தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

அறிவுத்திறன் வெளிப்படல்

  • 5.3. அறிவுத்திறன் வெளிப்படல்

    வாழ்க்கை அனுபவத்தில் கிடைத்த அறிவுத்திறன்களைப் பழமொழியாகக் கூறிவைத்தனர் முன்னோர்கள். அத்தகைய பழமொழிகள் முன்னோர்களின் அறிவுத்திறனை வழிவழியாக வெளிப்படுத்திச் சந்ததியினரைப் பயன் கொள்ளச் செய்தன. இது குறித்துச் சில பழமொழிகளைக் காணலாம்.

    5.3.1. வேளாண்மைப் பழமொழிகள்

    பழமொழிகளில் வேளாண்மை அறிவியல் என்ற நூலில் பி.வீ.செயராமன் தமிழர் தம் அறிவுத்திறன் குறித்த ஏராளமான குறிப்புக்களை நல்கியுள்ளார். அதிலிருந்து ஒரு சில கருத்துக்கள் இங்கே தரப்படுகின்றன.

    ஆனி மாதத்தில் வானம் குமுறினால் தொடர்ந்து இரு மாதங்களுக்கு மழைபொழியாது என்பதனை

     

    ஆனி குமுறினால்
    அறுபது நாளைக்கு மழையில்லை

     

    என வரும் பழமொழி சுட்டுகிறது.

    மழையின் அறிகுறி பற்றிப் பின்வரும் பழமொழிகள் சுட்டுகின்றன.

     

    அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை
    அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி
    எறும்பு முட்டைகொண்டு திட்டை ஏறின் மழைவரும்
    தட்டாம்பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழைவரும்

     

    பயிருக்கு எவ்வளவு தான் நீர்பாய்ச்சினாலும் மழை பொழிந்தால் தான் அது செழுமையாக வளரும். யார் சீராட்டினாலும் தாய்முகம் காணாத பிள்ளை வளமாக இருக்காது. இதனை

     

    மழைமுகம் காணாத பயிரும்
    தாய்முகம் காணாத பிள்ளையும்

     

    என்ற பழமொழி தெளிவுபடுத்துகிறது.

     

    வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை
    அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு
    அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
    எருவிலும் வலியது உழவே
    வெண்ணை போல் உழவு, குன்று போல் விளைவு
    ஆடி உழுது அடர விதை
    ஆடிப்பட்டம் தேடி விதை
    ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு
    ஆடிக்கொரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்
    ஆடி வாழை தேடி நடு
    ஆடிப்பிள்ளை தேடிப் பிழை
    அடை மழையில் நாற்று நட்டால் ஆற்றோடு போகும்
    ஆவணி முதலில் நட்ட பயிர் பூவணி அரசர் புகழ் போலும்
    பிடிபிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா?
    உடையவன் பாராப்ப பயிர் உருப்படுமா?
    களைபிடுங்காப் பயிர் கால் பயிர்

     

    போன்ற ஏராளமான வேளாண் பழமொழிகள் வேளாண் அறிவியலை மக்களுக்கு உணர்த்துகின்றன. வேளாண்மைக்கு மழை இன்றியமையாதது. எனவே மழை அறிகுறி குறித்து அனுபவத்தின் வாயிலாக அறிந்து அவற்றைப் பழமொழிகளாகக் கூறிச் சென்றனர் முன்னோர். வேளாண் சமுதாயத்தில் உழவின் முக்கியத்துவம் சிறப்பாகக் கூறப்படுகிறது. ’ஆடி உழுது அடர்த்தியாக விதைக்க வேண்டும் என்பதையும், உழவன் வாயிலாக மண்ணை வெண்ணெய்போல் மென்மையாக்கினால் விளைவு சிறப்பாக இருக்கும் என்பதையும் எந்தெந்த மாதத்தில் விதைக்க வேண்டும் என்பதையும் வாழை, தென்னம் பிள்ளை முதலியவற்றை ஆடி மாதத்தில் வைக்க வேண்டும் என்பதையும் ஆவணி முதலில் நடவுப் பணிகள் முடிப்பதே சிறப்பு என்பதையும் இந்தப் பழமொழிகள் தெளிவுபடுத்துகின்றன. இதுபோன்று பல்வேறு நிலைகளிலும் மக்களின் அறிவுத் திறனை வெளிப்படுத்துவதாகப் பழமொழிகள் அமைந்துள்ளன.

    5.3.2 உறவு முறைப் பழமொழிகள்

    உறவுமுறை பற்றி ஏராளமான பழமொழிகள் உள்ளன. அவை, உறவுகள் ஏன் ஏற்படுகின்றன? மண உறவுகளை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்வது நல்லது? உறவுகள் எப்படி அமைய வேண்டும்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை கூறுகின்றன.

     

    உண்டால் தின்றால் உறவு
    கொண்டால் கொடுத்தால் உறவு

    அகத்தி ஆயிரம் காய்த்தாலும்
    புறத்தி புறத்தியே

    அகன்று இருந்தால் நீண்ட உறவு

    கிட்ட இருந்தால் முட்டப் பகை

    உள்ளூர் உறவும் சரி
    உழுத மாடும் சரி

     

    உறவுகள் பெண் எடுப்பதன் வாயிலாகவும், கொடுப்பதன் வாயிலாகவும் அமைகின்றன. நன்மைகள் ஆயிரம் வந்தாலும் சொந்தங்களைவிட்டு விட்டுப் பிறத்தியாரிடம் சென்று பெண் எடுத்தல் கூடாது. உறவுகள் சற்றுத் தூர இருப்பது நன்மை தரும். உள்ளூர் உறவு மதிப்பற்றது என்று இப்பழமொழிகள் சுட்டுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-10-2017 17:36:43(இந்திய நேரம்)