தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படைப்புகள்

  • 2.2 படைப்புகள்

    முன்னர் குறிப்பிட்ட பின்புலத்தில் நோக்கும்பொழுது அரசர்களாலும், சமுதாய மாற்றத்தினாலும், பாடுபொருள் மாற்றத்தாலும் பல புதிய இலக்கியங்கள் தோன்றுவதற்கு இக்காலகட்டம் ஏற்புடையதாக இருந்தது என்பது தெளிவாகிறது

    2.2.1 அரசரின் படைப்புகள்

    பல்லவர் தம் அரசவையைப் புலவரால் அலங்கரித்தனர். சிம்மவிஷ்ணு அவையை வடமொழி வல்லுநரான ‘தாமோதரர்’ எனப் பெயர் கொண்ட பார்வி என்பவர் அலங்கரித்தார். மகேந்திரவர்ம பல்லவனோ தானே வடமொழிப் புலவனாகத் திகழ்ந்தான். மத்தவிலாசப் பிரகசனம் எனும் நூலை மகேந்திரவர்ம பல்லவன் இயற்றியதை மாமண்டூர்க் கல்வெட்டு குறிக்கிறது.

    நரசிம்மவர்ம பல்லவனின் தானைத் தலைவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான, ‘சிறுத்தொண்டர்’ என்ற பரஞ்சோதியார் என்பதும், அவரே வாதாபியுள் நுழைந்து, சாளுக்கியரை வென்று, செல்வத்தைக் கொணர்ந்து நரசிம்மவர்ம பல்லவன் முன் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார்.

    மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
    தொன்னகரம் துகளாத் துளை நெடுங்கை வரையுகைத்துப்
    பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
    இன்னன எண்ணில கவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்

    (சிறுத்தொண்டர்புராணம்:6)

    முதலாம் பரமேசுவரவர்ம பல்லவன் வடமொழிப் புலமை மிக்கவன். மகாபலிபுரத்தில் கணேசர் கோவிலில் இவன் வெட்டுவித்த 11 வடமொழிச் சுலோகங்கள் நயமானவை. அரசனுக்கும், சிவனுக்கும் பொருந்தக் கூடிய சிலேடையாக அவை உள்ளன.

    இராசசிம்ம பல்லவன் சைவ சித்தாந்தத்தில் பேரறிவுடையவன் என்று கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக் கூறுகிறது.

    2.2.2 சமூக மாற்றம் வாயிலான படைப்புகள்

    ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்தியதை மகேந்திரவர்மனின் மத்தவிலாசப் பிரகசனம் கூறுகிறது. பௌத்தம், காபாலிகம், பாசுபதம் முதலிய சமயங்கள் இருந்தன. காஞ்சியில் பல புத்தப் பள்ளிகள் இருந்தன.

    நரசிம்மவர்மன் காலத்தில் வந்த சீனவழிப் போக்கனான இயூன்சங் கி.பி. 642இல் காஞ்சிக்கு வந்தான். ‘காஞ்சியில் நூறு பௌத்த மடப்பள்ளிகள் உள்ளன. பதினாயிரம் பௌத்தத் துறவியர் இருக்கின்றனர். சைவ, வைணவ, சமணர் கோவில்கள் ஏறத்தாழ 80 இருக்கின்றன. திகம்பர சமணர் பலர் இருக்கின்றனர். நான் பாண்டிய நாட்டையும் கண்டேன். அங்குச் சிலரே உண்மைப் பௌத்தராக இருக்கின்றனர். பலர் பொருள் ஈட்டுவதிலேயே ஈடுபட்டுள்ளனர். பாண்டிய நாட்டில் பௌத்தம் அழிநிலையில் உள்ளது. காஞ்சி ஆறுகல் சுற்றளவுடையது' என்று இயூன்சங் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியாவின் பெருமை வாய்ந்த ஏழு நகரங்களுள் காஞ்சியும் ஒன்றாக இருந்தது. வர்ணாசிரம தர்மம் வேரூன்றியது. சலுகை பெறுவோர், உழைக்கும் சாதாரணர் என மக்கள் இரு தரப்பினராயினர். சமயஞ்சார்ந்த வாழ்வியல் நெறி உருவானது.

    2.2.3 பாடுபொருள் மாற்றம் வாயிலான படைப்புகள்

    பல்லவப் பெருநாட்டில் இருந்த பெருங்கோயில்களில் எல்லாம் ஆடவரும், பெண்டிரும் அருட்பாடல்களை இசையுடன் கலந்து பாடினர். பக்திப் பதிகங்கள் தோற்றம் பெற்றன.

    பண்ணியல் பாடல் அறாத ஊர்;
    பத்திமைப் பாடல் அறாத ஊர்;
    பா இயல் பாடல் அறாத ஊர்;
    மாதர் மைந்தர் இசைபாடும் பூம்புகார்

    (சம்பந்தர் பதிகம்: 89)

    என்று சம்பந்தர் பூம்புகார் நகரத்தைப் பற்றிப் பாடுகிறார்.

    ஆழ்வார் அருட்பாடல்கள் வைணவத் தலங்களில் நன்றாய்ப் பாடப்பட்டு வந்தன. ‘இறைவனைத் துதிக்கும் ஊடகமாகச்’ சைவ, வைணவ சமயஞ்சார்ந்த இலக்கியங்கள், ‘பக்தி’யை நுவல் பொருளாகக் கொண்டு எழுந்தன.

    பல்லவர்கள் இந்து மதத்தினர். எனவே, மகாபாரத, இராமாயண நூல்கள் எழுந்தன.

    அறநூல்களும், சமண நூல்களும் சமணர் முற்பகுதியில் செல்வாக்குடன் திகழ்ந்தமைக்குச் சான்றுகளாக உள்ளன.

    அறக்கருத்தமைய எழுதுதல், இதிகாசக் கருப்பொருளைப் படைப்பாக்கம் செய்தல், சிவனையும், திருமாலையும் துதித்தல், பல்லவர் தம் வெற்றிச் சிறப்பை விதந்தோதல் என்ற அளவில் பாடுபொருள் அமையக் காணலாம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களது பெயர்களைக் குறிப்பிடுக

    2.

    மத்தவிலாசப் பிரகசனம் எனும் நூலை இயற்றிய பல்லவ மன்னர் யார்?

    3.

    காஞ்சிக்கு வருகை தந்த சீனவழிப் போக்கன் யார்?

    4.

    இந்தியாவின் பெருமை வாய்ந்த ஏழு நகரங்களில் ஒன்று எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 18:16:48(இந்திய நேரம்)