தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டுப்புற இலக்கியம்

  • 1.2 நாட்டுப்புற இலக்கியம்

    புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்களாகும். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்களாகும். நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், புராணங்கள் முதலானவை இவ் வகைமைக்குள் இடம் பெறும் கூறுகளாகும். இவற்றுள் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறப்பாடல்கள் ஆகிய இரண்டும் நாட்டுப்புறக் கதைப்பாடல்களோடு கொண்டுள்ள உறவு குறித்துச் சிறிது விரிவாகக் காணலாம்.

    1.2.1 நாட்டுப்புறக் கதைகள்

    சிறிது கற்பனையும் சிறந்த சொல்லாற்றலும் கொண்ட எவரும் நாட்டுப்புறக் கதைகளைப் புனையலாம். தற்காலத்திய புதினத்தையும் சிறுகதையையும் போன்று உரைநடைவடிவில் நாட்டுப்புறக் கதைகள் அமைந்துள்ளன. ஆனால் இவை குறிப்பிட்ட ஒருவரால் எழுதப்படாதவை. வாய்மொழியாக வாழும் இயல்புடையவை. சூழலுக்கேற்ப மாறும் தன்மையுடையவை.

    பாட்டி கதைகள் என்றழைக்கப்படும் கதைகளுக்கு உரிய இயல்புகள் நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்கும் பொருந்தும். நாட்டுப்புறக் கதைகளுக்கும் நாட்டுப்புறக் கதைப் பாடல்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளுள் ஒன்று கதைப் பாடல்கள் பாடப் படுபவை, கதைகள் எடுத்துரைக்கப் படுபவை என்பதே. நாட்டுப்புறக் கதைகளை வகைப்படுத்த முயன்ற கி.இராஜநாராயணன், ‘இது பெரிய சமுத்திரம்; இதற்குள் எத்தனையோ அடங்கிக் கிடக்கின்றன’ என்று கூறுகின்றார்.

    இதற்குள் மக்கள் வாழ்ந்த வரலாற்றையும் வாழும் வாழ்க்கையையும் புரிந்து கொள்ளத் துணை புரியும் தரவுகள் நாட்டுப்புறக் கதைகள் எனலாம்.

    1.2.2 நாட்டுப்புறப் பாடல்கள்

    நாட்டுப்புறப் பாடல்களை, ஏட்டில் எழுதாக் கவிதைகள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், காட்டு மல்லிகை, மலையருவி, காற்றில் மிதந்த கவிதைகள் என்று தமிழ் நாட்டுப்புறவியலறிஞர்கள் பலவாறு அழைக்கின்றனர். இப்பாடல்கள் யாரால் பாடப்பட்டவை என்று கூற இயலாது. நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கங்களை ஏட்டு இலக்கியங்களிலும் (சிலப்பதிகாரத்தைச் சான்றாகக் கூறலாம்). ஏட்டு இலக்கியங்களின் தாக்கங்களை நாட்டுப்புறப் பாடல்களிலும் (பாரத, இராமாயணக் கதைகளைக் கூறலாம்) காணலாம்.

    1.2.3 நாட்டுப்புறப் பாடலின் வகைமை

    நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளை மனிதனது பிறப்பு முதல் இறப்புவரை என்ற ஒரு வரையறையோடு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

    நாட்டுப்புறப் பாடல்களை,

    1. தாலாட்டுப் பாடல்கள்
    2. விளையாட்டுப் பாடல்கள்
    3. தொழிற் பாடல்கள்
    4. காதல் பாடல்கள்
    5. திருமணப் பாடல்கள்
    6. ஆட்டப் பாடல்கள்
    7. சடங்குப் பாடல்கள்
    8. தெய்வப் பாடல்கள்
    9. இறப்புப் பாடல்கள்

    என வகைப்படுத்தலாம். நாட்டுப்புறப்பாடல்கள் இவ்வாறு வகைப் படுத்தப்பட்டாலும் ஒன்றில் இடம்பெறும் பாடல்வரிகள் அடுத்த வகையிலும் இடம்பெறலாம். எடுத்துக்காட்டாகத் தாலாட்டில் இடம்பெறும் பாடல்வரி சிற்சில மாற்றங்களுடன் இறப்புப் பாடலில் இடம்பெற்றுள்ளதைப் பின்வரும் சான்று எடுத்துரைக்கும்:

    (தாலாட்டுப் பாடல்)

    வட்டக் கொடைபுடிச்சு - கண்ணே
    வயல் பாக்கப் போனாரு
    வயலும் பயிராகும் - ஒங்க மாமன்
    வந்தெடமும் தோப்பாகும்

    (கணவனை இழந்த பெண் பாடுவது)

    வட்டக் கொடை புடிச்சு
    என்னத் தேடியே போனீயன்னா, - நீங்க
    வயல் பாக்கப் போனீயன்னா
    வயலும் பயிராச்சோ
    வந்தெடமும் தோப்பாச்சோ

    இதுபோன்றே தாலாட்டுப் பாடலில் இடம்பெறும் பாடல்வரி காதல் பாடல்களிலும், தொழில் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். சூழலுக்கேற்ப மாறிச் செல்லும் பண்புடையவை நாட்டுப்புறப் பாடல்கள். இதே பண்பைக் கதைப் பாடல்களிலும் காணலாம். கதைப் பாடல்களில் இடம் பெறும் தாலாட்டு, இறப்புப்பாடல், தெய்வம் பற்றிய கதைகள் ஆகியவை நாட்டுப்புறப் பாடலான தாலாட்டிலும் இடம்பெறக் காணலாம். இவ்வாறு கொண்டும் கொடுத்தும் கொள்ளுகின்ற பண்பு காரணமாகவே நாட்டுப்புறக் கதைகளும் நாட்டுப்புறப் பாடல்களும் நாட்டுப்புறக்கதைப் பாடல்களும் ஒன்றோடு ஒன்று உறவு கொண்டவையாக அமைந்துள்ளன.

    பொதுப்பண்புகள்

    நாட்டுப்புறப் பாடல்கள் வகைமையில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களுமே (காதல், தொழில், விளையாட்டு, இறப்புப் பாடல்கள்) நாட்டுப்புறப் பாடல்களுக்கே உரிய பொதுவான பண்புகளைக் கொண்டு இலங்குவன. நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் பொதுவான பண்புகளைக் கொண்டிருப்பினும், பிற நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற பண்புகளையும் கொண்டுள்ளன. அவற்றுள் இரு பண்புகளை முக்கியமானவையாகக் கூறலாம். அவை

    1) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் எடுத்துச் சொல்லுகின்ற கதை

    2) எடுத்துச் சொல்லுகின்ற கதையைப் பாடுவதற்கு ஆகின்ற காலம்

    சொல்லுகின்ற கதைப் பொருளாலும், கால அளவாலும் வேறுபடுகின்ற காரணத்தால் கதைப்பாடல்களை நாட்டுப்புறக் காப்பியங்கள் என்றும் கூறுவதுண்டு.

    நாட்டுப்புறப் பாடல்களும் நாட்டுப்புறக் கதைகளும் இணையும் முயற்சியில் உருவானதே நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் எனலாம்.

     


    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    நாட்டுப் புறவியல் என்றால் என்ன?
    2.
    நாட்டுப்புறவியல் வகைமையில் இடம் பெறுபவை எவை?
    3.
    தமிழில் நாட்டுப்புறக் கதைப்பாடல் எந்த வகைமையில் இடம் பெற்றுள்ளது?
    4.
    நாட்டுப்புறக் கதைகளுக்கும், கதைப் பாடல்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
    5.
    நாட்டுப்புறப் பாடல்களுக்குரிய பண்புகளுள் இரண்டினைக் கூறுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 07-10-2017 13:26:21(இந்திய நேரம்)