Primary tabs
4.3 பயன்கள்
நாட்டுப்புறப் பாடல்கள், மக்களுக்குப் பயன்படும் வகையில் கல்வியின் தேவையை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன. தகவல் தொடர்புக் கூறுகள் வளர்ச்சியடையாத காலத்தில் மக்களிடையே செய்திகளைப் பரப்புவதற்குரிய ஊடகமாகவும் பயன்பட்டுள்ளன. மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள், தாங்கள் ஒடுக்கப்படும் பொழுது, அதை நேரடிய எதிர்த்துப் போராட முடியாத சமூகக் கட்டமை இருந்தது. அத்தகைய சூழலில் தங்கள் எதிர்ப்பு உணர்வுகளை மறைமுகமாக வெளியிடுவதற்கும் நாட்டுப்புறப் பாடல்கள் பயன்பட்டன.
நாட்டுப்புறப் பாடல்கள் பல்வேறு நிலைகளில் நாட்டுப்புற மக்களிடையே மரபு வழிக் கல்வி நிறுவனமாகச் செயல்படுகிறது.
ஓராந்தான் திங்களுக்கு
ஓரிலையான் தினை பயிறு
ஈராந்தான் திங்களுக்கு
ஈரினையான் தினைபயிறுஎன்று பத்து எண்கள் வரை அடுக்கிப்பாடுவதை நாட்டுப்புறப்பாடல்களில் காணலாம். சிறுவர் விளையாட்டுப் பாடல்களில் இவ்வகைப் பாடல்கள் மிகுதி. இது சிறுவர்களுக்கு அடிப்படை எண்ணல் அறிவை ஊட்டுவதாக அமைந்துள்ளது.
ஏற்றப்பாடல்களில் ஏற்றம் இறைக்கும் சால்களின் எண்ணிக்கை பத்து, இருபது, முப்பது என்று நூறு வரையும் அதற்கு மேலும் செல்வதுண்டு இத்தகைய பாடல்கள் மக்களுக்கு எண்ணலறிவை ஊட்டுவதோடு ஒரு ஏக்கர் நிலத்திற்கு எத்தனைச் சால்கள் இறைத்தால் போதுமானதாக இருக்கும் என்ற வேளாண் நீர்ப்பாசன அறிவையும் ஊட்டுவதாக அமையும்.
• கல்வியின் தேவை
கடந்த அரை நூற்றாண்டாக முறைசார் கல்வியின் முக்கியத்துவம் மக்களால் பெரிதும் உணரப்பட்டது. படித்தால் மட்டுமே சிறந்த எதிர்காலம் அமைய முடியும் என்று மக்கள் கருதினர். தெருக்கூத்தாடுவது முதலான நிகழ்த்துதல்களில் ஆர்வம் கொண்டிருக்கும் ஓர் இளைஞன் பள்ளிக்குச் சென்று படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பதைப் பின்வரும் பாடல் கேலியாக விமர்சிப்பதைக் காண்க.
தெருக்கூத்து நல்லா ஆடுவான் எங்கசின்ன மாமன்
ஸ்திரி பாட்டு வேஷம் போடுவான்
ஒருகூத்தா இருகூத்தா ஒன்பது கூத்தாடுவான்
ஒக்காந்து படிக்கச் சொன்னா கண்ண உருட்டி கண்ண விழிப்பான்
மத்தளம் நல்ல வாசிப்பான் எங்க சின்ன மாமா
வாசியிண்ணா மட்டும் ஓசிப்பான்(ஸ்திரிபார்ட் வேஷம் - பெண் வேடம், படிக்கச் சொன்னா திருதிருவென விழிப்பான், வாசியின்னா-படி என்று கூறினால், ஓசிப்பான்-(படிப்பதற்கு) யோசிப்பான்)
நாட்டுப்புறப்பாடல்கள் மிகச் சிறந்த தகவல் தொடர்புச் சாதனமாக இருந்து வருகிறது. கிராமப்புறப் பகுதிகளில் நிகழும் கொலை, தற்கொலை, தீவிபத்து, கலவரம், பஞ்சம், புயல் அழிவு போன்ற பல்வேறு நிகழ்வுகள் பாடலாக்கம் பெற்று வாய்மொழியாகப் பரவி மக்களைச் சென்றடையக் கூடிய போக்கு காணப்படுகிறது. இத்தகைய பாடல்களில் பல்வேறு வழித்தடங்கள், ஊர்ப் பெயர்கள், புழங்குபொருட்கள் போன்றவை சுட்டப்படும். அவை பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பாடல்கள் வழிச் சென்றடையும். இந்த மரபு மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மிக வேகமாக மறைந்து வருகிறது.
மக்களிடையே பொருளாதார அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. பொருளாதாரத்தில் சாதியிலும் உயர்ந்த தரத்தில் உள்ளவர்களின் அடக்கு முறைகளுக்கு உட்படும் அடித்தள மக்கள் தங்களுடைய உள்ளக் குமுறல்களை அவர்களிடம் நேரிடையாக வெளிப்படுத்த இயலாத நிலை உள்ளது. இத்தகைய உள்ளத்து உணர்வுகளுக்கு மிகச்சிறந்த வடிகாலாக நாட்டுப்புறப் பாடல்கள் விளங்குகின்றன. தங்களுக்குள் பாடப்படும் பாடல்களில் தங்களுடைய உள்ளத்து உணர்வுகளை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ மக்கள் வெளிப்படுத்துவதன் வாயிலாகத் தங்களுடைய மனக் குமுறலில் இருந்து விடுபடுகிறார்கள். இவ்வகையில் நாட்டுப்புறப் பாடல்களின் பங்களிப்பு மிகச்சிறந்தது என்பதில் ஐயமில்லை.
அறுவடையின் போது நல்ல நெல்லைத் தாங்கள் எடுத்துக் கொண்டு கருக்காய் நெல்லை (முற்றாமல் உலர்ந்து கருமை நிற அரிசியையுடைய நெல்) கூலிவேலை செய்பவர்களுக்குத் தருவர். பண்ணை முதலாளிகள் வேலை செய்து கூலி கேட்டால் வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமை என்று காரணம் காட்டிக் கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பர். அந்தக் கூலி வேலை செய்யும் பெண்களை ’வாடி போடி’ என்று மரியாதையில்லாமல் அழைப்பர். இப்போக்கினை எதிர்த்துப் பேச இயலாத நிலை அடித்தட்டு மக்களுக்கு இருக்கும். இத்தகையப் போக்குகளை எதிர்க்கும் எதிர்ப்புக் குரலாக அவர்களின் பாடல்கள் காணப்படும். பின்வரும் பாடலைச் சான்றாகக் கூறலாம்.
தாளு நெல்லு ஒங்களுக்குச் சாமி
தங்குன கருக்கா எங்களுக்கா
போரு நெல்லு ஒங்களுக்கு சாமி
ஓடுன கருக்கா எங்களுக்காவேலசெய்து கூலிய கேட்டா
வெள்ளி செவ்வாயிங்குறிங்க
நாத்துக் கூலிய கேக்கப் போனா
நாள பின்னைண்ணு சொல்லறீங்கஎட்டிய குட்டிய யிங்குறத ஒங்க
சுறவாணத்தில் வச்சிக்குங்க
வாடி போடியிங்குறத ஒங்க
வாசப்படில வச்சிக்குங்க.இவ்வாறே சாதி ஏற்றத் தாழ்வு காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை ஒடுக்கும் மேல் சாதியினரை நாட்டுப்புறப் பாடல்களில் பழித்தும் கேலி செய்தும், தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் போக்குகளைக் காண இயலும். கூலிப் போராட்டங்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் போன்றவை நாட்டுப்புறப் பாடல்களின் பாடுபொருளாக உள்ளதைக் காண முடிகிறது.
• மனச்சுமையை நீக்கல்
அடித்தட்டு மக்களிடையே அதிகமாகப் பழக்கத்தில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களுள் தாலாட்டு, விளையாட்டு, கொண்டாட்டப் பாடல்கள் தவிர்த்த ஏனைய பாடல்களின் இசை, துன்பத்தை வெளிப்படுத்துவதாகவே (துயர இசையாகவே) காணப்படுகிறது. பல்வேறு பாடல்களின் பொருண்மையும் உடல் துயரச் சம்பவங்களின் வெளிப்பாடுகளாகவே காணப்படுகின்றன. தங்கள் வாழ்க்கைத் துயரங்களை, தாங்கள் நேரடியாகவோ கேட்டுணர்ந்தோ அனுபவித்த துயரங்களைப் பாடல் வடிவில் வெளிப்படுத்தி அதன் வாயிலாக மக்கள் தங்கள் மனச்சுமையை இறக்கிவைக்கிறார்கள்.