தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

உருபனியல் - பெயர்ச்சொல்

  • 5.3 உருபனியல் - பெயர்ச்சொல்

    சங்ககாலத் தமிழில் மூவிடப்பெயர்களில் ஏற்பட்ட சிற்சில மாற்றங்களைக் காணலாம். மேலும் அஃறிணைப் பன்மை உணர்த்தும் முறை, உயர்வு ஒருமைப் பெயர்கள், உயர்திணையில் இரட்டைப் பன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இயல்புகளைச் சங்ககாலத் தமிழில் காணலாம்.

    5.3.1 மூவிடப் பெயர்கள்

    ஒரு மொழியில் பொதுவாகச் சொற்களும் சொற்றொடர்களும் மாறும் இயல்பை உடையவை. ஆயின் மூவிடப்பெயர்கள் அத்தன்மையன அல்ல ; என்றும் மாறா இயல்பினை உடையனவாக விளங்குவன. எனினும் காலப்போக்கில் இவையும் சிறிது மாறுதல் அடைகின்றன. அந்த மாறுதல் மிக மிகச் சிறிதே. சங்ககாலத் தமிழிலும் மூவிடப் பெயர்கள் சிறு மாறுதல்களை மட்டுமே பெற்றுள்ளன.

  • தன்மை இடப்பெயர்
  • தொல்காப்பியர் காலத்தில் தன்மை ஒருமைப் பெயராக யான் மட்டுமே வழங்கியது. ஆனால் சங்ககாலத் தமிழில் யான் என்பதோடு நான் என்ற புதிய வடிவமும் வழங்குகிறது. ஆயினும் யான் என்பதே மிகுதியாக வழங்குகிறது. தமிழ் மொழி வரலாற்றில் பரிபாடலில்தான் முதன்முதலாக நான் வருகிறது. அது இரண்டு இடங்களில் மட்டும் வருகிறது.

    நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைந்தடத்து

    (பரிபாடல், 6 : 87)

    அவன் கள்வன் ; கள்வி நான் அல்லேன்

    (பரிபாடல், 20 : 82)

    தன்மைப் பன்மையில் யாம், நாம் என்னும் பழைய வடிவங்களே வழங்கின. யாம் என்பதற்கு இணையாக யான் இருக்கிறது ; நாம் என்பதற்கு இணையாக நான் என்பது ஒப்புமை ஆக்கமாகச் சங்க காலத்தில் வந்தது எனலாம். தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்தி்லும் தன்மை இடம் உயர்திணைக்கு மட்டுமே உரியதாக இருந்தது.

  • முன்னிலை இடப்பெயர்
  • நீ, நீயிர் என்பன தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய முன்னிலைப் பெயர்கள். சங்ககாலத் தமிழில் நீயிர் என்பதோடு நீர் என்ற பிறிதொரு வடிவமும் காணப்படுகிறது. நீயிர் என்பதை விட இதுவே மிகுதியாக வழங்குகிறது. நீயிர் நான்கு இடங்களில் பயில, நீர் என்பதோ பதினாறு இடங்களில் பயில்கிறது.

    குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே

    (புறநானூறு, 110 : 1)

    முன்னிலை இடப்பெயர்கள் வேற்றுமை உருபேற்கும் போது நீ என்பது நின் என்றும், நீயிர் என்பது நும் என்றும் குறுகும் என்பர் தொல்காப்பியர். சங்ககாலத்தில் நின் என்பதோடு உன் என்பதும், நும் என்பதோடு உம் என்பதும் புதிய வடிவங்களாக வழங்குகின்றன.

  • படர்க்கை இடப்பெயர்
  • படர்க்கைக்குரிய இடப்பெயர்கள் தான், தாம் என்பவை. இவை இருதிணைப் பொதுப்பெயர்கள் ஆகும். ஆயினும் இவற்றுக்குப் பதிலாகத் தொல்காப்பியர் காலத்திலேயே அவன், அவள், அவர், அது, அவை முதலான ஐம்பால் வேறுபாடு காட்டும் சுட்டுப் பெயர்கள் படர்க்கை இடத்தை உணர்த்த வந்துவிட்டன. இதனால் தான், தாம் ஆகியன சிறிது சிறிதாகச் செல்வாக்கு இழக்கத் தொடங்கின.

    சங்ககாலத் தமிழிலும் சுட்டுப் பெயர்களே படர்க்கை இடத்தில் மிகுதியாக வழங்குகின்றன. இருப்பினும் தான், தாம் ஆகியவையும் மிகச் சிறுபான்மையாகப் படர்க்கையில் வழங்குகின்றன. இவை இரண்டும் தமக்கு முன்னேரோ பின்னரோ வரும் வினை கொண்டும், பெயர் கொண்டும் பால் வேறுபாடு அறியப்படுகின்றன.

    யாரும் இல்லைத் தானே கள்வன் (ஆண்பால்)

    (குறுந்தொகை, 25 : 1)

    தான் அஃது அறிந்தனள் கொல்லோ (பெண்பால்)

    (நற்றிணை, 53 : 1-2)

    செல்ப என்ப தாமே (பலர்பால்)

    (நற்றிணை,73 : 6)

    5.3.2 அஃறிணைப் பன்மை உணர்த்தும் முறை

    அஃறிணைப் பன்மைக்குரிய விகுதி கள் என்பது, மரம்+கள்= மரங்கள். இவ்விகுதி பெறாமலே ஒருமைச் சொல் பன்மை உணர்த்தும் முறை தொல்காப்பியர் காலத்தில் இருந்தது. பெயர்ச்சொல்லுக்குப் பின்வரும் வினைமுற்று ஒருமையாக இருந்தால் பெயர்ச்சொல் ஒருமை. வினைமுற்று பன்மையாக இருந்தால் பெயரும் பன்மைச் சொல் ஆகும்.

    (எ.டு)
    மரம் வீழ்ந்தது
    மரம் வீழ்ந்தன

    சங்ககாலத் தமிழிலும் அஃறிணைப் பன்மை உணர்த்தப்படும் முறையில் கள் விகுதி சேராமலும், சேர்ந்தும் வருவதைக் காணலாம்.

    கள் விகுதி இல்லாமல் வரும் அஃறிணைச் சொற்கள் தம் முன்னோ பின்னோ வரும் பலவின்பால் வினைமுற்றுகளால் பன்மை என அறியப்படுகின்றன. இம்முறையே சங்க இலக்கியத்தில் மிகுதியாகக் காணப்படுகிறது.

    கலுழ்ந்தன கண்ணே

    (நற்றிணை, 12 : 10)

    நெகிழ்ந்தன வளையே

    (நற்றிணை, 26 : 1)

    கண், வளை எனும் அஃறிணைச் சொற்கள் முறையே கலுழ்ந்தன, நெகிழ்ந்தன எனும் பன்மை வினைமுற்றுகள் கொண்டு முடிந்திருப்பதைக் காணலாம்.

    சங்க இலக்கியத்தில் அஃறிணை ஒருமைப் பெயர்ச் சொற்களோடு கள் விகுதி சேர்த்துப் பன்மையாக்குதல் 25 இடங்களில் காணப்படுகிறது.

    மயில்கள் ஆல (ஐங்குறுநூறு, 29: 1)
    கண்களும் கண்களோ (கலித்தொகை, 39 : 42)

    5.3.3 உயர்வு ஒருமைப் பெயர்கள்

    தொல்காப்பியர் காலத்தில் ஒருவனையும் ஒருத்தியையும் உயர்வு அல்லது மரியாதை கருதி, ஒருவர் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது. அவன், அவள் என்று குறிக்கப்படும் ஓர் ஆணையும் பெண்ணையும் உயர்வு கருதி அவர் என்று குறிப்பிடும் வழக்கமும் இருந்தது.

    சங்ககாலத் தமிழில் யாம், நீயிர், நீர், தாம் என்னும் பன்மை இடப் பெயர்களும் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்குகின்றன.

    பெரும்பேது உறுவள் யாம் வந்தனம் எனவே

    (நற்றிணை, 6 : 11)

    இந்த அகப்பாடல் வரியில், தலைவன் தன் உயர்வு தோன்றத் தன்னை யாம் என்று குறிப்பிடுகிறான்.

    படர்க்கையில் தாம் என்ற பன்மைப் பெயரும், அவர், இவர் என்பன போன்ற பன்மைச் சுட்டுப் பெயர்களும் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்குகின்றன.

    செல்ப என்ப தாமே

    (நற்றிணை, 73 : 6)

    இவ்வரியில், தலைவி, தாம் என்று பன்மைச் சொல்லால் தலைவனைக் குறிப்பிடுகிறாள்.

    கண்ணீர் அருவி ஆக
    அழுமே தோழி அவர் பழமுதிர் குன்றே

    (நற்றிணை, 88 : 8-9)

    இவ்வரிகளில் தோழி தலைவனை அவர் என்று கூறுவது காண்க.

    மேலும் காதலர், சான்றோர் போன்ற பலர்பால் விகுதிபெற்ற சொற்கள் ஒருவரைக் குறிக்கும் உயர்வு ஒருமைப் பெயர்களாகச் சங்க நூல்களில் பயில்கின்றன.

    நன்றே காதலர் சென்ற ஆறே

    (ஐங்குறுநூறு, 431 : 1)

    சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே

    (குறந்தொகை, 102 : 4)

    5.3.4 உயர்திணையில் இரட்டைப்பன்மை (Dual plural) விகுதிகள்

    அரசன் என்ற சொல் படர்க்கை ஒருமைப்பெயர். மரியாதை காரணமாக அரசனை அரசர் என்று பழந்தமிழ் மக்கள் கூறினர். அரசர் என்ற பன்மைச் சொல் ஒருவரை மட்டும் குறிக்க வந்ததனால், அரசர் பலரைக் குறிக்க, அரசர் என்பதோடு அஃறிணைப் பன்மை விகுதியாகிய கள் என்பதைச் சேர்த்து அரசர்கள் என்றனர்.

    உலகு ஏத்தும் அரசர்கள்

    (கலித்தொகை, 25 : 3)

    அர்+கள் அல்லது இர்+கள் என்னும் இரட்டைப் பன்மை விகுதி கொண்டு உயர்திணைப் பன்மையை உணர்த்துதல் தமிழ்மொழி வரலாற்றில் முதன்முதலில் கலித்தொகையிலேயே காணப்படுகிறது.

    5.3.5 பால் காட்டும் புதிய சொற்கள்

    சங்ககாலத்தில் உயர்திணைப் பெயர்ச்சொற்களில் பால் காட்டுவதற்குச் சில புதிய சொற்கள் வந்து வழங்குகின்றன. ஆளன் என்பது ஆண்பாலையும் ஆட்டி என்பது பெண்பாலையும் ஆளர் என்பது பலர்பாலையும் குறிக்க வருகின்றன.

    ஆளன்
    - பண்பிலாளன்
    (புறநானூறு, 194: 5)
    ஆட்டி
    - அயல் இல்ஆட்டி
    (நற்றிணை, 65: 1)
    ஆளர்
    - இருபிறப்பாளர்
    (திருமுருகாற்றுப்படை, 182)

    மொழியியலார் இவற்றைச் சங்ககாலத்தில் புதியனவாகத் தோன்றிய விகுதிகள் எனக்குறிப்பிடுகின்றனர். ஆனால் இவற்றில் உள்ள அன், இ, அர் போன்றவை முன்பே இருந்த விகுதிகள் என்பதை நாம் உணரமுடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-08-2017 13:03:07(இந்திய நேரம்)