Primary tabs
-
4.5 அயலவர் தொடர்பால் ஏற்பட்ட மாற்றங்கள்
பழந்தமிழர்கள் பிறநாட்டாருடனும், வடஇந்தியருடனும் வாணிபத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் அவர்களுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் பழந்தமிழரின் மொழி, சமயம், சமூக வாழ்வு ஆகியவற்றில் நிகழ்ந்தன.
4.5.1 மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள்
பழந்தமிழர் கிரேக்கர், ரோமானியருடன் வாணிபத் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டனர் என்பதை அறிவோம். இதன் விளைவாகக் கிரேக்க ரோமானிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இடம் பெறலாயின. அதேபோல் சீனாவுடன் ஏற்பட்ட தொடர்பால் அந்நாட்டிலிருந்து இறக்குமதியான பொருள்களுக்குத் தமிழில் சீனாக்களிமண், சீனாக்கற்கண்டு, சீனாப்பட்டு எனவும் பெயர்கள் வழங்குகின்றன. மேலும் தமிழில் சர்க்கரையைக் குறிக்கச் சீனி என்ற சொல்லும் வழங்குவதைக் காணலாம்.
வடஇந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் வடஇந்தியர் எனக் கூறப்படும் ஆரியர் தமிழகத்தில் நுழையலானார்கள். இவ்வாரியர்கள் தமிழ் மொழியைக் கற்கலானார்கள். தமிழ் மொழியைக் கற்றதும் நாளடைவில் தம்முடைய ஆரிய எழுத்துகளின் ஒலிகளையும், ஆரிய மொழிச் சொற்களையும் தமிழில் நுழைக்கலாயினர். ஆரிய எழுத்து ஒலிகளும், சொற்களும் தமிழில் கலந்தாலும் அவற்றுக்கு எனத் தமிழர் ஒரு ஒதுக்கிடத்தையே அளித்தனர். இதன் காரணமாக அவற்றைத் தமிழில் பயன்படுத்துவதற்கு என்று தனி இலக்கண விதிகளைக் கடைப்பிடிக்கலாயினர். ஆரிய மொழியின் கூட்டெழுத்து வடிவங்கள், எழுத்துப் புணர்ச்சி முறைகள், சொற்சேர்க்கை மரபுகள் தமிழில் இடம்பெறவில்லை. அந்த ஆரிய எழுத்து ஒலிகளையும் சொல் அமைப்புகளையும் தமிழில் சேர்ப்பதற்காகவே பிற்காலத்தில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டன.
ஆரிய, தமிழ் மொழிகளுக்குள் ஏற்பட்ட கலப்பினால் பிராகிருதம் என்ற புதுமொழி ஒன்றும் உருவாயிற்று. அச்சமயத்தில் திராவிட மொழிகள் வழங்கும் இடங்கள் யாவற்றிலும் பிராகிருத மொழி பரவி வந்தது.
தமிழரின் மொழி, இலக்கியம் ஆகிய துறைகள் எல்லாவற்றிலும் ஆரியர்கள் தலையிட்டு அவற்றைத் தம் இயல்புக்கு ஏற்ப மாற்றிவிட முனைந்தனர். அதற்குச் சான்றாக மக்கள் பெயர்கள், கடவுளரின் பெயர்கள், ஊர்கள், ஆறுகள், மலைகள் முதலியவற்றின் பெயர்கள் யாவும் தமிழ் வடிவத்தை இழந்தன என்பர். இதற்கு மாறாக அப்பெயர்கள் எல்லாம் ஆரிய வடிவத்தை ஏற்றன. அதே சமயத்தில் காலப்போக்கில் ஆரியர் தாம் பேசிவந்த சமஸ்கிருதத்தையே மறந்துவிட்டனர். தமிழையே தம் தாய்மொழியாக ஏற்றுக் கொள்ளலாயினர். இவ்வாறாக அயலவர் தொடர்பால் பல மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டன.
4.5.2. சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்
வட இந்தியராகிய ஆரியர் பண்டைய தமிழகத்தில் இருந்த சமயக் கோட்பாடுகளையும், தெய்வ வழிபாட்டு முறைகளையும் மாற்ற முற்பட்டனர்.
ஆரியரின் கடவுள்ர் தமிழகத்தில் சிறு தெய்வங்களாகவே இருந்தனர். பண்டைய தமிழரின் மாயோனும், சேயோனும் தொடர்ந்து தெய்வங்களாக இருந்தனர். ஆனால் நாள்பட நாள்பட ஆரிய மதக் கொள்கைகளைத் தமிழர்கள் பின்பற்றலாயினர். ஆரியரின் முயற்சியால் கடவுளர்களின் தமிழ்ப் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன.
பௌத்த துறவிகளும், சமண முனிவர்களும் தமிழகத்துக்குள் நுழைந்தனர். கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே குண்டூர் மாவட்டத்தில் பௌத்த சமயமானது நுழைந்து நிலைத்துவிட்டது எனப் பட்டிபுரோலு கல்வெட்டுகள் கூறுகின்றன. அசோகர் காலத்திலேயே காஞ்சி மாநகரில் பௌத்தம் நிலைபெற்றுச் சிறப்புடன் விளங்கிற்று.
அதுபோலவே மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே சமண சமயம் தமிழகத்தில் பரவிவிட்டது என்பதை நாம் அம்மாவட்டங்களில் கிடைத்த குகைக் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் ஆண், பெண் ஆகிய இருபால் துறவிகளுக்கும் சமணப்பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்த செய்திகளைச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறுகின்றன.
4.5.3 சமூக வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள்
பழந்தமிழர்கள் கிரேக்கர், ரோமானியர் போன்றோருடன் ஏற்படுத்திய வாணிபத் தொடர்பால் தமிழகத்துக்குள் கிரேக்கர், ரோமானியர், மற்றும் யூதர்கள் குடியேறலாயினர். இதன் காரணமாகப் பண்டைய தமிழர்களின் கலாச்சாரமும், ரோம கிரேக்க கலாச்சாரமும் இணையலாயிற்று.
வடஇந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் ஆரியர்கள் தமிழகத்துள் வாழ இடம் தேடினர். அதன் பின்னர் மன்னரின் ஆதரவை நாடிக் குடியேறினர். அவர்கள் தமிழருடன் போர் புரியவில்லை. போரிட்டு நாடுபிடிக்கவும் இல்லை. ஆரியரின் ஊடுருவல் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. அவர்கள் தமிழரோடு தமிழராய்க் கலந்து தமிழரின் வாழ்க்கையையே தாமும் வாழ்ந்து, தமிழரின் வாழ்க்கை மரபுகளில் பல மாறுதல்களைப் படிப்படியாய் உண்டாக்கினார்கள். மெல்ல மெல்லத் தமிழர்கள் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு தமிழ்க்குடிகளாகவே மாறி விட்டனர். இருவேறு இயல்புகள் படைத்த தமிழர் ஆரியர்களுக்கிடையே இனக்கலப்பும் உண்டாயிற்று. இக்கலப்புகள் யாவும் மெல்ல மெல்லக் காலப்போக்கில் ஏற்பட்டனவேயன்றித் திடீரென்று ஒரு சில நாட்களில் அல்ல. வெகுகாலமாகத் தனிச் சிறப்புடனும் தூய்மையுடனும் வளர்ந்து வந்த ஒரு நாகரிகமும் பண்பாடும் இடையில் நுழைந்த ஒரு மக்களினத்தின் முயற்சியால் வழக்கிழந்து அழிந்து மறைந்து போய்விட்டன. சுருக்கமாகச் சொன்னால் தமிழகம் ஆரிய நாடாகிவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது.
வட நாட்டாருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் தமிழகத்துக்கு மற்றொரு சீர்கேடு விளையலாயிற்று. இனம், குலம் ஆகிய வேறுபாடுகளினால் இடர்ப்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல ஜாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குள் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. இவ்வாறாகச் சமூகவாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.