தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அறிவுரைகள்

  • 4.4 அறிவுரைகள்

    சமுதாயத்திற்குத் தேவையான நன்னடத்தைகளையும், நன்னெறிகளையும், எளிய வார்த்தைகளில் மனத்தில் தைக்குமாறு எடுத்துரைப்பதில் நாட்டுப்புறப் பாடல்கள் பெரும் பங்காற்றுகின்றன.

    4.4.1 கீழ்ப்படிதலும் ஒழுக்கமும்

    தாய், தந்தை பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும், கணவன் பேச்சை மனைவியும், மனைவி பேச்சைக் கணவனும் கேட்டு நடக்க வேண்டும், அடுத்தவன் மனைவிக்கு ஆசை வைக்கக் கூடாது என்பன போன்ற கருத்துகளை நாட்டுப்புறப் பாடல்கள் மக்களுக்குப் போதிக்கின்றன. பின்வரும் தெருக்கூத்துப் பாடலைக் காண்க:

     

    ததிங்கணத்தோம் ததிங்கணத்தோம்
    ததிங்கணத்தோம் ததிங்கணத்தோம்
    ததிங் கணத் தோம் ததிங் கணத் தோம்
    ததிங் கணத் தோம் ததிங் கணத் தோம்
    அவன இவன ஏச்சிப் பொழைக்கிறவன்
    அப்பவே போடுவான் ததிங்கணத்தோம்
    அப்பன் பேச்சைக் கேக்காத பயலெல்லாம்
    தப்பாமதா போடுவான் ததிங்கணத்தோம்
    தாயின் சொல்லைத் தட்டிப் பேசறவன்
    தண்ணிக்குப் போடுவான் ததிங்கணத்தோம்
    ஆம்படையான் பேச்சைக் கேக்காத பொம்பளை
    அறை வீட்டிலே போடுவா ததிங்கணத்தோம்
    பொண்டாட்டி பேச்சைக் கேக்காத பயலெல்லாம்
    பொழுதிறங்கினாப் போடுவான் ததிங்கணத்தோம்
    அடுத்தவன் பொண்டாட்டிக்குப் பல்லைக் காட்டறவன்
    முதுகிலே வாங்குவான் ததிங்கணத்தோம்

     

    (’ததிங்கணத்தோம்’ என்ற ஒலிக்குறிப்புச் சொல் தொடக்கத்தில் ஒலிக்குறிப்பாகவும் பின்னர் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது)

    4.4.2 மதுவின் தீமை

    குடும்பப் பொருளாதாரத்தை அழித்து, உடல் நலத்தைக் கெடுத்து, சமூகத்தால் கைவிடப்பட, சீரழிப்பது மதுப்பழக்கமாகும்.

     

    உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால்
    எண்ணப்பட வேண்டா தவர்

     

    என்கிறார் திருவள்ளுவர். உண்ணற்க கள்ளை என்பதைப் பின்வரும் நாட்டுப்புறப் பாடல் சுட்டுகிறது.

     

    கள்ளெல்லாம் குடிக்காதேடா
    கரும்புத்திக் கார பாவி
    கள்ளெல்லாம் குடிக்காதேடா
    நித்தம் கள்ளக் குடிக்காதேடா
    பித்தம் போய் சிரசிலேறும்
    பெண்டாட்டிய அடிக்காதேடா
    புள்ளக் கொரு மாத்தம் வரும்

     

    சாராயம் காய்ச்சுதல், சாராயத்தைக் குடித்து அதனால் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளுதல், அதனால் குடும்பத்தையே அழித்தல் போன்ற செயல்களைச் சுட்டிக் காட்டி அறிவுறுத்தும் பாடல்கள் தெருக்கூத்து மேடைகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஓரிரண்டு சான்றுகள் வருமாறு.:

     

    போகாதேடா தம்பி போகாதேடா
    போக்கிரி வேலைக்குப் போகாதேடா
    வேலம்பட்டையை வெட்டாதேடா தேம்பி
    வெல்லத்திலே போட்டு ஊற வைக்காதேடா
    பானைமேல பான அடுக்காதேடா தம்பி
    பாட்லு பாட்லா சாராயம் குடிக்காதேடா தம்பி
    சந்திலேயும் வீயாதேடா.

     

    சாராயம் காய்ச்சாதே! குடிக்காதே என்று அறிவுறுத்துகிறது இப்பாடல் வேலமரத்தின் பட்டையை வெட்டி, வெல்லத்தில் போட்டு ஊறவைத்து, பானை மேல் பானை அடுக்கி சாராயம் காய்ச்சி, பாட்டில் பாட்டிலாக சாராயம் இறக்குவர் என்று பாடலில் சுட்டப்படுகிறது.

    சாராயத்தைக் குடித்துவிட்டு சந்தில் நிலை தடுமாறி விழாதே-(வீயாதடா) என்று சுட்டப்படுகிறது. சாராயத்தைக் குடித்தால் உடல் நலம் எவ்வாறு கெடும் என்பதைப் பின்வரும் பாடல் சுட்டுகிறது.

     

    பட்டைச் சாராயம் குடியாதே-மனிதாநீ
    பட்டைச் சாராயம் குடியாதே
    பட்டைச் சாராயத்தாலே
    கெட்டார் சிலது மக்கள்
    விட்டு விடடா அதை
    வீணாக சாகாதே (பட்டைச்)
    பட்டைச் சாராயத்தாலே
    கெட்டிடும் குடற்பயது
    கொஞ்சம் கொஞ்சமாகக் குடல்
    வெந்து நீ சாகவேண்டாம் (பட்டைச்)

     

    மரப்பட்டைகளை ஊறவைத்து அதைச் காய்ச்சித் தயாரிக்கப்படும் சாராயம் பட்டைச் சாராயம் எனப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-10-2017 16:46:08(இந்திய நேரம்)