தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

  • 2.4. தொகுப்புரை

    விடுகதை மக்கள் அறிவுத் திறனின் வெளிப்பாடு. தாம் காணும் பொருட்களையும் செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறை பொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவம். பழங்காலத்தில் பிசி என்ற சொல்லாலும் பின்னர் பிதிர், புதிர் என்ற சொற்களாலும் இந்த இலக்கிய வடிவம் சுட்டப்பட்டது. தற்போது வெடி, அழிப்பாங்கதை, விடுகதை என்னும் சொற்களால் சுட்டப்படும் இந்த இலக்கிய வடிவம் 1940க்குப் பிறகு மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ரோஜா முத்தையா, வ.மு. இராமலிங்கம், ச.வே. சுப்பிரமணியன், ஆறு. இராமநாதன் ஆகியோரின் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. விடுகதைகளை உண்மை விடுகதைகள், கதை (அடிப்படையிலான) விடுகதைகள், கணக்கு விடுகதைகள், எழுத்திலக்கிய விடுகதைகள் என்று நான்காக வகைப்படுத்தலாம். இவற்றுள் முதல் மூன்று மக்களிடையே வழக்கில் உள்ளவை. அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுத்திலக்கியப் புலவர்களால் உருவாக்கப்படுபவை எழுத்திலக்கிய விடுகதையாகும். இவ்வகை விடுகதைகளும் மக்களிடையே வாய்மொழியாகப் பரவிச் செல்வது உண்டு. சிறுவர், சிறுமியர், குடும்ப உறுப்பினர்கள் கூடும்போதும், அல்லது வயது வேறுபாடில்லாமல் பலரும் ஒன்று கூடும்போதும், தொழில் செய்யும் போதும் விடுகதை அமர்வுகள் நிகழும். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் விடுகதைகளைக் கூறி விடை கேட்பதுண்டு. திருமண உறவுமுறையுடைய ஆண்-பெண் இருசாராரும் தனித்திருக்கும் சூழலில் பாலியல் தொடர்பான விடுகதைகளைப் பரிமாறிக் கொள்வதுண்டு. விடுகதை விளையாட்டு பொழுது போக்கிற்காக நிகழ்கின்றது. ஆயினும், அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், பணிச்சுமையைக் குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல், நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், மரபு வழிக் கல்வியளித்தல், சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உதவுதல் போன்ற பல நிலைகளில் பயன்படுகின்றது.

     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    தமிழக மக்களிடையே விடுகதைகள் எவ்வெச் சூழல்களில் நிகழ்த்தப் பெறுகின்றன?
    2.
    மாணவர்கள் ஆசிரியர்களுக்கு விடுகதைகளைக் கூறி விடை கேட்பதுண்டா?
    3.
    விடுகதைகளின் பயன்பாடுகள் யாவை?
    4.
    புதிய பாடத்திட்டங்களைப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் போதிப்பதற்கு விடுகதைகள் பயன்படுமா?
    5.
    காதலர்கள் மறைபொருளாக உரையாடுவதாக விடுகதைகள் உருவாக்கப்படுவதற்கான காரணங்கள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-10-2017 13:03:29(இந்திய நேரம்)