தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - A03122- பல்லவர் செய்த போர்கள்

 • 2.4 பல்லவர் செய்த போர்கள்

  சாதவாகனர்களின் ஆட்சி குன்றிவரும்போது பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினார்கள் எனக் கண்டோம். பல்லவர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கிய நாள் முதல் அம்மன்னர்களின் கடைசி வழிவந்தவர்களான நிருபதுங்கன், அபராசிதன் வரையிலும் அண்டை நாடுகளை ஆண்டு வந்த அரசர்களுடன் போர் செய்து வந்தார்கள். அவையாவன:

  1. சாளுக்கியருடன் போர்

  2. இராஷ்டிரகூடருடன் போர்

  3. கங்கருடன் போர்

  4. சோழருடன் போர்

  5. பாண்டியருடன் போர்

  6. இலங்கையருடன் போர்

  7. களப்பிரருடன் போர்

  8. வாகாடருடன் போர்

  9. சேரருடன் போர்

  2.4.1 சாளுக்கியருடன் போர்

  சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சிற்றரசராக இருந்து தனியரசராக மாறியவர்கள் சாளுக்கியர். இவர்கள் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு சாளுக்கிய அரசினை உண்டாக்கினார்கள். வாதாபி தென்னிந்தியாவில் இக்காலக் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது. சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே அடிக்கடி போர்கள் நடைபெற்றன.

  • முதலாம் மகேந்திரவர்மன் – இரண்டாம் புலிகேசி போர்

  சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி வட இந்தியாவில் வெற்றிமேல் வெற்றி கொண்ட ஹர்ஷரைத் தோற்கடித்தான். இந்நிலையில் முதலாம் மகேந்திரவர்மன் இரண்டாம் புலிகேசியின் படையெடுப்பைச் சந்திக்க வேண்டியதாயிற்று. ஏற்கெனவே கதம்பர்களை அடக்கி அவர்களுடன் இரண்டாம் புலிகேசி நட்புறவு கொண்டிருந்தான். அவர்களின் உதவியுடன் பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனைப் பழிவாங்கி, தமிழகத்தில் சாளுக்கியரின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என எண்ணிப் படையெடுத்தான். இதனைக் கண்ட முதலாம் மகேந்திரவர்மன் காஞ்சிக் கோட்டைக்குள் மறைந்து கொண்டான். பல்லவ நாட்டினுள் சுமார் 30 கி.மீ தூரம் இரணடாம் புலிகேசியின் படை நுழைந்ததும் திடீரென மகேந்திரவர்மன் தாக்கினான். உதவி பெறும் நிலையில் இல்லாத சாளுக்கியர் புறமுதுகு காட்டி ஓடினர். இதனைக் காசாக்குடிச் செப்பேடு உணர்த்துகிறது. மற்றும் பல கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகர்கின்றன.

  • முதலாம் நரசிம்மவர்மன் – இரண்டாம் புலிகேசி போர்

  முதலாம் நரசிம்மவர்மன் பல்லவ மன்னனாகப் பதவியேற்றான். ஏற்கெனவே இரண்டாம் புலிகேசி பல்லவரிடம் தோல்வியடைந்துள்ளதால் ஆட்சி மாறியதும் மீண்டும் காஞ்சியின் மீது படையெடுத்தான். இப்போரில் சாளுக்கியருக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது. இதனை உதயசந்திர மங்கலப் பட்டயங்கள், வேலூர்ப் பாளையப் பட்டயங்கள் ஆகியவை கூறுகின்றன. முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை அழித்தான். அங்கு ஒரு வெற்றித் தூணையும் நாட்டினான். ஆதலால் முதலாம் நரசிம்மவர்மனை வாதாபி கொண்டான் என்பர். மணிமங்கலத்தில் ஒருமுறையும், வாதாபியில் இரு முறையும் முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்டான். இதன் மூலமாகச் சாளுக்கிய நாட்டினைச் சுமார் 13 ஆண்டுக் காலம் பல்லவரே ஆட்சி செய்தனர்.

  2.4.2 இராஷ்டிரகூடருடன் போர்

  இராஷ்டிரகூடர் தொடக்கத்தில் சாளுக்கியரின் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். பின்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தன்னாட்சி புரியும் பேரரசர்களாக விளங்கினர். கர்நாடக மாநிலத்தில் பாயும் காவிரி ஆறு முதல் வடக்கே நர்மதை, மகாநதி ஆகிய ஆறுகள் வரை இவர்கள் ஆட்சி பரவியிருந்தது. பல்லவ நாட்டை இறுதிக் கால கட்டத்தில் அரசாண்ட பல்லவர்களுக்கும் இராஷ்டிரகூடர்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்றன.

  • தந்திவர்மன் – துருவன் போர்

  தந்திவர்மன் பல்லவ மன்னனாக இருந்த சமயத்தில் இராஷ்டிரகூட நாட்டில் இரண்டாம் கோவிந்தன் என்பவனுக்கும் துருவன் என்பவனுக்கும் இடையே வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் முதலாம் கிருஷ்ணனின் மகன்கள் ஆவர். இப்போரில் தந்திவர்மன் இரண்டாம் கோவிந்தனுக்கு ஆதரவு அளித்தான். போரில் துருவன் வெற்றியடைந்தான். பின்பு துருவன் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டான்.

  • தந்திவர்மன் – மூன்றாம் கோவிந்தன் போர்

  துருவன் இறந்த பின்னர் இரண்டாம் கோவிந்தன் மகனாகிய மூன்றாம் கோவிந்தன் இராஷ்டிரகூட மன்னன் ஆனான். இராட்டிரகூட நாட்டில் ஆட்சி மாறியவுடன் தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை அவமதித்தான். அதனால் மூன்றாம் கோவிந்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். இப்போரிலும் தந்திவர்மன் தோற்கடிக்கப்பட்டான். இதன் விளைவாகப் பல்லவப் பேரரசு ஒரு சிற்றரசாகத் தாழ்வடைந்தது.

  • மூன்றாம் நந்திவர்மன் – முதலாம் அமோகவர்ஷன் போர்

  தன்னுடைய தந்தையாகிய தந்திவர்மன் தோல்வி அடைந்தது, பல்லவப் பேரரசு ஒரு சிற்றரசாகத் தாழ்ந்த நிலை அடைந்தது ஆகிய இந்த அவல நிலையைப் போக்க மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். இராஷ்டிரகூட அரசனான முதலாம் அமோகவர்ஷன் என்பவனை வென்றான்; தான் ஒரு பேரரசன் என்பதை நிலைநாட்டினான்.

  2.4.3 கங்கருடன் போர்

  கங்கர் என்போர் பண்டைக் காலத்தில் கங்கபாடி என்னும் நாட்டை, தழைக்காடு என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர்கள் ஆவர். தென்னிந்தியாவில் இப்போதுள்ள கர்நாடக மாநிலத்தின் தென்பாகத்தில் இருந்த பண்டைய நாடே கங்கபாடி ஆகும். வடக்கே மரந்தலை நாடும், கிழக்கே தொண்டை நாடும், தெற்கே கொங்கு நாடும், மேற்கே கடலும் இந்நாட்டின் எல்லைகள் ஆகும். பல்லவர் – சாளுக்கியர் போரில், சாளுக்கியருக்கு உறுதுணையாக நின்றவர்கள் கங்கர்கள். எனவே பல்லவர்கள் அடிக்கடி கங்கர்களோடு போரிட்டு வந்தனர்.

  • முதலாம் மகேந்திரவர்மன் – துர்விநீதன் போர்

  சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியும், கங்க அரசன் துர்விநீதன் என்பவனும் உறவினர்கள். பல்லவ-சாளுக்கியப் போரில் இரண்டாம் புலிகேசிக்குத் துர்விநீதன் உதவியளித்தான். துர்விநீதனை அடக்குவது தனது கடமை என எண்ணி முதலாம் மகேந்திரவர்மன் கங்கர்களுடன் போரிட்டு அவர்களைப் பணிய வைத்தான்.

  • முதலாம் நரசிம்மவர்மன் – துர்விநீதன் போர்

  இரண்டாம் புலிகேசி இறந்த பின்னர் (கி.பி. 642) சாளுக்கிய நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. புலிகேசியின் புதல்வர்களான முதலாம் விக்கிரமாதித்தன், ஆதித்தவர்மன் ஆகியோருக்கு இடையே வாரிசு உரிமைப் போர் தொடங்கியது. கங்க நாட்டு அரசன் துர்விநீதன் தன் மகள் வயிற்றுப் பேரனான முதலாம் விக்கிரமாதித்தனுக்கு ஆதரவு அளித்தான். முதலாம் நரசிம்மவர்மன் ஏற்கெனவே கொங்கு நாட்டைக் கங்கர்களிடமிருந்து கைப்பற்றி, அதற்குத் துர்விநீதனின் ஒன்றுவிட்ட தம்பியை அரசனாக்கியிருந்தான். இந்தக் காரணங்களால், துர்விநீதன் முதலாம் நரசிம்மவர்மன் மீது படை எடுத்தான். இப்போரில் துர்விநீதன் வெற்றி பெற்றான்; முதலாம் விக்கிரமாதித்தனைச் சாளுக்கிய நாட்டுக்கு அரசனாக்கினான். ஆயினும் துர்விநீதனின் இவ்வெற்றியால் பல்லவ நாட்டிற்கும், ஆட்சிக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

  • முதலாம் பரமேசுவரவர்மன் – பூவிக்கிரமன் போர்

  சாளுக்கிய நாட்டின் அரசனாகப் பதவியேற்ற முதலாம் விக்கிரமாதித்தன், தனது தந்தை இரண்டாம் புலிகேசிக்கு ஏற்பட்ட இழிவை அகற்றவேண்டும், வாதாபியை அழித்தமைக்குப் பல்லவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று கருதினான். எனவே பல்லவ நாட்டின் மீது படை எடுத்தான். மேற்குக் கங்க அரசன் பூவிக்கிரமன் என்பவன் முதலாம் விக்கிரமாதித்தனுக்கு உதவியாக வந்தான் அப்போது பல்லவ நாட்டை முதலாம் பரமேசுவரவர்மன் ஆண்டு வந்தான். நடைபெற்ற போரில் முதலாம் பரமேசுவரவர்மன் பூவிக்கிரமனிடம் தோல்வி அடைந்தான். இப்போரில் பூவிக்கிரமன் பல்லவரின் வைரக் கழுத்தணியைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் பல்லவப் பேரரசு தாழ்வடைந்தது.

  • இரண்டாம் நந்திவர்மன் – ஸ்ரீ புருஷன் போர்

  இரண்டாம் நந்திவர்மனின் சமகாலத்தவன் கங்க நாட்டு மன்னன் ஸ்ரீ புருஷன் என்பவன் ஆவான். இவன் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து, பல்லவ நாட்டின் மீது படை எடுத்து வந்தான். போரின் தொடக்கத்தில் கங்க மன்னன் இரண்டாம் நந்திவர்மனை வெற்றி கண்டான்; பல்லவரின் வெண்கொற்றக் குடையையும், பெருமானபு என்ற விருதையும் பறித்துக் கொண்டான். ஆனால் போரின் முடிவில் வெற்றி இரண்டாம் நந்திவர்மனுக்கே கிடைத்தது. போரில் இறுதி வெற்றி பெற்ற இரண்டாம் நந்திவர்மன் கங்க மன்னனிடமிருந்து உக்கிரோதயம் என்ற மணிமாலையையும், பட்டவர்த்தனம் என்ற பட்டத்து யானையையும் கைப்பற்றிக் கொண்டான்.

  இவ்வாறாகப் பல்லவர்கள் சோழர், பாண்டியர், களப்பிரர், வாகாடர், சேரர், இலங்கையர் ஆகியோருடனும் போர் புரிந்தனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-10-2019 18:38:31(இந்திய நேரம்)