Primary tabs
-
6.2 தொழில் தொடர்பானவை
ஒவ்வொருவரும் செய்யும் தொழிலின் அடிப்படையில் பலவிதமான நகைச்சுவைத் துணுக்குகள் கிராம மக்களிடையே வழங்குகின்றன. அவர்களுடைய தொழிலை கேலி செய்வதாகவும், இரட்டைப் பொருள் தருவதாகவும் அமைந்திருக்கும். நினைத்துப் பார்த்தால் நகைச்சுவை ஏற்படும்.
ஒரு தொழிலாளிக்குத் தன் தொழில்-அதனால் உருவான பொருள்-தன் திறமை காரணமாக கர்வம் இருப்பதுண்டு. கதிர் அறுக்கும் பன்னறுவாள் செய்கிற ஒரு திறமையான ஆசாரி. அவரிடம் தன் மகளுக்கு சீதனமாகக் கொடுத்தனுப்பப் பன்னறுவாள் வாங்க ஒரு பெண் வருகிறாள். “புது பெண்ணுக்கு முதமுதல்ல உம்ம கையால அறுவா செஞ்சு கொடுக்கீரு. நல்லா வாழ்த்திக் கொடும்” என்கிறாள். அவ்வளவுதாங் ஆசாரிக்கு கர்வம் வந்துவிடுகிறது. அவளைக் கிழக்குப் பக்கமாக நிற்கச் சொல்லி ஒரு பாட்டுத் தொனியில் வாழ்த்திக் கொடுக்கிறார் இப்படி:
“யேத்த............இது சாதாரண அறுவா இல்ல. கொல்லுச்சாமி செஞ்ச ஜோக்கான உருக்கறுவா. இதை
நீ அறுத்து, ஒம் மக அறுத்து
ஒம் பேத்தி அறுத்து
ஒங்க வம்சமுமே அறுத்து வாழணும்....”திருமணத்துக்கு நல்ல வாழ்த்துச் சொல் கேட்க வந்த பெண்ணுக்கு ‘அறுத்து வாழணும்’ என்ற மங்கல வாழ்த்து(!)க் கிடைக்கிறது. நாட்டுப்புற வழக்கில் ‘அவள் அறுத்தவள்’ என்றால் ‘தாலி அறுத்தவள்’ என்று பொருள். இதில் அமைகின்ற எதிர்பாராத ஆசாரியின் அப்பாவித்தனத்தில் விளைந்த நகைச்சுவையை நீங்கள் சுவைக்கலாம்.