண்பாடு, சமூகவியல், அரசாட்சி, இறைநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் விதமாகவே அமைந்துள்ளன. இக்காப்பியங்கள் பெரும்பாலும் சமணர்களால் இயற்றப்பட்டவை. ஆகையால் இவற்றில் துறவுநிலை ஒரு முக்கியக் கதைக் கருவாக முன் வைக்கப்படுகிறது. ஐரோப்பியக் காப்பியங்களில் ஆண்களே தலைமைப் பாத்திரங்களாக உள்ளனர். இவ்வாறின்றி தமிழ்க் காப்பியங்கள் குறிப்பாகச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பெண்களைப் போற்றும் காப்பியங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  5.1.4 ஹோமரும் வெர்ஜிலும்

  கிரேக்கப் புலவர் ஹோமர் இயற்றிய காப்பியங்களான இலியட் மற்றும் ஒடிசியின் பாணியை வெர்ஜில் கையாண்டுள்ளார். இலியட் மற்றும் ஒடிசியின் கதையைப் போலவே ஏனியட்டின் கதைப் பின்னலும் ட்ரோஜன் போரைப் பின்னணியாகக் கொண்டது. ட்ரோஜன் போருக்குப் பின்னர் வீடு திரும்பத் துடிக்கும் யுலிஸஸ் கடவுளரின் கோபத்தால் 12 ஆண்டுகள் கடலிலும் நிலத்திலும் அலைந்து திரியும் கதையைச் சொல்கிறது ஒடிசி, ஏனியடின் முதல் ஆறு காண்டங்களில் நாட்டை இழந்த ட்ரோஜன்களோடு ஏனியாஸ் இத்தாலியை அடைய அலைகிறான். ஏனியட்டின் கதையிலும் கடவுளரின் குறுக்கீடு உள்ளது. ஏனியட்டின் இரண்டாவது ஆறு காண்டங்கள் இலியட்டை ஒத்து அமைந்துள்ளன. இலியட் ட்ரோஜன் போரை விரிவாக விவரிக்கிறது. ஏனியட்டின் காப்பியத்தின் கடைசி ஆறு காண்டங்கள் இத்தாலியில் ட்ரோஜன்கள் நிகழ்த்தும் போரைப் பற்றிக் கூறுகின்றன.


  ஹோமர்


  வெர்ஜில்

  பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

  ஹோமரின் பாதிப்பு இருப்பினும் ஏனியட் தனக்கெனத் தனித்துவத்தைப் பெற்றுத் திகழ்கிறது. இலியட் மற்றும் ஒடிசி தனிமனித சாகசங்களையும் வீரத்தையும் போற்றுகின்றன. ஆனால் ஏனியட் ஒரு பேரரசின் சரித்திரத்தைச் சித்திரிக்கிறது. ஹோமரின் காப்பியங்கள் வாய்மொழி மரபைச் சார்ந்தவை. எனவே சொல்லிலும் நடையிலும் ஹோமர் எளிமையைக் கையாண்டார். ஏனியடின் மொழிநடை சற்று ஆழமானது. அழகிய படிமங்களும் குறியீடுகளும் நிறைந்தது. தத்துவத்தின் தாக்கத்தையும் ஏனியடில் காணமுடிகிறது. அதுமட்டுமல்லாது உரோமின் சரித்திரமும் தொன்மக் கதைகளும் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்ற படிப்பினைகளைக் குறியீடுகளின் மூலமாக ஏனியட் உணர்த்துகிறது.


  தன்மதிப்பீடு : வினாக்கள் - I

  1.

  ஏனியட் உரோமின் தேசியக் காப்பியமாகக் கருதப்படுவதற்குக் காரணம் கூறுக.

  2.

  ட்ராய் நகரின் வீழ்ச்சிக்குப் பிறகு ட்ரோஜன்கள் எங்குச் செல்கிறார்கள்?

  3.

  வெர்ஜில் ஏன் அரசியலின் மீது ஈடுபாடு கொள்ளவில்லை?

  4.

  ஏனியட் எவ்வாறு ‘இலியட்’ மற்றும் ‘ஒடிசி’யை ஒத்துள்ளது?

  5.

  வெர்ஜிலுக்கு எப்போது தனது நாட்டின் எதிர்காலம் மீது நம்பிக்கை பிறந்தது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 18:21:50(இந்திய நேரம்)