Primary tabs
5.4 மரபுத் தொடரும் விடுகதையும்
தமிழ் மரபுத் தொடர்களுக்கும் பழமொழிக்கும் சில நிலையில் ஒற்றுமையும், பல நிலையில் வேறுபாடுகளும் காணப்படுகின்றன. அதைப்போல விடுகதைகளுடன் தொடர்பும் வேறுபாடும் உள்ளது.
5.4.1 பழமொழியும் மரபுத் தொடரும்
தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதியின் முதன்மை ஆசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் பழமொழிக்கும் மரபுத் தொடருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார். பழமொழியும் மரபுத் தொடரும் வேறானவை. சில மரபுத் தொடர்கள் பழமொழியோடு தொடர்புடையன. பழமொழிக்கும் மரபுத் தொடருக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. பழமொழியில் உள்ள சொற்களின் நேர் பொருள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விளக்கிக் கொள்ளப்படும். பழமொழி பல சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படக் கூடியது.
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்ற பழமொழிக்கு கம்பி நீட்டு என்ற மரபுத் தொடரின் பொருள் போல் ஒரே பொருள் கூற முடியாது. ஒரு பழமொழியின் குறுகிய வடிவம் மரபுத் தொடராக மாறலாம்.
தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது
சாண் போனால் என்ன முழம் போனால் என்னஎன்ற பழமொழியின் தலைக்குமேல் வெள்ளம் என்ற தொடர் மரபுத் தொடராக வழங்கி வருகின்றது.
பழமொழி விடுகதையாகவும் விடுகதை பழமொழியாகவும் மாறுதல் உலகின் பல்வேறு மொழிகளின் காணப்படும் இயல்பு. என்பதைப் பல்வேறு அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். தமிழிலும் அவ்வாறு வழங்குகிறது என்பதை தே. லூர்து (1988 : 21) எடுத்துக் காட்டியுள்ளார்.
நடக்கத் தெரியாதவன்
நட்டுவனார்க்கு வழிகாட்டுவானா?என்பது பழமொழி. இதே பழமொழி
நடக்கத் தெரியாதவன்
நட்டுவனார்க்கு வழிகாட்டுகிறான் - அவன் யார்?என்பது விடுகதை. இது பழமொழியாகச் செயல்படும் போது தனக்கே ஒன்றும் தெரியாதவன் பிறருக்கு எவ்வாறு வழிகாட்ட முடியும் என்ற பொருளில் பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படும். அது விடுகதையாகச் செயல்படும் போது கைகாட்டி மரம் என்ற விடையைக் கூறுவதாக அமையும். பழமொழியில் வினா, ஒரு வாக்கியத்துக்குள்ளேயே அமைந்திருக்க விடுகதையில் வினா தனித்த ஒரு வாக்கியமாக அமைவதைக் காணலாம்.