தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பல்லவர் வரலாற்றுச் சான்றுகள்

  • 2.2 பல்லவர் வரலாற்றுச் சான்றுகள்

    பல்லவர்களைப் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவி வந்தாலும் பல்லவ மன்னர்களையும் அவர்களின் ஆட்சியையும், அவர்கள் செய்த போரையும், அவர்கள் சார்ந்திருந்த சமயத்தையும் பற்றிப் பல வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. அவைகளை நான்கு வகைகளாகப் பிரித்துக் காணலாம். அவையாவன:

    1. இலக்கியச் சான்றுகள்

    2. நினைவுச் சின்னங்கள்

    3. பட்டயங்களும் கல்வெட்டுகளும்

    4. அயல்நாட்டுச் சான்றுகள்

    2.2.1 இலக்கியச் சான்றுகள்

    அப்பர் பாடிய சைவத்திருமுறையில் பல்லவரையும் சமணரையும் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுந்தரர் பாடிய தேவாரத்தின் வாயிலாகப் பல்லவர்கள் பேரரசர்கள் என்னும் உண்மையை அறியலாம்.

    நந்திக்கலம்பகம், பாரத வெண்பா என்னும் நூல்கள் மூன்றாம் நந்திவர்மனின் வீரத்தையும், கொடையையும், அவன் செய்த போர்களையும் குறிப்பிடுகின்றன.

    முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரைப் போரில் வென்று அவர்களின் தலைநகராகிய வாதாபியை வென்றான். இவனுக்குப் படைத் தளபதியான பரஞ்சோதியார் என்பவர் பின்பு சிறுத்தொண்ட நாயனார் என்று சைவ நாயன்மார்களில் ஒருவராகச் சிறப்பிக்கப்பட்டார் என்ற செய்தியினைப் பெரிய புராணம் எடுத்துரைக்கின்றது.

    முதலாம் மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின்பு சைவனாக மாறியவன் எனப் பெரியபுராணம் கூறுகிறது.

    பெரியபுராணம் என்னும் நூல் இயற்றிய சேக்கிழார், பல்லவர்கள் ஆட்சி செய்த தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். ஆதலால் பல்லவர் காலத்துத் தமிழகத்தின் நிலையை அவர் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார். மேலும் முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியையும், சோழநாடு பல்லவர்களுக்கு உட்பட்டிருந்த நிலையையும் பெரிய புராணத்தில் அவர் உணர்த்துகிறார்.

    வைணவப் பெரியோர்கள் பாடியருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும் பல்லவர் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன.

    அவந்தி சுந்தரி கதையில் சிம்மவிஷ்ணு காஞ்சியைக் களப்பிரர்களிடமிருந்து கைப்பற்றினான் என்று கூறப்பட்டிருக்கின்றது.

    2.2.2 நினைவுச் சின்னங்கள்

    பல்லவ மன்னர்கள் எழுப்பிய கற்கோயில்களும், குடைந்த குகைக் கோயில்களும் பல்லவர் வரலாற்றைப் பறை சாற்றும் அழியாச் சான்றுகளாகும். அவற்றுள் மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள கற்கோயில்கள் முக்கியமானவைகளாகும்.

    முதலாம் பரமேசுவரவர்மன் சிறந்த சிவத்தொண்டன். காஞ்சிபுரத்திற்கு அண்மையில் கூரம் என்னும் இடத்தில் சிவன் கோயில் ஒன்று எழுப்பினான். மாமல்லபுரத்திலும் சில கோயில்கள் செதுக்கி வைத்தான்.

    முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில்தான் மாமல்லபுரம் நகரமே அமைக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் இராசசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன் எழுப்பிய கைலாசநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது.

     

    முதலாம் மகேந்திரவர்மன் சித்தன்னவாசலில் குகைக்கோயில் அமைத்துள்ளான். இக்குகைக் கோயிலில் உள்ள ஓவியங்கள் புகழ் பெற்றவை.

    2.2.3 பட்டயங்களும் கல்வெட்டுகளும்

    பல்லவர்கள் விட்டுச் சென்ற செப்புப் பட்டயங்கள் அவர்கள் வரலாற்றை அறிய உதவும் காலக் கண்ணாடிகளாகும். அவர்கள் காலத்துக் கோயில்களில் இடம்பெறும் கல்வெட்டுகள் வரலாற்று உண்மைகள் பலவற்றைத் தருகின்றன. அண்டைநாட்டு மன்னர்கள் வரைந்த பட்டயங்களும், கல்வெட்டுகளும் பல்லவர்கள் வரலாற்றை அறியத் துணை புரிகின்றன.

    பல்லவர்களுடைய கல்வெட்டுகள் மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி, திருக்கழுக்குன்றம், வல்லம், மாமண்டூர், மண்டகப்பட்டு, சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    வயலூர் என்ற இடத்தில் இராசசிம்மன் தூண் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.

    தளவானூர்க் குகைக் கல்வெட்டுகளில் மகேந்திரவர்மப் பல்லவன், தொண்டை மாலையணிந்தவன் எனக் குறிப்பிடப்படுகின்றான்.

    பல்லவர்களின் ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து வடக்கில் கிருஷ்ணா நதி வரையில் பரவிற்று என்பதற்கான சான்றுகள் மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைத்துள்ள சிவஸ்கந்தவர்மனின் பிராகிருத மொழிச் செப்பேடுகளில் காணப்படுகின்றன.

    பல்லவ சமஸ்கிருதச் செப்பேடுகளில் 16 பல்லவ மன்னரின் பெயர்கள் காணப்படுகின்றன. அவர்களின் காலம் கி.பி. 330-575 ஆகும் எனத் தெரிகிறது.

    மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்தான். பின்பு திருநாவுக்கரசரிடம் ஈடுபாடு கொண்டு சைவ சமயத்தைத் தழுவினான். இவன் சிவலிங்க வழிபாடு உடையவன் என்று திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுக் கூறுகின்றது.

    சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனிடம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான் எனவும், பல்லவ குடும்பத்தையே சாளுக்கியர்கள் அழித்துவிட்டனர் எனவும் விக்கிரமாதித்தனுடைய கடவால் செப்பேடுகள் (கி.பி. 674) தெரிவிக்கின்றன.

    இரண்டாம் நந்திவர்மன் தனது பன்னிரண்டு வயதில் அரசு கட்டில் ஏறினான் என்று வைகுண்டப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.

    பட்டத்தாள் மங்கலம் செப்பேடுகள் இரண்டாம் நந்திவர்மனின் தந்தை இரணியவர்மன் என்றும், இம்மன்னன் இளமையிலே அரசாட்சி ஏற்றுக் கொண்டான் என்றும் கூறுகின்றன.

    காசாக்குடிக் கல்வெட்டுகள் இரண்டாம் நந்திவர்மன், சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மனின் வழிவந்தவன் என்றும், மக்களால் அரசாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் தெரிவிக்கின்றன.

    சாளுக்கிய மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள் என்று சோரப் பட்டயம் கூறுகிறது.

    2.2.4 அயல்நாட்டுச் சான்றுகள்

    கி.பி. 640இல் சீனப் பயணியான யுவான்-சுவாங் பல்லவர் தலைநகராகிய காஞ்சிக்கு வந்தார். அவர் காஞ்சியைப் பற்றியும், அங்கு நிலவிய சமயங்களைப் பற்றியும் தமது குறிப்பில் விளக்கியுள்ளார். மேலும் அவர் காஞ்சியின் உயர்ந்த நிலையைப் பலவாறு போற்றிக் கூறுவதோடு, காஞ்சி ஆறு கல் சுற்றளவுடையது என்றும் கூறுகிறார்.

    இலங்கையைச் சார்ந்த மகாவம்சம் என்ற வரலாற்று நூல், பல்லவர் இலங்கை மீது படையெடுத்துச் சென்ற நிகழ்ச்சியைக் கூறுகின்றது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    பல்லவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று வின்சென்ட் ஸ்மித் கூறுகிறார்?
    2.
    பல்லவர் என்ற சொல் எச்சொல்லிலிருந்து திரிந்தது என்கின்றனர்?
    3.
    தொண்டை மண்டலத்தில் இருந்த இரு கோட்டங்கள் யாவை?
    4.
    தமிழ் மொழியைப் பல்லவர்கள் ஆட்சி மொழியாகக் கொண்டார்களா?
    5.
    பல்லவர்களைப் பற்றிய சான்றுகள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன? அவை யாவை?
    6.
    மூன்றாம் நந்திவர்மனைக் குறிக்கும் நூல்கள் எவை?
    7.
    பரஞ்சோதி என்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
    8.
    கற்கோயில்கள் அமைந்த முக்கிய இரு இடங்கள் யாவை?
    9.
    திருநாவுக்கரசரால் மதம் மாற்றப்பட்ட மன்னன் யார்?
    10.
    பல்லவர் ஆட்சியில் வெளிநாட்டில் இருந்து வந்த சீனப் பயணி யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 16:48:13(இந்திய நேரம்)