தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.7- தேசிங்குராஜன் கதையும் பிற செய்திகளும்

  • 1.7 கதைப்பாடல்கள் - சிறப்புச் செய்திகள்

    எந்தவொரு இலக்கியப் பிரிவாக இருந்தாலும் அதற்கென ஓர் அமைப்பு முறை இருக்கும். கதைப்பாடலும் இதற்கு விதிவிலக்கல்ல. பின்வரும் கூறுகள் பெரும்பான்மையான கதைப்பாடல்களில் இடம்பெறுபவையாகும்.

    1.7.1 கதைப்பாடல் - அமைப்பு

    முதன்முதலில் காப்பு அல்லது இறைவாழ்த்துப் பாடியே நூலை எழுதுவது தமிழ் இலக்கிய மரபு. காப்புப் பகுதி ஒரு தெய்வத்தைக் குறிப்பிட்டு வணங்கும் ஒரு பாடலாகவோ பல தெய்வங்களை வாழ்த்தும் பல பாடல்களாகவோ அமையும். பெரும்பாலும் முதல் பாடல் பிள்ளையார் வாழ்த்தாகவே இருக்கும்.

    ‘குருவணக்கம்’ பாடும் மரபும் உண்டு. அவையடக்கம் பாடுவது, தான் பாடவந்த கதை இன்னது என ‘நுதலிப் புகுதல்’ ஆகிய மரபுகளும் இதனுள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இக்கதைப்பாடல்களில் நாட்டு வளம் கூறப்பெற்று கதை தொடங்கப்பெறும் ‘வாழி’ என வாழ்த்திக் கதை முற்றுப் பெறும் சொன்ன வரிகளே திரும்பத் திரும்ப வருவதுண்டு. மக்களின் கொச்சைப் பேச்சு, பழமொழிகள், உவமைகள் முதலியவற்றை இக்கதைப் பாடல்களில் காணலாம், நாட்டுப்புறப் பாடல்களெனப் போற்றப்படும் தாலாட்டு, கும்மி, பள்ளுப் பாடல், இறப்புப் பாடல்கள் முதலியனவும் கதைப் பாடல்களில் ஆங்காங்கே அமைந்துள்ளமையைக் காணலாம்.

    1.7.2 கதைப்பாடல் - மரபுகள்

    கதைப்பாடலில் ஒரு சில மரபுகள் தவறாமல் பின்பற்றப்படுகின்றன. இராட்சதர்கள் போன்றவர்கள் கதைகளில் வருவார்களாயின் அவர்களின் உயிர், ஈரேழு கடல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பூதம் காக்கும் தீவில் ஒரு பாம்புக் குகையில் உள்ள கிளி ஒன்றின் உடலில் இருப்பதாகப் பாடுவது உண்டு. ஊர்கள், நாடுகள், மாட்டு வகைகள் முதலியவற்றை அடுக்கிச் சொல்லல் மற்றொரு மரபு. ஒரே தன்மையுடைய சில தொடர்கள் பல கதைப்பாடல்களில் இடம் பெறுவதைக் காணலாம். எடுத்துக்காட்டுக்கு ஒன்றினைக் காணலாம்.

    கூலி குறைத்தவர்கள் குறைமரக்கால் இட்டவர்கள்
    அங்காடிக் கூடையை அதிகவிலை யிட்டவர்கள்
    பட்டரை நெல்லுதனில் பதரைக் கலந்தவர்கள்

    என்ற வரிகள் பவளக்கொடி மாலை என்ற கதைப்பாடலில் இடம் பெற்றுள்ளன. இதே வரிகள் அல்லி அரசாணி மாலை கதைப்பாடலிலும் இடம் பெற்றுள்ளன.

    கூலி குறைத்தவர்கள் குறை மரக்காலிட்டவர்கள்
    அங்காடிக் கூடை தன்னை அதிகவிலை யிட்டவர்கள்
    பட்டியில் நெற்களிலே பதரைக் கலந்தவர்கள்

    இதே போல் இன்னும் பல தொடர்கள் ஒரே தன்மையதாக எல்லாக் கதைப் பாடல்களிலும் அமைந்திருப்பதைக் காணலாம். இது நாட்டுப்புற இலக்கிய வடிவங்களுக்கே உரிய முக்கியமான இயல்பாகும்.

    1.7.3 கதைப்பாடல் - இயல்புகள்

    கதைப்பாடலில் இடம்பெறும் பின்வரும் கூறுகள் கதைப்பாடல்களின் இயல்பாகக் கூறப்படுகின்றன.

    1) அடுக்கியல் அமைப்பு : ஒரே கருத்து அடுக்கிச் சொல்லப்படுதல்

    செட்டி தெருவிலே செண்டாடி வாரார்கள்
    பார்ப்பாரத் தெருவிலே பந்தாடி வாரார்கள்

    (அண்ணன்மார்சுவாமி கதை)

    2) திருப்பியல் அமைப்பு: வந்த அடிகளே திரும்பத்திரும்ப வருதல்

    வாணமடி பட்டு மண்மேல் கிடப்பாரும்
    குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்

    (இராமப்பையன் அம்மானை)

    3) கனவுக் காட்சி : கனவு அல்லது நிமித்தங்களைக் காணுதல் மெச்சும் பெருமாள் கதை, முத்துப்பட்டன் கதை, கட்டபொம்மன் கதை, தேசிங்குராசன் கதை முதலியவற்றில் கனவுக் காட்சிகள் நிகழ்கின்றன.

    4) சோக முடிவு : பெரும்பாலான கதைப்பாடல்கள் சோக முடிவுகளைக் கொண்டுள்ளன. மதுரை வீரன் கதை, காத்தவராயன் கதை, தேசிங்குராசன் கதை முதலிய கதைப்பாடல்களில் வரும் கதைத் தலைவர்கள் இறந்து விடுகின்றனர்.

    5) சூழலுக்கேற்ப அமைதல் : கதைப் பாடல்கள் நிலவியல் சூழல், சமூகச் சூழல், வட்டாரச் சூழல்களுக்கேற்ப மாற்றிப் பாடப்படுவதும் உண்டு.

    6) தொகுத்துக் கூறல் : கதை பாடி வரும் பொழுதே அப்போதைக்கு அப்போது அதுவரை பாடிய முன் கதையைச் சுருக்கிப்பாடும் இயல்பு (தொகுத்துக் கூறல்) எனப்படும் இவ்வியல்பினைப் பெரும்பாலும் எல்லாக் கதைப் பாடல்களிலும் காணலாம்.

    இவை தவிர இறந்தோர் மீண்டும் உயிருடன் வருதல், கதைக்குள் இடம்பெறும் கிளைக்கதைகளை முரண்படக் கூறுதல், மகாபாரதத்தோடு தொடர்புறுத்தல் போன்ற இயல்புகளையும் கதைப் பாடல்கள் கொண்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:22:33(இந்திய நேரம்)