Primary tabs
-
5.1 சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் - ஓர் அறிமுகம்
சங்ககால இலக்கியம் என்று கூறப்படுவன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் ஆகிய தொகை நூல்கள் எட்டுத்தொகையுள் அடங்குவன. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய நெடும்பாடல்கள் பத்தும் பத்துப்பாட்டுள் அடங்கும்.
தெ. பொ.மீனாட்சிசுந்தரனார், ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம், சு.சக்திவேல் போன்ற தமிழ்மொழி வரலாற்று ஆசிரியர்கள் எட்டுத்தொகையில் உள்ள பரிபாடல், கலித்தொகை ஆகிய இரு நூல்கள் சங்ககாலத்தில் தோன்றியவை அல்ல ; சங்ககாலத்தை அடுத்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை எனக்கொள்கின்றனர். பரிபாடலில் மட்டும் நான் என்ற புதிய தன்மை ஒருமை வடிவம் காணப்படுவது கொண்டும், கலித்தொகையில் மட்டும் கள் எனும் அஃறிணைப் பன்மை விகுதி உயர்திணைப் பன்மையில் வருவது கொண்டும் அவர்கள் இம்முடிவுக்கு வருகின்றனர்.
இவ்வழக்குகள் மிகச் சிறுபான்மையானவை. அகநானூற்றில் (43-ஆம் பாடல்) பாடிய நல்லந்துவனாரே பரிபாடலிலும் கலித்தொகையிலும் பாடியுள்ளார். ஆகவே கலித்தொகையும் பரிபாடலும் சங்ககால இலக்கியங்கள் என்று கொள்வதே பொருந்தும்.
எனவே இப்பாடத்தில் பாட்டும் தொகையும் ஆகிய பதினெட்டு நூல்களையும் சங்ககால நூல்களாகவே கொண்டு அவற்றின் வழிநின்று சங்ககாலத் தமிழ்மொழியின் இயல்புகள் காட்டப்படுகின்றன.