Primary tabs
-
2.5 நாட்டுப்புறவியல் - வளர்ச்சி
நாட்டுப்புறவியல் இன்று பல்வேறு நிலையில் வளர்ந்து கொண்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டுப்புறவியல் தொடர்பாகப் பல கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. பல ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பிற துறைகளுடன் தொடர்பு படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையையும் எய்தியுள்ளது.
நாட்டுப்புறவியல் தொடர்பான கருத்துக்களைப் பலர் அறிந்து கொள்ளவும், அக்கருத்துகளை வீச்சுடன் ஆராய்ந்து தெளிவு பெறவும் ‘ஆய்வுக் களம்’ என்பது முக்கியமான ஒன்று. நீண்ட நெடுங்காலமாக இது போன்ற கருத்தரங்குகள் எல்லாத் துறைகளிலும் நடைபெற்று, கருத்தரங்குகளில் விவாதிக்கக் கூடிய கருத்துகள் நூல்களாக வெளிவருவது மிகவும் பயன் விளைவிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
அத்தகைய கருத்தரங்குகளின் முயற்சியே நாட்டுப்புறவியல் துறையின் வளர்ச்சிக்கு அடிகோலியது. அத்தகைய முயற்சிகள் இத்துறையில் தற்போது முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பாக, தூய சவேரியர் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை போன்றவை பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. நாட்டுப்புறவியல் துறையோடு இணைந்துள்ள பல்வேறு துறைகளுடன் தொடர்பு கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகின்றன.
நாட்டுப்புறவியல் ஆய்வினைப் பொதுவாகப் பரிணாம வரலாற்றாராய்ச்சி, குறிப்பிட்ட கால ஆராய்ச்சி என இருவகையாக அறிஞர்கள் வகைப்படுத்துவர். தொடக்க நிலையில் நாட்டுப்புறவியல் ஆய்வானது நாட்டுப்புற இலக்கியங்களை வரையறை செய்தல், வகைப்படுத்தல், அவற்றின் தோற்றம், அவற்றின் பண்பும் பயனும் காணுதல் ஆகிய முறைகளிலே ஆய்வு செய்வதாக அமைந்திருந்தது. நாட்டுப்புறவியல் துறையின் தற்போதைய வளர்ச்சி நிலையில் ஆய்வானது கோட்பாட்டோடு பொருத்திப் பார்க்கும் முயற்சியினை எட்டியுள்ளது. அவற்றுள் அமைப்பியல் ஆய்வு, செயல்திற ஆய்வு, உளவியல் ஆய்வு, வரலாற்றுமுறை ஆய்வு போன்ற ஆய்வு முறைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இன்றைய நிலையில் பொதுவாக அனைத்துப் பல்கலைக் கழகங்களும் நாட்டுப்புறவியல் தொடர்பான ஆய்விற்கு ஆதரவு தந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுப்புறவியல் வழக்காறுகள் ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு தனித்தனித் துறையாகச் சிந்தித்து எழுதும் அளவுக்கு அளவில்லாக் கருத்துக்களையும், தரவுகளையும் கொண்டு விளங்குகின்றன. ஒவ்வொரு பகுதியையும் உளவியல், மொழியியல், மானிடவியல், சமுதாயவியல் என்று பிற துறைகளோடு இணைத்துச் சிந்திக்கும் பொழுது எதிர்காலத்தில் எல்லாத் துறைகளிலும் நாட்டுப்புறவியல் ஓரிடத்தைப் பெற்றுவிடும். மேலும் அதன் வளமையில் அந்தந்தத் துறைகளில் தனக்கெனச் சிறந்த பங்களிப்பினைச் செய்து வளப்படுத்திக் கொள்ளமுடியும். இவ்வாறு நாட்டுப்புறவியலின் சிறப்புகள் வளப்பம் மிக்கவைகளாக உள்ளன.