தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.1-நாட்டுப்புறவியல் - தோற்றம்

  • 1.1 நாட்டுப்புறவியல் - தோற்றம்

    பாட்டிமார்களின் கதை, இரண்டாம் தரமான இலக்கியம் எனப் பல நூற்றாண்டுகளாக நாட்டுப்புற மக்களின் கலை, இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இவ்விலக்கியங்களை, 'பொது மக்களைச் சார்ந்த மரபு முறைகள்' (POPULAR ANTIQUITIES) என்ற பெயரில் மேனாட்டார் ஆய்வு செய்ய முற்பட்ட பின்னரே இந்தத் துறையின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. பதினெட்டாம் நூற்றாண்டில் வளரத் தொடங்கிய இவ்வியல் பற்றிய ஆராய்ச்சி, மிக வேகமாக மக்கள் மத்தியில் பரவியது. இத்துறை தொடர்பான 'நாட்டுப்புற இயல்' எனும் சொல்லையும் பகுப்பையும் செய்த பெருமை ஆங்கிலேயரான வில்லியம் ஜான் தாமசு என்பவரையே சாரும். FOLKLORE எனும் சொல்லை 1846இல் முதன் முதலில் படைத்துப் பயன்படுத்தியவரும் இவரே. இவரது காலக் கட்டத்திற்குப் பின்னரே இந்த ஆய்வில் முறைமையும் முன்னேற்றமும் ஏற்படலாயிற்று, மேலை நாடுகளில் இத்துறை நன்கு வளர்ந்த பிறகே இத்துறை குறித்த ஆர்வம் தமிழில் தொடங்கியது.

    1.1.1 தமிழில் நாட்டுப்புறவியல் வளர்ச்சி

    'FOLKLORE' என வில்லியம் ஜான் தாமசால் உருவாக்கப்பட்ட இச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் நாடோடி இலக்கியம், நாட்டார் வழக்காறு, நாட்டுப் பண்பாட்டியல் ஆகிய பல்வேறு பெயர்கள் வழங்கிவந்தன. ஆயின் தற்பொழுது 'நாட்டுப்புறவியல்' என்ற சொல்லாட்சியே பொருத்தமானதாகப் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழங்கி வருகின்றது.

    · முன்னோடிகள்

    இந்தியாவில் இத்துறை ஆய்வு 1954ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் வளரத் தொடங்கியது. கார்லஸ் இ. கோவர் என்ற ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட 'தென்னிந்திய நாட்டுப் பாடல்கள்' என்னும் ஆங்கிலப் புத்தகமே இந்தியாவில் வெளியான முதல் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இவரைப் பின்பற்றி பிஷப் கால்டுவெல், பீட்டர் பெர்சிவல் பாதிரியார், பாதிரியார் போன்றோர் தமிழக நாட்டுப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். இவர்களுக்குப்பின் தமிழகத்தில் நாட்டுப்புறவியல் ஆய்வு வேரூன்றி வளரத் தொடங்கியது.

    · தொகுப்பு நூல்கள்

    1943ஆம் ஆண்டு மு. அருணாசலம் 'காற்றிலே மிதந்த கவிதை' என்னும் பெயரில் ஒரு நூலை வெளியிட்டார். தமிழில் நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளிவந்த முதல் நூல் இது. இதைத் தொடர்ந்து பல தொகுப்பு நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின. நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளியிட்டவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கி.வா.ஜகந்நாதன், அ.மு.பரமசிவானந்தம், சோமலெ, நா.வானமாமலை, தமிழண்ணல், செ.அன்னகாமு, மு.வை.அரவிந்தன், ஆறு.அழகப்பன், பெ.தூரன், சு.சண்முகசுந்தரம் போன்றோர் ஆவர்.

    · ஆய்வு

    இன்றைய நிலையில் தொகுத்து வெளியிடுகின்ற போக்கிலிருந்து மாறி, எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி பட்டத்திற்காக ஆய்வு செய்கின்ற நிலைக்கு நாட்டுப்புறவியல் ஆய்வு வளர்ந்துள்ளது. நாட்டுப்புறவியலுக்கு எனத் தமிழில் முதன் முதலில் நூல் வெளிவந்துள்ள காலத்தைக் கொண்டு கணக்கிடும் பொழுது ஏறக்குறைய 75 ஆண்டுப் பழமையுடையதாகவே நாட்டுப்புறவியல் துறை ஆய்வு அமைந்துள்ளது.

    1.1.2 தமிழில் நாட்டுப்புறவியல் - வகைமை

    வகைமை என்பது வகைப்படுத்துதலைக் குறிக்கும். நாட்டுப் புறவியலுக்கென ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட நாட்டுப்புறவியல் அகராதி பின்வருமாறு நாட்டுப்புறவியலை வகைமைப் படுத்துகின்றது.

    1) பாடல்கள்
    2) கதைகள்
    3) ஆடல்கள்
    4) கூத்துகள்
    5) பழமொழிகள்
    6) விடுகதைகள்
    7) கதைப்பாடல்கள்
    8) விளையாட்டுகள்
    9) தேவதைகள்
    10) நம்பிக்கைகள்
    11) பழக்க வழக்கங்கள்
    12) கைவினைக் கலைகள்
    13) நடை உடை பாவனைகள்
    14) சடங்குகள்
    15) புராண இதிகாசங்கள்

    நாட்டுப்புற இயலின் வகைகளாக இந்தப் பதினைந்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுவதோடு இவ்வகைமைக்குள் அடங்காத சிறு வகைகளும் இருக்கலாம், இருத்தல் வேண்டும் என்றும் கூறிச் செல்கின்றது, தமிழ் நாட்டுப்புற ஆய்வறிஞர்கள் நாட்டுப்புற இயலை, நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நம்பிக்கைகள் என்றும்; நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகள் என்றும் பலவாறாக வகைமை செய்கின்றனர். ஆயின் நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பண்பாடு, நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமையே பொருத்தமானதாக அமைந்துள்ளது.

    · நாட்டுப்புறக் கலைகள்

    இந்த வகைமையில் நாட்டுப்புற ஆடல்கள், கூத்துகள், கைவினைக் கலைகள் முதலானவை இடம் பெறுகின்றன.

    · நாட்டுப்புறப் பண்பாடு

    நாட்டுப்புற விளையாடல்கள், நாட்டுப்புற மருத்துவம், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நாட்டுப்புற வழிபாடுகள் முதலானவை நாட்டுப்புறப் பண்பாடு என்ற வகைமைக்குள் இடம் பெறும் கூறுகளாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:22:16(இந்திய நேரம்)