Primary tabs
நாட்டுப்புறவியலில் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பாடல்கள் பல உள்ளன. அதைப்போல் மக்களிடம் மிகவும் அறிமுகமான கதைகளும் காணப்படுகின்றன.
இம்மக்களின் வாழ்வில் தெய்வத்திற்கு முக்கிய இடமுண்டு. இதில் பிள்ளையார் மீது பக்தி கொண்டு பாடும் பாடலில், அவருக்குப் படைக்கும் பல்வேறு வகையான பணியாரமும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
மாட்டுக் கொளப் படையில்
மாவுருண்டை ஆயிரமாம்
எருதுக் கொளப் படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப் படையில்
அதிரசம் ஆயிரமாம்
கண்ணுக் கொளப் படையில்
கடலுருண்டை ஆயிரமாம்
குட்டிக் கொளப் படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்
பண்ணிக் கொளப் படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் - எங்க
சப்பாணிப் பிள்ளையாருக்கு(நாட்டுப்பாடல் - நா.வானமாமலை)
என்ற நாட்டுப்புறப் பாடல் வழங்கும் தகவல்கள் பலவாகும்.
இப்பாடலில் எதுகை, மோனையுடன், பேச்சு வழக்குச் சொற்களைக் கொண்டு, பிள்ளையார்க்குப் பிடித்தமான பணியார வகைகளை அடுக்கிச் சொல்லிச் செல்லும் பாங்கு பாராட்டுதற்குரியது. வாய்மொழி இலக்கியம் என்பதால் மனத்தில் பதிவு செய்து கொள்வதற்கு ஏற்ற முறையில் எளிய சொற்களால் இனிமை விளங்கப் பாடல் வரிகளைப் படைத்துள்ளனர்.
நாட்டுப்புறவியலில் நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் இரண்டனுக்கும் மிக முக்கியப் பங்குண்டு. எந்த ஒரு கருத்தையும் பாடல் வாயிலாகவோ கதை வாயிலாகவோ சொல்லுதல் என்பது அன்று தொட்டு இன்று வரை நின்று நிலவிவரும் பண்பு ஆகும்.
நாட்டுப்புறக் கதைகளை அறிஞர்கள் அவரவர் தம் அடிக்கருத்தியல் (Theme) சிந்தனைக்கு ஏற்பப் பகுத்துக் கூறுகின்றனர். இதில் பிரிட்டானிகா கலைக் களஞ்சியம் (Encyclopedia Britannica Vol.9 P519) கீழ்க்காணும் வகையில் நாட்டுப்புறவியல் கதைகளைப் பகுத்துக் கூறுகிறது.
1) புராணக் கதை (Myth)
2) பழங்கதை (Legend)
3) பொதுமக்கள் கதை (Popular Tale)எடுத்துக்காட்டாக, நாள்தோறும் மக்களின் வாழ்வில் இடம்பெறும் கீழ்க்காணும் பழங்கதை ஒன்றினைத் தெரிந்து கொள்ளலாம்.
ஏழை விறகு வெட்டி காட்டுக்குச் செல்கிறான். விறகு வெட்டும் போது அவனது கோடரி கைதவறி ஆழமான குளத்தினுள் விழுந்து விடுகிறது. வருந்தி அழுகிறான். அவன் முன் ஒரு தேவதை தோன்றுகிறாள். ஒரு தங்கக்கோடரியை எடுத்து வந்து ”இதுவா உன்னுடையது?” என்று கேட்கிறாள். ”இல்லை” என்கிறான். அடுத்து வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து காட்டுகிறாள். ”இதுவும் இல்லை” என்கிறான். இறுதியில், அவனது இரும்புக் கோடரியை எடுத்து வந்ததும், ”இதுதான் என்னுடையது” என்கிறான். அவனது நேர்மையைப் பாராட்டி மூன்று கோடரிகளையுமே அவனுக்குக் கொடுத்து விடுகிறாள். அவன் மகிழ்வோடு வீடு திரும்புகிறான்.
இவ்வாறு வாழ்வின் அன்றாடப் பிரச்சனையே கதையின் கருவாக விளங்குகிறது. மனிதனின் நேர்மை உணர்வும், அது பாராட்டப்படும் பொழுது ஏற்படும் மகிழ்வும் பேசப்படுகின்றன. நாட்டுப்புறவியல் கதைகள் அறக்கருத்தை அறியவும் சமுதாயத்தை அறியவும் பயன்பட்டன. நாட்டுப்புறவியல் வழக்காறுகள் அவர்தம் வாழ்வோடு தொடர்பு கொண்டு வாழும் சிறப்பினையும் பெற்றன.