Primary tabs
-
2.4 நாட்டுப்புறவியல் - பதிவுகள்
நாட்டுப்புற இலக்கியமானது காலம் காலமாக மக்களின் வாய்மொழி வழியாகவே பரப்பப்பட்டு வந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவ்வாறு பரப்பப்பட்டதன் வழியே அவ்விலக்கியமானது ஒருவரிடமிருந்து மற்றவர்க்கும், ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்திற்கும், ஒரு பண்பாட்டிலிருந்து மற்றொரு பண்பாட்டிற்கும் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறே இன்றும் பல வழக்காறுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாய்மொழி வழியாகப் பதிவு செய்யப்படுகின்ற போது நாட்டுப்புற இலக்கியங்களினுடைய முக்கியமான பண்புகளில் ஒன்றான திரிபு வடிவம் என்பது ஏற்படுகின்றது.
இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாட்டுப்புற இலக்கியங்களின் தேவை கருதி அவற்றினைப் பதிவு செய்வதில் சில படிநிலைகள் ஏற்பட்டுள்ளன. இப்படிநிலைகளில் குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்கள் எழுத்தின் மூலமாகப் பதிவு செய்யப்படுகின்ற போது, மேற்குறித்த திரிபு வடிவம் என்பது நீங்கி, நிலைத்ததொரு வடிவம் ஏற்படுகின்றது. எழுத்தின் மூலமாகப் பதிவு செய்யப்படுவதனால் பதிவு செய்யப்படுகின்ற நாட்டுப்புற இலக்கியத்தின் பரவல் தன்மை விரிவடைகின்றது.
நாட்டுப்புறவியலைப் பற்றிய நூல்கள் பல வந்துள்ளன. அவற்றுள் குறிப்பாக நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், நாட்டுப்புற நடனங்கள் போன்றவற்றிற்கு அதிகமான, தெளிவான நூல்கள் வந்துள்ளன எனக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழ் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி மு.அருணாசலம் எழுதிய காற்றில் வந்த கவிதை என்னும் நூலே 1943இல் முதலில் வெளிவந்தது எனலாம். 1943இல் வெளிவந்த இந்நூலுக்குப் பிறகு இன்று வரை(1975) சுமார் 30 நூல்கள் வந்துள்ளன என்று சு.சண்முகசுந்தரம் தம்முடைய நாட்டுப்புற இயல் என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தஞ்சைத் asதமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆறு.இராமநாதன் தொகுத்து வெளியிட்டுள்ள நாட்டுப்புறப் பாடல் நூல் சிறப்பானது. இத்தொகுப்பில் ஒவ்வொரு வட்டாரத்திற்கெனப் பகுதி பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் முதன்முதலில் 1869இல் கதைப்பாடல் வெளியிடப் பட்டதாகக் குறிப்பிடுவர். இதில், ஏ.என்.பெருமாள் எழுதிய கதைப் பாடல் பற்றிய நூல் (1987) குறிப்பிடத்தக்கது. இக்கதைப் பாடல்களுள் நல்லதங்காள் கதை, மதுரைவீரன் கதை போன்ற கதைப் பாடல்கள் பற்றிய ஆய்வுகளும், நூல்களும் தொடர்ந்து வெளிவருகின்றன. இவ்வாறாக நாட்டுப்புற இலக்கியம் தொடர்பான பல சிறந்த நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் மு.வை.அரவிந்தனின் நாட்டுப்புறப் பாடல்கள், செ.அன்னகாமுவின் ஏட்டில் எழுதாக் கவிதைகள், ஆறு.இராமநாதனின் நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், நாட்டுப்புறக் கதைகள், தமிழில் புதிர்கள்-ஓர் ஆய்வு, அ.நா.பெருமாளின் நாட்டார் கதைகள், ச.வே.சுப்ரமணியத்தின் தமிழில் விடுகதைகள் போன்று பல நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நாட்டுப்புறவியல் துறையின் வளர்ச்சிக்கு இதழ்களின் பங்கு குறிப்பிடத் தகுந்தது. தொடக்க நிலையில் தாமரை, கலைமகள், மஞ்சரி போன்ற இதழ்களில் நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழி போன்றவை இடம் பெற்றுள்ளன. இவை தவிர அமுதசுரபி, ஆனந்த போதினி, ஆனந்தவிகடன், கல்கி, சுதேசமித்திரன், தீபம் போன்ற இதழ்களிலும் இடம் பெற்றுள்ளன. மேலும், நாட்டுப்புறவியல் துறை சார்ந்தே வெளிவந்த, வெளிவரக் கூடிய சில இதழ்களை நாம் இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நா.வானமாமலை அவர்களால் பாளையங்கோட்டையில் 1964இல் ஆராய்ச்சி என்ற இதழ் தொடங்கப்பட்டு, அதில் நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புறவியலோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியத் தமிழ் நாட்டுப்புறவியல் கழகத்தின் காலாண்டு இதழான நாட்டுப்புறவியல் என்ற இதழ் 1983இல் வெளிவந்தது. 1987இல் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கழக இதழான நாட்டார் வழக்காற்றியல் என்ற இதழ் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
மக்கள் தொடர்புச் சாதனங்களாகக் குறிப்பிடப்படுகின்ற வானொலி, தொலைக்காட்சி போன்றவை நாட்டுப்புறவியலுக்கு மிகவும் பயனுள்ளவையாக விளங்குகின்றன. வானொலியும், தொலைக்காட்சியும் கற்றவர்களிடம் மட்டுமல்லாது கல்லாத பாமரர்களிடமும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளன. இம் மக்கள் தொடர்புச் சாதனங்கள் நாட்டுப்புறவியலுக்குப் பயனுள்ளவையாக அமைகின்றன என்பதற்குப் பல சான்றுகள் இருப்பினும் இங்கு நாம் ஒரு சான்றினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பேரா.அ.மு.பரமசிவானந்தம் தமது வாய்மொழி இலக்கியம் என்ற நூலை எழுதுவதற்கு வானொலியின் ஊக்கமே காரணம் என்று கூறுகின்றார். எனவே வானொலியின் வழி நாம் இதன் பயனை உணர்ந்து கொள்ள முடிகின்றது. மேலும், திரு.செ.அன்னகாமு திருச்சி வானொலி நிலையத்தில் தம்முடைய ஏட்டில் எழுதாக் கவிதைகள் ஒலிபரப்பப்பட்டு ஒலிப்பதிவும் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவதன் மூலம் வானொலி நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாக விளங்குவதை அறிய முடிகின்றது.
இன்றளவில் குறிப்பாக மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற வானொலி நிலையங்கள் நாள்தோறும் சில குறிப்பிட்ட நேரங்களில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை ஒலிபரப்புச் செய்து வருகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும்பாலும் தமிழர் திருநாள் போன்ற விழா நாள்களில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளையும் நாட்டுப்புறம் தொடர்பான விளம்பரங்களையுமே ஒளிபரப்பி வருகின்றன.
எந்த ஒரு படைப்பும் நிலையான தன்மையினைப் பெறவேண்டுமானால் அப்படைப்பு நாள்தோறும் மக்களின் பயன்பாட்டில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுது தான் அப்படைப்பு மக்களால் மறக்கப்படாமல் வாழும். அதே சமயம் மறைக்கப்படாமலும் போற்றப்படும். இவ்வகையில் நாட்டுப்புறவியல் நிலைப்பாட்டினைப் பார்க்கும்போது இவ்விலக்கியம் காலத்தின் தேவைக்கு ஏற்பத் தனது தனித்தன்மையை இழக்காமல் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
குறிப்பாகக் கல்வி நிறுவனங்களும், ஆய்வுகளும் நாட்டுப்புற இலக்கியத்தின் நுணுக்கங்களைக் கண்டறிவதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. எனவே மக்கள் வழக்காற்று இலக்கியம் அறிவு சார்ந்த மக்களின் சிந்தனைக்கு உரியதாக நிலைத்த பதிவினைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.