Primary tabs
-
1.0 பாட முன்னுரை
இந்த நூற்றாண்டில் தமிழ் மொழியானது பல துறைகளாகப் பிரிந்து வளர்ந்து வருகின்றது. அவற்றுள் ஒன்று நாட்டுப்புறவியல் துறையாகும். 'நாட்டுப்புறம்' என்ற சொல்லானது கல்வி வாய்ப்புகள் குறைந்த, நகர நாகரிகம் இல்லாத, கிராமியப் பகுதிகளை குறிக்கும். நகர்ப் புறங்களில் வாழும் கிராமியக் குணம் கொண்ட கூறுகளையும் 'நாட்டுப்புறம்' என்று அழைக்கலாம். கிராமியக் குணம் கொண்ட அனைத்தையும் இச்சொல்லால் குறிக்கலாம். கிராமங்களில் வாழும் மக்களின் கலைகளையும் பண்பாட்டையும் இலக்கியங்களையும் பற்றி அறிந்து கொள்ளும் இயலே நாட்டுப்புற இயலாகும்.
'நாட்டுப்புறவியல்' என்ற இச்சொல் சிறியதாயினும் இதன் பரப்பு (Area) பரந்துபட்டதாகும் இதன் பரப்பிற்குள் அடங்குவனவற்றை நாட்டுப்புறக் கலை, நாட்டுப்புறப் பண்பாடு, நாட்டுப்புற இலக்கியம் என வகைமைப்படுத்துவர். இவற்றுள் நாட்டுப்புற இலக்கியம் எனும் வகைமையில் பாடமாக அமைய இருக்கின்ற கதைப்பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்பாடத்தில் நாட்டுப்புறவியலின் தோற்றம், அதன் வகைமைகள், கதைப்பாடல்கள் பற்றிய குறிப்புகள், அதன் இயல்புகள் பற்றிய கருத்துகள் தொகுத்துக் கூறப்படுகின்றன.