தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.1-விடுகதை

  • 2.1. விடுகதை

    அறிவியல் துறையிலும், பிறவற்றிலும் முன்னேற்றம் பெற்றுள்ள இந்த நூற்றாண்டில்கூட, கருத்து அல்லது பொருள் விளக்கச் சொற்கள், சூழலுக்கு ஏற்பவும், இடத்திற்கு ஏற்பவும், காலத்திற்கு ஏற்பவும் ஒன்றிற்கே வேறுபட்ட பல சொற்கள் உள்ளன. இன்று வழக்கத்திலிருக்கும் விடுகதை என்பதை சுட்டுவதற்கும் பல சொற்கள் வழங்கப்படுகின்றன.

    2.1.1 சுட்டும் சொற்கள்

    தமிழில் நமக்குக் கிடைக்கும் பழமையான நூல் தொல்காப்பியம். இந்நூலில் ‘பிசி’ என்னும் சொல்லால் விடுகதை சுட்டப்படுகிறது. மேலும் ‘பிசி’யின் இரு வகைகளும் சுட்டப்படுகின்றன. எனவே விடுகதை இலக்கிய வகையைச் சுட்டுவதற்கு நமக்குக் கிடைக்கும் பழைய சொல் ‘பிசி’ என்பதை அறியலாம். இச்சொல் மணிமேகலை, பெருங்கதை முதலான காப்பியங்களிலும் இடம்பெறுகிறது. கம்பராமாயணத்தில் விடுகதையைச் சுட்ட ‘பிதிர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லும் பழமையானதே. ஆயினும் இச்சொற்கள் இன்று வழக்கில் இல்லை. இன்றைய நிலையில் விடுகதையைச் சுட்டுவதற்குத் தமிழில் பல சொற்கள் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வது அவசியம்.

    • புதிர்

    மறைபொருளை உள்ளடக்கிய - புதிர்மைப் பண்புடைய அனைத்தையும் சுட்டுவதற்குப் ‘புதிர்’ என்ற சொல் இன்று பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு செய்தியை மறைத்து மறைபொருளாகப் பேசினால் அவ்வாறு பேசுபவரைப் பார்த்து மற்றவர் ‘என்ன புதிர் போடுகிறாயா?’ என்று கேட்கும் வழக்கம் உள்ளது. ஒருவரின் செயல்பாடுகள் இரகசியமாக இருக்குமேயானால் அவரைக் குறிப்பிடும்போது ‘அவன் செய்யறது எல்லாம் புதிரா இருக்கே’ என்று கூறுவது வழக்கில் உள்ளது. இந்தச் சொல் எவ்வாறு உருவாயிற்று? ‘பிசி’ என்ற சொல்லே பின்னாளில் ‘பிதிர்’ என்றாகிப் பின்னர் ‘புதிர்’ என்று மாறியது என்று கி.வா.ஜகந்நாதன் போன்ற அறிஞர்கள் சுட்டுகின்றனர். மறைபொருளை உள்ளடக்கிய அனைத்தையும் சுட்டும் பொதுச் சொல்லாக ‘புதிர்’ என்ற சொல்லைக் கருதலாம். ஆங்கிலத்தின் Riddle என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் இது.

    • வெடி

    தமிழகத்தின் வட மாவட்டங்களில் (திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி முதலானவை) விடுகதையைச் சுட்ட ‘வெடி’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘நான் ஒரு வெடி போடறன் நீ விடை சொல்’ என்று மக்கள் கூறுவதை இப்பகுதிகளில் காணலாம். ‘நான் ஒரு விடுகதை கூறுகிறேன் நீ விடை கூறு’ என்பதே இதற்குப் பொருள். ‘விடு’ என்ற சொல்லடியாகப் பிறந்த ‘விடி’ (விடு+இ) என்ற சொல்லே ‘வெடி’ என்று மாறி வந்திருக்க வேண்டும் என்று பேராசிரியர் பொற்கோ கருதுகிறார். ‘வெடி’ என்ற சொல் விடு, விடுவி என்ற பொருளுடையது என்பதை உணரலாம். விடுகதையில் ‘உள்ளடங்கியுள்ள மறைபொருளை விடுவி’ என்று எதிரில் உள்ளவரிடம் கூறுவதாக அமையும் சொல்லாக ‘வெடி’ என்னும் சொல்லைக் கருதலாம்.

    • அழிப்பாங் கதை

    தமிழகத்தின் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை மற்றும் அதற்குத் தெற்கே உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விடுகதையை ‘அழிப்பாங்கதை’ என்ற சொல்லால் சுட்டுகின்றனர். எழுத்தறிவில்லாத கிராமப்புற மக்களிடம் ’விடுகதை’ என்று கூறினால் அவர்களுக்குப் புரியவில்லை. அழிப்பாங்கதை என்றால் உடனே புரிந்து கொள்கின்றனர். அழிப்பு, அழிப்புக் கதை என்றும் சில இடங்களில் சுட்டப்படுகிறது. ‘கதையில் மறைபொருளாக வரும் சிக்கலை அவிழ்த்தால்’ என்ற பொருளில் இச்சொல் உள்ளது. ‘அவிழ்த்தல்’ என்பது ‘அழித்தல்’ என்று மாறி ‘அவிழ்ப்பான் கதை’ ‘அழிப்பாங்கதை’ யாகி இருக்கலாம். தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு பகுதிகளில் ‘நீ ஒரு கதபோடு, நான் அவிழ்க்கிறேன்’ என்று கூறும் வழக்கம் உள்ளது. ‘நீ ஒரு விடுகதை கூறு; (அதன் மறைபொருளை) நான் விடுவிக்கிறேன்’ என்று இதற்குப் பொருள்.

    • விடுகதை

    ‘மறை பொருளினின்றும் விடுவிக்கப்பட வேண்டிய கதை’ என்னும் பொருளுடைய விடுகதை என்னும் சொல் படித்தவர் மத்தியில் அதிகம் பழக்கத்தில் உள்ளது. தமிழகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட சொல்லாகவும் நூல்கள், பத்திரிக்கைகளில் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் இச்சொல் இடம் பெறாததால் இச்சொல்லாட்சி மிக அண்மைக் காலத்தில் தமிழ் மொழியில் காலூன்றியுள்ளது என்று சில ஆய்வாளர்கள் சுட்டுவர். இக்கருத்து பொருத்தமாகத் தெரியவில்லை. விடுகதையைச் சுட்டுவதற்கு தெலுங்கில் விடிகதா (Vidikatha), கன்னடத்தில் ஒடகதே, (Odakatha), விடிகதா, (Vidikatha), மலையாளத்தில் விடிகதா, கடங்கதா என்னும் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன. நான்கு திராவிட மொழிகளில் வழக்கில் உள்ள விடுகதை என்னும் சொல் பிற்காலத்தது என்று கூறுவது சரியல்ல. மக்களிடையே வழக்கிலிருந்த இச்சொல் இலக்கண இலக்கியங்களில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம்.

    2.1.2. சேகரிப்பும் பதிப்பும்

    விடுகதைகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணப்பட்டாலும் அவற்றைச் சேகரித்துப் பதிவுசெய்யும் பணி மிகவும் அண்மை காலத்தில் தோன்றியது. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டு, அக்கழகத்தாரால் வெளியிடப்பட்ட சிறுவர்க்கான விடுகதைப் பாட்டுக்கள் (மு.ப. 1940) என்ற நூல் இவ்வகையில் முதல் நூலாகக் கருத முடிகிறது. இதற்கு முன் வெளிவந்த இரு சொல் அலங்காரம் (1877), இரு சொல் அலங்காரமும் முச்சொல் அலங்காரமும் (1892), விவேக விளக்க விடுகவிப் பொக்கிஷம் முதலிய நூல்கள் தனிப்பட்டவர்களால் எழுதி வெளியிடப்பட்ட எழுத்திலக்கிய விடுகதைகளாகும்.

    முதன்முதலில் மிகுதியான விடுகதைகளைத் தொகுத்து வெளியிட்ட வகையில் ரோஜா முத்தையாவின் (1961) விடுகதைக் களஞ்சியம் என்னும் நூல் முதன்மை பெறுகிறது. இந்நூலில் 1025 விடுகதைகள் உள்ளன. ஒவ்வொரு விடுகதையும் பயின்றுவரும் வரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

    வ.மு. இராமலிங்கம் (1962) வெளியிட்டுள்ள களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள் முற்றிலும் மாறுபட்ட நூல். மக்களிடமிருந்து தொகுக்கப்பெற்ற கதை அடிப்படையிலான விடுகதைகள் மட்டுமே இந்நூலில் உள்ளன. இவை யார்யாரிடமிருந்து சேகரிக்கப் பெற்றன என்ற விவரமும், விடுகதைகளின் மாற்று வடிவங்கள், திரிபு வடிவங்கள், குறிப்புரைகள் முதலியனவும் நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழில் முறையாகத் தொகுக்கப்பெற்ற முதல் விடுகதை நூல் என்று இந்நூலைக் குறிப்பிடலாம்.

    குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா (1962) பல்வேறு நாடுகளிலிருந்து வெளிவந்த 125 விடுகதைகளைத் தமிழாக்கம் செய்து வெளிநாட்டு விடுகதைகள் என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். ஈரான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பர்மா, இலங்கை, மலேயா போன்ற நாடுகளிலிருந்து நண்பர்கள் வாயிலாக விடுகதைகளைச் சேகரித்து இந்த நூலில் இணைத்துள்ளார்.

    இன்றுவரை தமிழில் வெளிவந்துள்ள விடுகதைத் தொகுப்பு நூல்களிலேயே மிகுதியான எண்ணிக்கையைக் கொண்ட விடுகதைத் தொகுப்பு ச.வே. சுப்பிரமணியனின் (1977) தமிழில் விடுகதைகள் என்ற நூலேயாகும். இதில் 2504 விடுகதைகள் அடங்கியுள்ளன. விரிவான ஆய்வுரையுடன் கூடிய தொகுப்பு நூல் இது ஒன்றே; இந்த விடுகதைகள் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன. தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களும், வெண்பாக்களும் இந்நூலில் இணைக்கப் பெற்றிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆறு. இராமநாதன் (1982) வெளியிட்டுள்ள காதலர் விடுகதைகள் என்னும் நூலில் கதை அடிப்படையிலான 35 பாட்டு விடுகதைகள் இடம் பெற்றுள்ளன. சேகரித்த முறை, பதிப்பு முறை போன்ற செய்திகள் இந்நூலில் நுணுக்கமாகத் தரப்பட்டுள்ளன.

    விடுகதைகளைப் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே நிகழ்ந்துள்ளன. க.சாந்தி, இ.பாத்திமா மேரி ஆகியோர் விடுகதைகளை அமைப்பியல் அடிப்படையில் ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். ஆறு. இராமநாதன் தமிழில் புதிர்கள் என்னும் தலைப்பில் (1978-2001) எழுதிய நூல் தமிழ் விடுகதைகள் பற்றி வெளிவந்த ஒரே ஆய்வுநூலாக உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:31:38(இந்திய நேரம்)