தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - A03122- பல்லவர்கள் யார்?

  • 2.1 பல்லவர்கள் யார்?

    கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் அரசியல் இறைமை பெற்றிருந்தனர். பல்லவர்கள் வடக்கில் சாளுக்கிய வம்சத்தினரையும், தெற்கில் தமிழ் மன்னர்களையும் பணிய வைத்தார்கள். பொதுவாகப் பல்லவர்கள் அரசியலிலும், பண்பாட்டிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கி வந்தார்கள். இப்பெயர் பெற்ற பல்லவர்களைப் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. இருப்பினும் இப்பல்லவர்கள் தமிழ்நாட்டினைச் சார்ந்தவர்களா? அல்லது அயல்நாட்டைச் சேர்ந்தவர்களா? அல்லது வட இந்தியாவிலிருந்து வந்தவர்களா? பின்பு இவர்கள் எங்கிருந்துதான் தமிழ்நாட்டிற்கு வந்தனர்? ஏன் வந்தனர்? என்னும் கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களால் இன்னும் சரிவரப் பதில் காண முடியவில்லை. இக்கேள்விகளுக்கான பதில்களைப் பல்லவர்கள் எழுதி வைத்துச் சென்ற செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவாறு கோர்வை செய்து கொள்ளலாம்.

    பல்லவர்களைப் பற்றிய பல்வேறு கருத்துகள் வரலாற்று ஆசிரியர்களிடம் நிலவுகின்றன. இக்கருத்துகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:

    1. பல்லவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

    2. பல்லவர்கள் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள்

    3. பல்லவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

    இம்மூன்று பிரிவுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.

    2.1.1 பல்லவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள்

    பாரசீகத்தைச் சேர்ந்த பகலவர்களே பல்லவர்கள் என வின்செண்ட் ஸ்மித் கூறுகிறார். சாதவாகன அரசு வீழ்ச்சி அடைந்ததும் பகலவர்கள் தொண்டை மண்டலத்தில் குடிபுகுந்து பல்லவ அரசைத் தோற்றுவித்தனர் என்றும் அவர் கூறுகிறார். ஜோவேயு துபிரில் (Joureau Duberial) என்பவரும் இக்கருத்தினை ஆதரிக்கின்றார்.

    காஞ்சியிலுள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலில் மணிமுடியை அளிக்கும் சிற்பம் ஒன்று உள்ளது. இம்மணிமுடி பாக்டீரிய (Bactria) மன்னர் டெமிட்டிரியஸின் (Demetrius) மணிமுடியை ஒத்திருக்கின்றது. எனவே, பல்லவர்கள் பாக்டீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று வெங்கட சுப்பைய ஐயர் கருதுகின்றார்.

    சோழ மன்னர் பம்பரையினருக்கும், இலங்கைச் சாகவம்சத்திற்கும் தொடர்புடையவர்கள் பல்லவர்கள் என்ற கருத்தும் உண்டு. தொண்டைமான் நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ இளவலுக்கும் மணிபல்லவத்து நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்தவன் தொண்டைமான் இளந்திரையன். இச்செய்தி மணிமேகலைக் காப்பியம் வாயிலாக அறியப்படுகிறது. (மணிமேகலை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, 3-11). இத்தொண்டைமான் இளந்திரையனே பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை என்னும் பாட்டுக்குத் தலைவன் என்று கருதப்படுகிறான். நாககன்னிகை பீலிவளையின் ஊர் மணிபல்லவம். மணிபல்லவம் என்னும் சொல்லின் இறுதியான பல்லவம் என்ற சொல்லே பல்லவர் எனத் திரிந்தது என்பர். மணிபல்லவம் என்பது பழங்காலத்தில் இலங்கைக்கு அருகில் இருந்த ஒரு தீவு என இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இராசநாயகம் என்பவர் கூறுகிறார்.

    2.1.2 பல்லவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்

    K.P.ஜெயஸ்வால் என்பவர் பல்லவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்த பிராமணர்கள் என்கின்றார். போரில் வலிமை பெற்றிருந்த பிராமணர்கள் வட இந்தியாவிலிருந்து தெற்கு நோக்கி வந்து அரசியலில் ஈடுபட்டனர். அவ்வாறு வந்தவர்கள் வாகாடகர் என்னும் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வாகாடகர்களே காஞ்சியில் புகுந்து பல்லவப் பேரரசைத் தோற்றுவித்தனர் என்கிறார்கள். இப்பல்லவர்கள் அஸ்வமேத வேள்விகளைச் செய்தனர் என்றும், சமஸ்கிருத மொழியை ஆதரித்து வந்தனர் என்றும் கூறுகின்றனர்.

    2.1.3 பல்லவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

    சோழ மண்டலத்தில் வாழ்ந்து வந்த குறும்பர், கள்ளர், மறவர் ஆகியோரிடையில் இனக்கலப்பு ஏற்பட்டது. இவர்களுக்கிடையில் புதிதாகத் தோன்றிய ஒரு இனமே பல்லவர்கள். எலியட், செவ்வேல் முதலிய ஆராய்ச்சியாளர்கள் குறும்பர்கள் ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள்; இவர்களின் மன்னரே பல்லவர் என்று கருதுகின்றனர். இப்பல்லவர்கள் காலப்போக்கில் காஞ்சியை உரிமையாக்கிக் கொண்டு ஆட்சியைத் தொடங்கினர்.

    பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த குறும்பர்களுடன் தொடர்புடையவர்கள் என்று சத்தியநாத ஐயர் என்னும் வரலாற்று ஆசிரியர் கருதுகின்றார். அசோகரது கல்வெட்டுகளில் புலிந்தர் என்னும் இனத்தவர் அவனது பேரரசில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. புலிநாடு, புலியூர்க் கோட்டம் என்னும் இரு கோட்டங்கள் தொண்டை மண்டலத்தில் இருந்தன. இப்பகுதியில் புலிந்தர்கள் வாழ்ந்து வந்தனர். புலிந்தரும் குறும்பரும் ஒருவரே. புலிந்தர்களுக்குப் பலடர் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. பலடர் என்னும் சொல் பல்லவர் என்று மருவியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

    எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர் பல்லவர்கள் சாதவாகன மன்னர்களின் கீழ்ச் சிற்றரசர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பணியாற்றிய ஓர் இனத்தவர் என்று கூறுகிறார். கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாதவாகனர்கள் வீழ்ச்சியுற்றனர். அந்நிலையில் காஞ்சியை அரசு இருக்கையாகக் கொண்டு பல்லவர்கள் ஆட்சியைத் தொடங்கினர். பல்லவர் என்ற சொல்லும் தொண்டையர் என்ற சொல்லும் ஒரே பொருளையே உணர்த்துகின்றன. அதோடு சாதவாகனர்களின் ஆட்சி முறையும், முற்காலப் பல்லவர்களின் ஆட்சி முறையும் ஒத்திருந்தது கவனிக்கத்தக்கது.

    எது எவ்வாறு இருப்பினும் பல்லவர்கள் தமிழர்கள் என்னும் கொள்கையினை முன்பின் பாராது மறந்து விடலாம். ஏனெனில் பல்லவர்கள் தமிழை ஆட்சி மொழியாகக் கொள்ளவோ அல்லது அதற்கு ஆதரவு அளிக்கவோ இல்லை. பல்லவர்கள் சாதவாகனப் பேரரசர்களுக்கு அடங்கி அப்பேரரசின் தெற்கில் ஆண்டு வந்த அரசர்கள் என்பதே பொருத்தமுடையது எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 15:43:13(இந்திய நேரம்)