தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பல்லவ மன்னர்கள்

  • 2.3 பல்லவ மன்னர்கள் (கி.பி. 250-890)

    பல்லவ மன்னர்களின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அவர்கள் வெளியிட்ட பட்டயங்கள் துணை புரிகின்றன. பல்லவ மன்னர்கள் தொடக்க காலத்தில் (கி.பி. 250-575) வெளியிட்ட பட்டயங்கள் பிராகிருத மொழியிலும், இடைக்காலத்தில் (கி.பி. 575-730) வெளியிட்ட பட்டயங்கள் சமஸ்கிருத மொழியிலும், பிற்காலத்தில் (கி.பி. 731-890) வெளியிட்ட பட்டயங்கள் கிரந்தத் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், பட்டயங்களைப் பிராகிருத மொழியில் வெளியிட்டவர்களை முற்காலப் பல்லவர்கள் என்றும், சமஸ்கிருத மொழியில் வெளியிட்டவர்களை இடைக்காலப் பல்லவர்கள் என்றும், கிரந்தத் தமிழில் வெளியிட்டவர்களைப் பிற்காலப் பல்லவர்கள் என்றும் மூன்று பிரிவினராக வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றனர்.

    இவர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராக நாம் கீழே காண்போம்.

    2.3.1 முற்காலப் பல்லவர்கள் (கி.பி. 250-575)

    முற்காலப் பல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். இவர்கள் தொடக்கத்தில் தமிழகத்திற்கு வடக்கே சாதவாகனப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாய் விளங்கினார். அப்பேரரசுக்குத் திறை செலுத்திக் காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செலுத்தினர். சாதவாகனப் பேரரசு கி.பி.225இல் வீழ்ச்சியுற்றது. அதற்குப் பின்னர்க் காஞ்சிபுரத்தில் பல்லவரே முழு ஆட்சிப் பொறுப்பையும் சுமார் கி.பி. 250 அளவில் ஏற்றுக்கொண்டனர். நாளடைவில் அவர்களுடைய ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணாநதி வரை விரிவடைய ஆரம்பித்தது. பல்லவர்கள் சாதவாகனருடன் தொடர்பு கொண்டிருந்ததால், சாதவாகனரின் மொழியாகிய பிராகிருத மொழியிலேயே தொடக்க காலத்தில் பட்டயங்களை வெளியிட்டனர். இப்பட்டயங்கள் மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைக்கப்பெற்றன.

    இப்பட்டயங்கள் வரலாற்று உண்மைகளை அவ்வளவாகத் தரவில்லை. ஆகையால், இவைகளைக் கொண்டு அக்காலத்துப் பல்லவ மன்னர்களைப் பற்றியும், அரசியல் பண்பாட்டு நிலைகளைப் பற்றியும் அவ்வளவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் பப்பதேவன், சிம்ம வர்மன், சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் என்போர் முற்காலப் பல்லவர் என்று கூறப்படுகின்றனர். இவர்களுள் சிவஸ்கந்தவர்மன் முக்கியமானவன்.

    • சிவஸ்கந்தவர்மன்

    சிவஸ்கந்தவர்மன் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சிபுரத்திலிருந்து அரசாண்டான். அப்போது அவனுடைய அரசு வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே தென்பெண்ணை நதிவரையில் பரவியிருந்தது.

    சிவஸ்கந்தவர்மன் வழிவந்தவன் விஷ்ணுகோபன் ஆவான் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஏனென்றால் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இடையில் காஞ்சியை விஷ்ணுகோபன் ஆண்டு வந்ததாகச் சமுத்திரகுப்தன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. (சமுத்திர குப்தன் என்பவன் கி.பி. 335 முதல் 380 வரை வட இந்தியாவில் குப்தப் பேரரசை ஆண்டு வந்த அரசன் ஆவான்.)

    2.3.2 இடைக்காலப் பல்லவர்கள் (கி.பி. 575-730)

    இடைக்காலப் பல்லவர்கள் சமஸ்கிருத மொழியில் பட்டங்களை வெளியிட்டனர். இக்காலத்தின் தொடக்கத்தில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலைக்குக் காரணம் களப்பிரர்களின் படையெடுப்பு என்கின்றனர். குமாரவிஷ்ணு, ஸ்கந்தவர்மன், வீரவர்மன், இரண்டாம் ஸ்கந்தவர்மன், சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு முதலியோர் இக்காலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். புகழ் பெற்ற முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன் முதலியோரும் இக்காலத்தைச் சார்ந்தவர்களே ஆவர்.

    • சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615)

    இடைக்காலப் பல்லவர்களை மகா பல்லவர்கள் என்றும் கூறுவர். ஏனெனில் இவர்கள் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்தனர். இடைக்காலப் பல்லவ மன்னருள் முதல்வன் சிம்மவிஷ்ணு ஆவான். முதலில், தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த களப்பிரர்களை அடக்கினான். பின்பு சோழருடன் போராடி வெற்றிவாகை சூடினான்; சேரனையும், இலங்கை வேந்தனையும் புறங்கண்டான்.

    • முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 615-630)

    சிம்ம விஷ்ணுவை அடுத்து அவனது புதல்வனான முதலாம் மகேந்திரவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு மகேந்திர விக்ரமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவன் விசித்திரசித்தன் எனப் புகழப்பட்டான். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர் காலத்தில் கலையும், கல்வியும் சிறப்புற்று விளங்கின. இவற்றைத் துவக்கி வைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கு உண்டு. இவன் சாளுக்கியரை வென்றான்; கங்கர்களை அடக்கினான்.

    முதலாம் மகேந்திரவர்மன் பொதுப்பணிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்தான். இவன் முதலில் சமணனாக இருந்தான். பின்னர், சைவ சமயத் தொண்டரான திருநாவுக்கரசர் முயற்சியால் சைவ சமயத்திற்கு மாறினான். கட்டடக் கலை, சிற்பக்கலை, சித்திரக் கலை, இசைக்கலை ஆகியவற்றிற்கு இவன் ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கு அரியன.

    • முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668)

    முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்னர் அவனது மகன் முதலாம் நரசிம்மவர்மன் அரியணை ஏறினான். இவனது காலத்தில் அரசியல், பண்பாடு ஆகியவை சிறப்புப் பெற்று விளங்கின. இவன் வாதாபியை ஆண்டு வந்த சாளுக்கியரை வென்றான். இதனால் இவனை வாதாபி கொண்டான் என்றனர். இவ்வெற்றிக்குக் காரணமான தளபதி பரஞ்சோதியே பிற்காலத்தில் சிறுத்தொண்ட நாயனார் எனப் போற்றப் பெற்றார்.

    முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் அரிய பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவன் சாளுக்கியரை வென்றதோடு பாண்டியருடனும், இலங்கையருடனும், கங்கருடனும் போர் புரிந்து வெற்றி பெற்றான். யுவான்-சுவாங் என்ற சீனப் பயணி இவனது ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்குக் கி.பி. 640இல் பயணம் செய்தார். அவர் தமது குறிப்பில் காஞ்சி மாநகரைப் பற்றிச் சிறப்புறக் கூறியுள்ளார்.

    முதலாம் நரசிம்மவர்மன் கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. பல்லவ நாட்டில் மலையைக் குடைந்து பல குகைக்கோயில்களை அமைத்தான். நாமக்கல் மலையடியில் தென் மேற்கு மூலையில் உள்ள நரசிங்கப் பெருமாள் குகைக்கோயில், மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுர மண்டபம், வராக மண்டபம் ஆகிய குகைக் கோயில்கள் இவன் அமைத்தன ஆகும். முதன்முதலாக ஒரே கல்லில் ஆன ஒற்றைக்கல் கோயில்களை அமைத்த பெருமை இவனையே சாரும். மகாபலிபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் தேர்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்கள் ஐந்தும் இவனால் அமைக்கப்பட்டனவே ஆகும்.

    முதலாம் நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இப்பட்டப் பெயர் கொண்டு மகாபலிபுரம் மாமல்லபுரம் என்றும் அழைக்கப்பட்டது. மகாபலிபுரம் இவன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது.

    முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவன் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் பல்லவ அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் இரண்டு ஆண்டுகளே (கி.பி. 668-670) அரசாண்டான்.

    • முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 670-695)

    இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் முதலாம் பரமேசுவரவர்மன் பட்டத்திற்கு வந்தான். இவன் சாளுக்கிய அரசன் முதலாம் விக்கிரமாதித்தனோடும் அவனுக்குத் துணையாக வந்த மேற்குக் கங்க அரசன் பூவிக்கிரமனோடும் செய்த போரில் தோல்வியுற்றான். இவன் சிறந்த சிவத் தொண்டனாக விளங்கினான். காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் என்னும் இடத்தில் இவன் கட்டிய சிவன் கோயில் புகழ் வாய்ந்தது.

    • இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 695-722)

    முதலாம் பரமேசுவரவர்மனுக்குப் பின்னர் அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு இராசசிம்மன் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. இவன் காலத்தில் பல்லவப் பேரரசிற்கும், சாளுக்கியப் பேரரசிற்கும் இடையில் நடைபெற்று வந்த போர் ஓய்ந்திருந்தது. இதனால் உள்நாட்டில் அமைதி நிலவியது. இதைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு கலைத்தொண்டில் ஈடுபட்டான் இராசசிம்மன். இவனுக்குப் பெரும்புகழையும், சைவ சமய வரலாற்றில் அழியாத இடத்தையும் பெற்றுக் கொடுத்தது காஞ்சிபுரத்தில் இவன் எழுப்பிய கைலாசநாதர் கோயில் ஆகும். மகாபலிபுரத்தில் சிறந்து விளங்கும் கடற்கரைக் கோயிலும் இவன் எழுப்பியதே ஆகும்.

    • இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 722-730)

    இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் இரண்டாம் பரமேசுவரவர்மன் அரியணை ஏறினான். இவனது ஆட்சிக் காலத்தில் சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே பகைமை உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்த இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது போர் தொடுத்தான். இப்போரில் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான். இவனுடன் சிம்மவிஷ்ணுவின் பரம்பரையில் வந்த மகாபல்லவர்களின் ஆட்சி முடிந்தது. அதன் பின்பு சுமார் கி.பி. 731 அளவில் சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மன் பரம்பரையில் வந்த பிற்காலப் பல்லவ மன்னர்களின் ஆட்சி தொடங்கியது.

    2.3.3 பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 731 – 890)

    பிற்காலப் பல்லவர்கள் எனக் கூறும்போது பல்லவருக்குள்ளே வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. சிம்மவிஷ்ணுவின் பரம்பரையில் பல்லவ நாட்டை இறுதியாக ஆண்ட இரண்டாம் பரமேசுவரவர்மனுக்குச் சித்திர மாயன் என்னும் மைந்தன் இருந்தான். வயதில் சிறுவனாக இருந்ததால் இவன் அரசபதவிக்கு வருவதைப் பெரியோர்களும், குடிமக்களும் விரும்பவில்லை. யார் அரசபதவிக்கு வருவது என்பது பற்றிக் குழப்பம் ஏற்பட்டது. மக்கள், உயர் அதிகாரிகள், சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் பரம்பரையில் வந்த இரணியவர்மன் அரசபதவிக்கு வருவதையே விரும்பினர். இரணியவர்மன் இக்கோரிக்கையை மறுத்துவிட்டுத் தனது மைந்தன் இரண்டாம் நந்திவர்மனை ஆட்சியில் அமர்த்துவதற்கு வாரிசு உரிமைப் போரில் இறங்கினான். இப்போரில் இரணியவர்மன் வெற்றி பெற்றான்.

    • இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731-795)

    பன்னிரண்டு வயதே நிரம்பிய இரண்டாம் நந்திவர்மன் பல்லவ நாட்டிற்கு மன்னன் ஆனான். இவன் ஆட்சிக்கு வந்ததும் சாளுக்கியருடன் போர் செய்ய வேண்டியதாயிற்று. அரசபதவி கிடைக்காமல் போன சித்திரமாயன் வெகுநாள் பகைவரான சாளுக்கியரின் உதவியை நாடி, காஞ்சியைக் கைப்பற்றி அரச பதவியை இரண்டாம் நந்திவர்மனிடமிருந்து கைப்பற்றினான். இருப்பினும் இரண்டாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட மன்னரின் உதவியை நாடி மீண்டும் காஞ்சியைச் சித்திரமாயனிடமிருந்து கைப்பற்றினான்.

    தனது சொந்த நாட்டை இழந்த சித்திரமாயன் பாண்டிய நாட்டின் உதவியை நாடினான். அப்போது பாண்டிய நாட்டை அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆண்டு வந்தான். கொங்கு நாட்டைப் பல்லவரிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தது. அரிகேசரி பராங்குச மாறவர்மன் பாண்டிய படையுடன் பல்லவ நட்டைத் தாக்கத் தொடங்கினான். தற்போதைய தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டுப் பகுதியில் பல போர்கள் நடைபெற்றன. இரண்டாம் நந்திவர்மன் நந்திபுரம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) கோட்டையில் தங்கி இருந்தபோது சிறைபிடிக்கப்பட்டான். இதனை அறிந்த அவனுடைய படைத்தலைவன் உதயசந்திரன் பெரும்படையுடன் நந்திபுரம் வந்து இரண்டாம் நந்திவர்மனைச் சிறைமீட்டான். இரண்டாம் நந்திவர்மன் அரச பதவியை மீண்டும் பெற்றான்.

    பல போர்களில் ஈடுபட்ட பிற்காலப் பல்லவர்கள் சமய, கலைத் தொண்டுகளிலும் ஈடுபட்டார்கள். இரண்டாம் நந்திவர்மன் சுமார் 65 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இம்மன்னன் அதிக பகைமையை வளர்த்துக் கொண்ட போதிலும் சமயம், கலை இவைகளில் அக்கறை கொண்டிருந்தான். இம்மன்னன் வைணவ சமயத்தைத் தழுவினான். இவனது ஆட்சியில் திருமங்கை ஆழ்வார் என்னும் பெரியார் வாழ்ந்தார்.

    இரண்டாம் நந்திவர்மன் காஞ்சியிலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டினான். அதோடு மட்டுமல்லாமல் காஞ்சியில் பரமேஸ்வர விண்ணகரம், முத்தீச்சுவரர் ஆலயம் முதலிய கோயில்களையும் கட்டினான். இவனது காலத்தில் கல்வியின் நிலை ஓங்கி இருந்தது. கல்வி நிலையங்கள் நிறையத் துவங்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாம் நந்திவர்மன் அவன் காலத்துப் பட்டயங்களைக் கிரந்தத் தமிழில் வெளியிட்டான். இதனால் தமிழ்மொழி இவனது ஆட்சியில் சிறப்புப் பெற்றது.

    • தந்திவர்மன் (கி.பி. 796-846)

    இராஷ்டிரகூடர்களின் ஆதரவுடன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சியைப் பெற்றதால் இராஷ்டிரகூட இளவரசி ரேவாவை இரண்டாம் நந்திவர்மன் மணம் புரிந்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்தவன் தந்திவர்மன் என்பவன் ஆவான்.

    தந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இராஷ்டிரகூட நாட்டில் வாரிசு உரிமைப் போர் நடைபெற்றது. முதலாம் கிருஷ்ணனின் மகன்கள் இரண்டாம் கோவிந்தன், துருவன் ஆகிய இருவருக்கும் இடையே வாரிசு உரிமைப் போர் தொடங்கிற்று. தந்திவர்மன் இரண்டாம் கோவிந்தனுக்கு ஆதரவு அளித்தான். வாரிசு உரிமைப் போரில் துருவன் வெற்றியடைந்தான். தனது பகைவனுக்கு ஆதரவு அளித்த தந்திவர்மனைத் துருவன் பழிவாங்க எண்ணினான்; காஞ்சியைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு கப்பம் செலுத்தினான். துருவன் இறந்தபின்னர் இரண்டாம் கோவிந்தன் மகன் மூன்றாம் கோவிந்தன் இராஷ்டிரகூட மன்னன் ஆனான். இராஷ்டிரகூட மன்னராட்சி மாறியவுடன் தந்திவர்மன் கப்பம் கட்ட மறுத்துவிட்டான். எனவே மூன்றாம் கோவிந்தன் பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரிலும் தந்திவர்மன் தோல்வியுற்றான். இதன் காரணமாகப் பல்லவப் பேரரசு சிற்றரசாக மாறியது.

    • மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)

    தந்திவர்மனுக்கும் கதம்ப இளவரசிக்கும் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். இவன் ஆற்றல் மிக்கவனாக விளங்கினான். இழந்த பல்லவப் பேரரசினை மீட்டான். இவனது வெற்றியை நந்திக்கலம்பகம் விளக்குகின்றது.

    மூன்றாம் நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். இவனுக்கு நந்திபோத்தரசன், நந்தி விக்கிரமவர்மன், விஜய நந்தி, விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள் உண்டு. நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பாராட்டப்படுகிறான். தெள்ளாறு என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியரை வெற்றி பெற்றதால் இவ்வாறு பாராட்டப்படுகிறான். நந்திக்கலம்பகம் அவனுக்காகவே எழுந்த இலக்கியம் ஆகும்.

    தெள்ளாற்றில் மட்டுமின்றி, வெள்ளாறு, கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களிலும் பகைவரை வென்றான். மூன்றாம் நந்திவர்மன் நந்திக்கலம்பகத்தில் ‘அவனி நாராயணன்’ என்றும், ‘ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்’ என்றும், ‘நுரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன்’ என்றும் பாராட்டப் பெறுகின்றான். இவன் காலத்தில் மல்லையிலும், மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இம்மன்னன் கடல் கடந்துசென்று அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான்.

    மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்தான். பாண்டியருடன் போர்செய்து வெற்றி வாகை சூடினான். பாண்டியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல்லவ நாட்டுப் பகுதிகளை மீட்டான். வடக்கிலும், தெற்கிலும் பல்லவப் பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்துகள் இவனது ஆட்சிக் காலத்தில் ஒழிந்தன.

    • நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் (கி.பி. 869-890)

    மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு அவனது முதல் மனைவியின் மூத்த மகன் நிருபதுங்கவர்மன் முடி சூட்டிக் கொண்டான். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் அபாரசிதவர்மன் அரச பதவியைக் கைப்பற்ற எண்ணினான். இதனால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது.

    நிருபதுங்கவர்மன் இரண்டாம் வரகுண பாண்டியனின் உதவியைக் கோரிப் பெற்றுக்கொண்டான். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்குத் துணைநின்றனர். வாரிசு உரிமைப் போரில் அபராசிதவர்மன் வெற்றி பெற்றுப் பல்லவ நாட்டு அரியணையைக் கைப்பற்றிக் கொண்டான்.

    அபராசிதவர்மன் பதினெட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. அப்போது தலையெடுத்து வந்த சோழருடைய ஆதரவை அபராசிதவர்மன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்.

    இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டாம் வரகுண பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இப்பாண்டியன் தன் தந்தை சீமாற சீவல்லபன் இழந்த சோழநாட்டுப் பகுதியை மீட்க எண்ணி, அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டான். இழந்த பகுதியை மீட்டுக் கொண்டான். இவ்வெற்றியால் பாண்டியன் செல்வாக்கு உயர்ந்தது. பாண்டியரால் பல்லவ நாட்டிற்கு ஆபத்து வரும் என எண்ணிய அபராசிதவர்மன் பெரும்படையுடன் சோழ நாட்டுப் பகுதியில் இருந்த பாண்டியருடன் போர் புரியச் சென்றான். கங்க அரசன் முதலாம் பிருதிவிபதியும், விசயாலய சோழனுடைய மகன் ஆதித்த சோழனும் அபராசிதவர்மனுக்குத் துணையாகச் சென்றனர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடந்த போரில் முதலாம் பிருதிவிபதி கொல்லப்பட்டான். அபராசிதவர்மனும், ஆதித்த சோழனும் வெற்றி பெற்றனர். இரண்டாம் வரகுண பாண்டியன் தோல்வியடைந்து மதுரை திரும்பினான். அபராசிதவர்மன் போரில் தனக்கு வெற்றி தேடித் தந்த ஆதித்த சோழனுக்கு, சோழநாட்டில் உள்ள சில ஊர்களைப் பரிசாக வழங்கினான்.

    எனினும் சோழ மன்னன் முதலாம் ஆதித்தன் தனக்குப் பலன் கருதியே இப்போரில் அபராசிதவர்மனுக்குத் துணை நின்றான். விரைவில் அவன் பல்லவ நாட்டைத் தாக்கி அபராசிதவர்மனை வென்று பல்லவ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இச்செய்தியை வீரராசேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிகிறோம். நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் இருவருக்குப் பின் பல்லவர் ஆட்சி சிறுசிறு தலைவர்களின் கைக்கு மாறித் திறன் குன்றி மறைந்து போயிற்று. அச்சமயத்தில் இராஷ்டிரகூட மன்னன் படையெடுத்து வந்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-12-2019 13:19:16(இந்திய நேரம்)