Primary tabs
4.2 வகைகள்
நாட்டுப்புறப் பாடல்கள் சூழல் அடிப்படையில் எட்டாக வகைப்படுத்தப்பட்டு அவற்றுள் தாலாட்டுப் பாடல்கள், குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழிற்பாடல்கள் ஆகியவை குறித்து முந்தைய பாடத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்பாடத்தில் வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழப்புப் பாடல்கள் முதலானவை குறித்துச் சுருக்கமாகக் கூறப்படுகிறது.
மக்கள் அனைத்துச் செயல்களையும் தெய்வங்களை வணங்கியே செய்கின்றனர். ‘இன்னது செய்தால் இன்னது செய்வேன்’ என்ற பேரத்தையும் வழிப்பாட்டில் காணலாம். ’நீ என் நோயைக் குணப்படுத்தினால் அல்லது நோய் வராமல் காத்தால் நான் உனக்கு இன்னது படைப்பேன்’ என்ற அடிப்படையில் நாட்டுப்புற மக்களின் வழிபாடு அமைகிறது. நன்மை வேண்டும் போதும், நன்மை கிடைத்தற்கு நன்றி தெரிவிக்கும் போதும் வழிபாடுகள் நிகழ்கின்றன. ஒரு குடும்பத்தில் தனியாகவும், சில குடும்பங்களோ, ஊரோ, சில ஊர்களோ சேர்ந்து கூட்டாகவும் வழிபாடுகள் நிகழ்கின்றன. இத்தகைய வழிபாடுகளின் போது பாடல்கள் பாடப்படுகின்றன. அவற்றை வழிபாட்டுப் பாடல்கள் என்று கூறலாம்.
’உந்தன் பாட்டைப் பாடப் போகிறேன்; நல்வாக்குச் சொல்ல வேண்டும்; உள் நாக்குப் பேசவேண்டும்’ என்று மாரியம்மனை நினைத்து, பக்தியுடன் பாடப்படும் பாடலின் சில அடிகள் வருமாறு :
நன்னானே நானேநன்னே அம்மாடி எந்தாயே
நானே நன்னே நானே நன்னே கம்ப நதியாளே
நான் சொல்லப் போறேன் சொல்லப் போறேன்
அம்மாடி எந்தாயே
சுந்தரியே உந்தன் பாட்ட கம்ப நதியாளே
நான் பாடப் போறேன் பாடப்போறேன்
அம்மாடி எந்தாயே
பக்தியால் உந்தன் பாட்ட கம்ப நதியாளே
என் நாவுப் பிரியவேணும் அம்மாடி எந்தாயே
நல்வாக்கு சொல்ல வேணும் கம்ப நதியாளே
என் உதடு பிரிய வேணும் அம்மாடி எந்தாயே
உள்நாக்கு பேச வேணும் கம்ப நதியாளேஅம்மை நோய்க்கு மாரியம்மன் தெய்வமே காரணம் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. அம்மை நோய் வந்துற்ற சூழல்களில் மாரியம்மனை வேண்டிப் பாடினால் நோய் குணமாகும் என்றும் நம்பப்படுகிறது. அத்தகைய சூழல்களில் பூசாரியால் பாடப்படும் பாடலின் சில அடிகளே மேலே தரப்பட்டுள்ள பாடலாகும். ’கம்ப நதியாளே’ என்று இங்குச் சுட்டப்படுவது மாரியம்மனையேயாகும்.
மகிழ்ச்சி ஏற்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ‘கொண்டாட்டம்’ எனலாம். கொண்டாட்டச் சூழல்களில் பாடப்படும் பாடலைக் ‘கொண்டாட்டப் பாடல்’ எனலாம். குடும்பத்தினரின் கொண்டாட்டங்களான காதணிவிழா, மஞ்சள் நீராட்டு விழா, மணவிழா நிகழ்வுகள் (நலுங்கு, ஊஞ்சல், சம்மந்தம் கலத்தல்) போன்ற நிகழ்ச்சிகளின் போது பாடல்கள் பாடப்படுகின்றன. சமயம் சார்ந்த விழாக்களில் பொது மக்கள் கும்மி, கோலாட்டம் போன்றவற்றுள் ஈடுபட்டு ஆடிப்பாடுவர். பொதுமக்கள் தாங்களே ஈடுபட்டு ஆடிப் பாடுவதோடு தொழில் முறைக் கலைஞர்களை அமர்த்தி ஆடல் பாடல்களில் ஈடுபடுத்துவர். சில கலைஞர்கள் தாங்களாகவே முன்வந்து ஆடிப்பாடி, சன்மானம் பெறுதலும் உண்டு. கலைஞர்கள் உடுக்கைப் பாட்டு, வில்லுப் பாட்டு, தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளில் கதைத் தொடர்புடைய பாடல்களையும் பாடுவர். இங்குக் கொண்டாட்டப் பாடல்களுள் ஒரு சில வகைகளுக்கு மட்டும் சான்று காணலாம்.
• கும்மி
தமிழகத்தின் வடமாவட்டங்களில் பொழுது போக்கிற்காக இரவு நேரங்களில் நிலாக் காலங்களில் மகளிர் கும்மியடித்து மகிழ்வர். பொங்கல் பண்டிகையின் இறுதியில் கரிநாளன்று கும்மியடித்து மகிழ்வது அதிகம். சில ஊர்களில் ஆண்கள் பாட பெண்கள் கும்மியடிப்பர். ஆண்களும், பெண்களும் கும்மியடித்துப் பாடுவதைச் சில ஊர்களில் அருகிய நிலையிலேயே காணமுடிந்தது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கும்மி வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடையதாக உள்ளது. பூப்புச் சடங்கின் போதும் கும்மியடித்துப் பாடுவர். நின்று கொண்டே கைகொட்டிப் பாடுவதை ‘நிண்ணு கும்மி’ என்பர். குனிந்தும், நிமிர்ந்தும், சுற்றிவந்து கைகொட்டிக் கொண்டு பாடுவதைச் ’சுத்துக் கும்மி’ என்பர். கும்மியில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. ஆயினும் ’சுத்துக்கும்மி’ தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் கும்மி வடிவமாகும்.
கும்மியடி பெண்கள் கும்மியடி நல்ல
குடும்பம் வாழவே கும்மியடி
கேளுங்கடி பெண்கள் கேளுங்கடி நல்ல
திட்டங்கள் கூறுவேன் கேளுங்கடி (கும்மியடி)
பஞ்சம் பசிவரும் காரணத்தால்
மக்கள் பெருகுவதும் பெருங் காரணமே
மானிட மக்கள் பெருக்கத்தை நீக்கி
மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ளார் (கும்மியடி)
ஐம்பது கோடி ஜனத் தொகையால் மக்கள்
ஆயிரம் தொல்லை அடையுதடி
கட்டுக்கடங்காத மக்கள் தொகையினை
திட்டம் வகுத்துத் தடுத்திடுவோம் (கும்மியடி)
பள்ளியின் பெருமை சிறந்திடவே நல்ல
பாடுபடுதல் நம் கடனாகும்
நல்ல பாதையில் நாம் என்றும் சென்று
பாரினில் பெரும் புகழ் அடைந்திடுவோம் (கும்மியடி)இது பள்ளியில் சிறுமிகளுக்குக் கற்றுத் தந்த கும்மிப் பாடலாகும். இது கும்மியடிக்கும் சூழலில் மக்களிடையே வாய் மொழியாகப் பரவியுள்ளது. மக்களுக்குத் தேவையான கருத்துகளைக் கும்மிப்பாடல் வாயிலாகப் பரப்புவது நல்ல பலனைத் தரும் என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணமாகும்.
• உறுமி மேள ஆட்டப் பாடல்கள்
குறவன் குறத்தி வேடத்துடன் உறுமிமேள இசைக் குழுவின் இசையுடன் பாட்டுப் பாடி வசனங்களைப் பேசி ஆடும் ஆட்டம் உறுமி மேள ஆட்டமாகும். இது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிகுதி. இறப்பு நிகழ்ந்த வீடுகளில் ஆடப்பட்டாலும் பார்வையாளருக்கு மகிழ்வூட்டுதலே இதன் நோக்கம். பல்வேறு ஊர்வலங்களில் இந்த ஆட்ட நிகழ்ச்சியைப் பார்க்கலாம். இத்தகைய சூழல்களில் பாடப்படும் பாடல்களை உறுமி மேள ஆட்டப் பாடல்கள் என்று கூறலாம். நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவதால் அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகப் பல்வேறு பாடல்கள் புனையப்பட்டு ஆட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய பாடல் ஒன்று வருமாறு:
மஞ்சகொல்ல நரிக் கொறவங்க
நாங்கள சாமி-திருச்சி
மண்டலத்த சுத்தி வருவங்க கேளுங்க சாமி அஆ
மண்டலத்த சுத்தி வருவங்க கேளுங்க சாமி
சாமிய மறக்க மாட்டோம் சாமி
சத்தியங்க செய்ய மாட்டோம்
குளிச்சு மொழுவ மாட்டோம் சாமி
கோவிலுக்கு போக மாட்டோம்
வாய்பொறட்டு பேசமாட்டோம் சாமி
போலீசு கச்சேரி போக மாட்டோம்
ஊரு ஊரு சென்றிடுவோம் சாமி
ஒன்றா வந்து சேர்ந்திடுவோம்
பச்சமணி பவள மணி நாங்கள சாமி இந்த
பட்டணத்தில் கட்டி வருவோம் கேளுங்க சாமி அஆ
பட்டணத்தில் கட்டி வருவோம் கேளுங்க சாமி
ஏழுபான பொங்க வப்போம் சாமி
எருமை கெடா வெட்டயிலே சாமி
எருமை கெடா வெட்டயிலே சாமி
ஏக சத்தம் போட்டிடுவோம்நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை, இயல்புகள், தொழில், வழிபாடு முதலியன பற்றி இப்பாடல் தெளிவுபடுத்துகிறது. ஏழு பானைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிப் பொங்கல் வைத்து எருமைக் கிடா வெட்டி வழிபடுவர் என்பதையும் பாடல் தெளிவுபடுத்துகிறது.
• மணவிழாப் பாடல்கள்
குடும்பத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களில் திருமணவிழா முக்கியத்துவம் பெறுகிறது. திருமணத்தின் பல்வேறு சடங்குகளில் பாடல் பாடும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. மணமகன் வீட்டார் மணமகளையும் மணமகள் வீட்டார் மணமகனையும் கேலி செய்து பாடல் பாடுவதுண்டு. மணமகனின் அக்காள் மணமகளைக் கேலி செய்யும் பாடல் ஒன்று வருமாறு:
அரிசி திருடி மவ
ஆனமேல கோலம் வரா
அரிச்சந்திரன் பெத்த தம்பி
கால் நடயா வரான
கொள்ளு திருடி மவ
குதிரை மேல கோலம் வரா
கோவிலன் பெத்த தம்பி
கால் நடையா வரான
சோளக் குருத்துப் போல - என் தம்பி
சோக்கா வளந்துபுட்டான்
சோள சட்டி நாய்க்கன் மவ
என் தம்பிக்கு பாரியானா
கம்மங் குருத்துப் போல என் தம்பி
களுக்கா வளந்து புட்டான்
கரிசட்டி நாயக்கன் மவ
என் தம்பிக்கு பாரியானா
பதக்கு வரவரிசி
பதமா வடிக்க மாட்டா
பாவி மூஞ்சி பொண்ணுக்கு
பதக்குப் பணம் தந்தான(கோலம்-ஊர்கோலம், ஊர்வலம்; பதக்கு-முகத்தல் அளவை)
மணப்பெண் ஊர்வலத்தில் யானை மேல் அமர்ந்துவர, மணமகன் நடந்து வருவதான நிலைமை ஏற்பட்டதை மணமகனின் சகோதரி சுட்டுகிறாள். அரிசி திருடி மகள், கொள்ளு திருடி மகள், கரிசட்டி நாயக்கன் மகள், பாவி மூஞ்சி பொண்ணு, பதக்கு அளவுள்ள வரகு அரிசியைக் கூட வடிக்கத் தெரியாதவள். இப்படிப்பட்ட பெண்ணுக்கு பதக்கு பணம் பரியமாகத் தந்து தன் தம்பி மணந்துள்ளான் என்று மணமகன் சகோதரி கேலி பேசுகிறாள். இதே போன்று மணமகள் வீட்டார் மணமகள் பெருமையை எடுத்து கூறி மணமகனைக் கேலி செய்வர். மணமகனைக் கேலி செய்யும் பாடல் ஒன்று வருமாறு:
ஆத்தங்கரை ஓரத்திலே
ஆட்டுக்குட்டி மேய்ச்சவரே
எந்தன் தங்கை மாலை சூட்ட
எத்தனை நாள் தவமிருந்த
குளத்தங்கரை ஓரத்திலே
குரங்கு குட்டி மேய்த்தவரே
எந்தன் தங்கை மாலை சூட்ட
எத்தனை நாள் தவமிருந்த
எயுதிக் குடுத்தாலும் வாசிக்கத் தெரியாது
பெரியோர் இடத்திலே பேசத் தெரியாது
சந்தணமிண்ணா கொயக்கத் தெரியாது
குனிஞ்சி நிமிர்ந்து நடக்கத் தெரியாது
எட்டுக்கு மேலியும் எண்ணத் தெரியாது
எயுதிக் கொடுத்தாலும் வாசிக்கத் தெரியாது
ஏலேலோ ஏலாலிலோஆட்டுக் குட்டி, குரங்கு குட்டி மேய்த்தவன் தன் தங்கையை மணம் முடிக்க எவ்வளவு நாள் தவமிருந்தானோ என்று பெண்ணின் தமக்கை கேலி செய்கிறாள். அதுமட்டுமல்லாமல் மணமகனுக்குப் படிப்பறிவில்லாததையும் பெரியோர்களிடத்துப் பேசுதல், சந்தனம் குழைத்தல் போன்றவை கூடத் தெரியாது என்று கேலி செய்கிறாள். ’கேலிக்குக் கேலி’ சரியாகிவிடும். யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.
ஊர் ஊராகச் சுற்றித் திரியும் மக்கள் சிலர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகின்றனர். பிச்சை எடுக்கும் போது (இரத்தலின் போது) பாடல் பாடுவர். இத்தகைய பாடல்களை இரத்தல் பாடல்கள் என்று சுட்டலாம். இத்தகைய சூழலில் பாடப்பட்ட பாடலின் சிறு துணுக்கு வருமாறு:
கஞ்சி குடுவ கொண்டு நானு
கருவேட்டு மண்ட சுட்டு
இஞ்சி தொய்யலுடனே வந்தேன்
இளங்கொடியாள் கொண்டு வந்தேன்
மாடறக்கும் காவலனே நானு
மங்கையாள் வாடுறளே(நானு-நான்; கருவேட்டு-கருவாட்டு; தொய்யலுடனே-துவையலுடனே)
நோக்கர் என்ற இனத்தினர் ஒவ்வொரு வீட்டிலும் பாடி உணவு, காசு முதலியன வாங்கிச் செல்வர் என்றும் அவ்வாறு பிச்சை எடுக்க வந்த போது இப் பாடலைப் பாடினர் என்றும் அறிய முடிந்தது. அவர்கள் கஞ்சி வைக்கும் குடுவையாக சுரைக் குடுவையைப் பயன்படுத்துவர். முற்றிய சுரைக் காயிலிருந்து சுரைக்காயின் உள்பகுதியைத் தூய்மை செய்து அதனை உணவுக் குடுவையாகப் பயன்படுத்துவர். பொதுவாக மக்கள் கருவாட்டு மண்டையைத் தூக்கி எரிந்துவிடுவர். அதைச் சுட்டு உண்ணுதல் என்பது பிச்சை எடுக்கும் நோக்கர்களின் வறுமையைக் குறித்தது.
வாழ்க்கையில் பல்வேறு வகையான இழப்புகள், ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றன. உயிர் இழப்பு, பொருள் இழப்பு, உரிமை இழப்பு, மானம் இழப்பு, என்ற இந்தப் பட்டியல் நீளும். இத்தகைய இழப்புச் சூழல்களில் பாடும் மரபு நம்மிடையே உண்டு. இத்தகைய பாடல்கள் பாடுவோரின் மனச்சுமையைக் குறைக்கும் ஆற்றல் வாய்ந்தவை. உயிர் இழப்புச் சூழலில் மகளிர் ஒப்பாரி பாடுவர்.
• கணவனை இழந்த துயரம்
கணவனும், மனைவியும், சேர்ந்து படுத்திருந்தபோது மனைவியை விட்டுவிட்டு, கணவனைப் பாம்பு கடித்தது. கணவன் இறந்து விட்டான். அவனை இழந்து நிகழ்ந்ததை நினைத்து ஒப்பாரி பாடுகிறாள் ஒரு பெண்:
கருப்புக்கர வேஷ்டித்துண்டு
காராளனா போடுந்துண்டு
காராளனும் கன்னியாளும்
கலந்து படுக்கும் போது
கருந்தல நாகேந்திரன்
செவுரேறி வந்ததென்ன
கன்னிய விட்டுப் போச்சி-கன்னிக்கு வந்த
காராளன தொட்ட தென்ன
செவப்புக்கார வேஷ்டித்துண்டு
சீராளனா போடுந்துண்டு
சீராளனும் செல்வியாளும்
சேர்ந்து படுக்கும் போது
செந்தல நாகேந்திரன்
செவுரேறி வந்ததென்ன
செல்விய விட்டுப் போச்சி-செல்விக்கு வந்தசீராளன தொட்டதென்ன (கருப்புக் கர-கருப்புக் கரைபோட்ட (வேஷ்டித்துண்டு). காராளன், சீராளன் என்பவை கணவனைக் குறித்தது. கன்னி, செல்வி என்பவை மனைவியைக் குறித்தது. நாகேந்திரன் நாகப் பாம்பு)
கணவனை இழப்பதால் பெண்கள் தங்களின் வாழ்க்கைக்கான அனைத்து நலன்களையும் இழக்க நேரிடுகிறது. கணவனை இழந்ததால் பூ, மஞ்சள், வளையல் போன்ற மங்கலப் பொருட்கள் பயன்படுத்துவதை அந்தப் பெண் இழக்க நேரிடுகிறது. வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த கணவனோடு மங்கல மகளிர் என்ற சமூக அந்தஸ்தையும் அப்பெண் இழக்கிறாள். அத்தகைய துயரங்கள் பாடல்களில் வெளிப்படுவதைப் பின்வரும் ஒப்பாரிப் பாடல் தெளிவுபடுத்துகிறது.
பூவாலழகியம்மா நான்
புண்ணியரோட மனைவியம்மா - நான்
புண்ணியர தோத்தேனே
பூவிழந்து போனேனே
நான் மஞ்சளழகியம்மா
மன்னவன் தேவியம்மா - நான்
மஞ்சளிழந்தேனே
மன்னவர தோத்தேனே
தங்க திருவளைய - நான்
தரிக்கையிலே போட்டளைய - இந்த
தருமரோட வாசலிலே
தவிடு பொடி ஆவுதே(தோத்தேனே-தோற்றேனே, இழந்தேனே. வளைய-வளையல், போட்டளைய-போட்ட வளையல். தவிடுபொடி-கணவனை இழந்த பெண்ணின் வளையலை உடைப்பர். அதுவே சுட்டப்படுகிறது)
இந்தப் பாடல் ஒரு பெண் கணவனை இழந்ததால் பூ, மஞ்சள், வளையல் ஆகியவற்றை இழக்க நேர்ந்ததைச் சுட்டுகிறது.
• பெண்களின் அவலம்
திருமணத்திற்கு மாப்பிள்ளையை முடிவு செய்யும் உரிமையைப் பெண்ணுக்கு அளிப்பதில்லை. பெற்றோர்களாலும் உறவினர்களாலும் பல்வேறு நோக்கங்களுக்காகத் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. அதனால் பாதிக்கப்படும் பெண்களின் அவலக் குரலைப் பாடல்களில் கேட்கலாம். பெண்ணைப் பெற்றவர்களின் விருப்பமின்றி ஒரு மொந்தைக் கள்ளுக்காகத் திருமணம் நிச்சயிக்கப்படுவதைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்துகிறது. மணப்பெண் இத்திருமணத்தை மறுக்கவில்லை. அதனை மறுக்கக் கூடிய விவரமற்றவளாக அப்பெண் இருந்திருக்கிறாள். ஆனால் பின்னர் விவரம் தெரிந்தபோது நினைத்து வருந்துகிறாள்.
பத்தூரு பாதகனும் - என்ன பெத்த அம்மாவே
முட்டலூரு வண்ணானும்
பொண்ணுக் கேக்க வந்தாங்க - என்
தாயுந் தகப்பனும்
தகராறு பண்ணாங்க
அழகு பொருத்தண்ணு
ஆகாது இண்ணாங்க
கூடி பொருத்தண்ணு
கூடாது இண்ணாங்க
ஒரு மொந்த கள்ளுக்கு
ஒப்புக் கொண்டான் சித்தப்பனும் - எனக்கு
இப்ப தெரிஞ்சி புத்தி - எனக்கு
அப்ப தெரிஞ்சிருந்தா - நான்
பரிய பொட வெடுத்து
பந்தலிலே கட்ட மாட்டேன்
கூறை பொடவெடுத்து
கும்பலிலே கட்டமாட்டேன்
காக்கா சிலம்பக் குள்ள
கழுத்தையும் நீட்ட மாட்டேன்
குருவி சிலம்பக் குள்ள
குனிஞ்சுக் கொடுக்க மாட்டேன்
சோத்துக் காலெடுத்து-என்ன பெத்த அம்மாளே
மின்னையும் வக்க மாட்டேன்(தன்னைப் பெண் கேட்டு வந்தவர்களைப் பாதகர்கள், துணிவெளுக்கும் வண்ணான் என்று இழிவு படுத்துகிறாள் ; கூறை-திருமணப் புடவை; குனிஞ்சி-தாலிகட்ட வாகாகக் குனிந்து அமர்தல்)
’பரியப்புடவை’ என்பது கணவன் வீட்டார் பரிசம் போடும்போது தரும் புடவை. தனக்கு அப்போது விவரம் இருந்திருந்தால் அந்தப் புடவையைக் கட்டியிருக்க மாட்டேன் என்றும், காக்கைச் சிலம்பும் (ஒலிக்கும்) காலை நேரத்தில் தாலி கட்டுவதற்காகக் கழுத்தை நீட்டி இருக்க மாட்டேன் என்றும், வலக்காலை எடுத்து வைத்து மணமகன் வீட்டிற்குச் சென்றிருக்க மாட்டேன் என்றும் ஒரு பெண் சுட்டுவதை இப்பாடலில் காணலாம்.