தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 6.3-பொதுவானவை

  • 6.3. பொதுவானவை

    மக்களிடையே பல்வேறு பொருண்மையுடைய நகைச்சுவைத் துணுக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவை நம்முடைய பண்பாடுகளாக எழுத்திலக்கியங்கள் காட்டும் போக்குகளுக்கு எதிர்மறையான கருத்துக்களையும் முன் வைக்கின்றன. இவை எதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடியவை. இவையேயன்றி மூடத்தனம், சமயோசிதம், கவனமின்மை, பேராசை, பொய் சொல்லுதல் போன்ற பல்வேறு பொருள்கள் குறித்தவையாக அவை அமைந்திருக்கின்றன. இங்கு முனைவர் ஒ.முத்தையா சேகரித்தளித்த ஒரு சில சான்றுகள் காணலாம்.

    6.3.1 விருந்து

    விருந்து உபசரித்தல் தமிழர்களின் பண்பாடு என்று பல்வேறு எழுத்திலக்கியச் சான்றுகள் காட்டப்படுவதுண்டு. பெரியபுராணத்தில் அப்பூதி அடிகள் தன் குழந்தை இறந்ததை மறைத்துவிட்டுச் சிவனடியாரை விருந்து உபசரிக்கிறார். சிறுத்தொண்டரோ அடியாருக்கு விருந்து வைப்பதற்காகத் தன் ஒரே மகனையே அறுத்துக் கறி சமைத்தார். இளையான்குடி மாற நாயனார் ஏழ்மையான நிலையிலும் சிவனடியார்க்கு விருந்து உபசரிக்கத் தன் வயலில் விதைத்த விதை நெல்லைச் சேகரித்து வந்து உணவு படைத்தார். திருவள்ளுவர் அமுதமே கிடைத்தாலும் விருந்தாளிக்குக் கொடுக்காமல் தானே உண்ணக்கூடாது என்றார்.

     

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாகா
    மருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று.

     

    இவ்வாறெல்லாம் விருந்து உபசரித்தல் குறித்து எழுத்திலக்கியங்களில் கூறப்பட்டாலும் எதார்த்த வாழ்க்கை வேறாக உள்ளதை அறிய முடிகிறது. இதனைப் பின்வரும் நகைச்சுவைத் துணுக்கு தெளிவுபடுத்துகிறது.

    கணவன் மனைவி வீட்டினுள்ளிருந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியே தங்கள் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருவதைப் பார்த்தார்கள்.

    காட்சி

    விருந்தினர் வந்தால் செலவாகுமே என்று பயந்து, "நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழவேண்டும். கணவன் மனைவி சண்டைபோட்டுக் கொண்டிருக்கும் வீட்டிற்கு விருந்தினர் வராமல் திரும்பி விடுவர்” என்று கூறி, அவ்வாறே அடிப்பதுபோல் அடித்தான். அவளும் அழுவது போல் அழுதாள். சற்றுநேரம் கழித்து கணவன் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். விருந்தினரைக் காணவில்லை. அவன் திரும்பிச் சென்று விட்டதாக மகிழ்ந்தான். மனைவியிடம் பெருமையாக ‘நான் அடிப்பதுபோல் அடித்தேனே எப்படி?’ என்று கூறினான். அதற்கு அவள் ‘நான் அழற மாதிரி அழுதேனே அது எப்படி?’ என்று கூறி மகிழ்ந்தாள். உடனே வீட்டிற்குப் பக்கத்தில் மறைந்திருந்த விருந்தாளி ‘நான் போற மாதிரி வந்தேனே, இது எப்படி?' என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.

    இந்த நகைச்சுவைத் துணுக்கில் எதார்த்தமான வாழ்க்கை சித்திரிக்கப்படுகிறது. எளிய மக்கள் அன்றாட உணவுக்கே அல்லல்படும்போது விருந்தினர்களை எவ்வாறு உபசரிக்க முடியும்? அத்தகைய வாழ்க்கைச் சூழலில் உருவான நகைப்பாக இதனைக் கருதமுடிகிறது.

    6.3.2 சமயோசிதம் (நேரத்திற்கேற்ற அறிவு)

    சமயோசித புத்தி உள்ளவன் எந்தச் சூழலிலும் பிழைத்துக் கொள்வான். நல்லவன் தான் சமயோசிதத்தால் வெற்றி பெறுவான் என்று எழுத்திலக்கியங்கள் கூறும். ஆனால் தவறான செயல்களில் ஈடுபடுபவனும் வெற்றி பெறுவதாக நகைச்சுவைத் துணுக்குகள் உள்ளன. இங்கு அவனுடைய சமயோசிதம் இரசிக்கப்படுகிறது. திருடனின் சமயோசிதம் குறித்த நகைச்சுவை ஒன்று வருவாறு :

    ஒரு திருடன் தேங்காய் திருடுவதற்காகத் தென்னை மரத்தில் ஏறினான். மரத்தின் உச்சியில் இருக்கும் போது தோட்டக்காரன் அங்கு வந்துவிட்டான். தோட்டக்காரன் அவனைப் பார்த்துப் பேச, அதற்குத் திருடன் பதில் கூறுகிறான். அவர்களின் உரையாடல் வருமாறு :

     

    ‘யாருடா அது, மரத்து மேல என்ன செய்யிறே?’
    ‘புல்லு புடுங்குறத்துக்கு தென்ன மரத்தில் ஏறுனங்க’
    ‘தென்னை மரத்தில எப்படிடா புல்லு மொளைக்கும்?’
    ‘அதாங்க புல்லு இல்லேன்னு கீழே இறங்கிட்டு இருக்கேன்.’

     

    இங்குத் திருடன் தன்னுடைய சமயோசித புத்தி காரணமாகத் தோட்டக்காரரிடமிருந்து தப்பிப்பதை அறிய முடிகிறது.

    6.3.3 மூடன்

    “ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆட்டுக் குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு அதனைக் காணவில்லை என்று பல இடங்களிலும் தேடினான். எங்கும் கிடைக்கவில்லை. பக்கத்தில் இருந்த கிணற்றில் இருக்கிறதா? என்று கிணற்றினுள் எட்டிப் பார்த்தான். அவன் தோளில் இருந்த ஆட்டுக்குட்டி கிணற்று நீரில் தெரிந்தது. உடனே அவன் கிணற்றில் குதித்து ஆட்டுக் குட்டியைத் தூக்கி வந்தான்”.

    6.3.4 அறிவுரை

    சில நகைச்சுவைத் துணுக்குகள் அறிவுரை கூறுவதற்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. வகுப்பறையில் கவனத்துடன் ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனிக்காத மாணவனை இடித்துரைத்துத் திருத்துவதற்குப் பின் வரும் துணுக்கு அடிக்கடி கூறப்படுவதுண்டு.

    “ஓர் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவன் பாடத்தைக் கவனிக்காமல் வகுப்பறையின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்த எலியையே கவனித்துக் கொண்டிருந்தான். அந்த எலி ஒரு வளையில் நுழைந்தது. அதன் வால் பகுதி மட்டும் உள்ளே நுழையாமல் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் அந்த மாணவனைப் பார்த்து ‘நான் நடத்தியது உன் மூளையில் நுழைந்ததா?‘ என்ற பொருளில் சுருக்கமாக ‘என்னடா நுழைந்ததா? என்று கேட்டார். எலியையே பார்த்துக் கொண்டிருந்த மாணவன் சட்டென்று ‘எல்லாம் நுழைந்தது. இன்னும் வால் மட்டும் நுழையவில்லை ஐயா என்றான்”.

    இந்த நகைச்சுவைத் துணுக்கு வகுப்பறையில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும் சொல்லிக் கொடுப்பதைக் காதில் வாங்கிக் கொள்ளாத மாணவர்களை இடிந்துரைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

    6.3.5 பேராசை

    பகற் கனவு கண்டு, தான் மணந்து கொண்டதாகக் கற்பனை செய்துகொண்ட அரசன் மகளை உதைப்பதாக நினைத்துக் கொண்டு தான் விற்கும் கண்ணாடிப் பாத்திரங்களை உதைத்து உடைத்தவன் அல்நாசர். அந்தக் கதையின் சாயல் படிந்த கதைகள் பல தமிழ் நாட்டுப் புறங்களில் வழங்குகின்றன. பரண்மேலிருந்து காவல் செய்யும் பார்வையற்றவன் ஒருவன், பகற்கனவில் தனக்குத் திருமணமாகிவிட்டதாகக் காண்கிறான். மணப்பெண்ணோடு நெருங்கி உட்கார்கிறான். அவள் கூச்சப்பட்டு நகர நகர.. அவன் நெருங்க நெருங்க.. பரண்மீதிருந்து விழுந்து கைகால்களை ஒடித்துக்கொள்ளும் நடப்பியலில் பகற்கனவு முடிவடைகிறது.

    6.3.6 பொய்

    மற்றவர்களிடம் மட்டுமல்லாது தங்களுக்குள்ளேயே கூடத் தயக்கமில்லாமல் பொய்கள் சொல்லும் குடும்பம் பற்றி ஒரு கதை உண்டு. அப்பனும் மகனும் (4, 5 வயது) போய்க்கொண்டிருந்தார்கள். அப்பன் ‘அந்தா பாற்றா, மலையிலே ஒரு சித்தெறும்பு போற அளகை’ என்றான். பையனும் கூர்ந்து கவனித்துவிட்டுச் சொன்னான்; ‘ஆமாப்பா, சித்தெறும்புக்குப் பின்னாடி அதோட குட்டியும் போகுதே, பார்த்தியா, என்ன சோக்காப் போகுது!’ என்றான். அப்புறம் பையன் சொன்னான்: ஒருநாள் பண்ணையார் வீட்டிலே தென்னை மரத்திலே ஏறி உச்சிக்குப் போயிட்டேன்’ அப்பன் கேட்டான்: ‘அப்புறம் எப்படிடா மகனே எறன்குனே’ பையன் பதில் சொன்னான்: ‘பொறவு சடார்னு ஒரு யோசனை வந்தது. பட்டுனு ஒரு ஏணியை எடுத்து வச்சு மளமளன்னு எறங்கிவந்துட்டேன்’.

    பொய் சொல்பவர்களை எள்ளிப் பேச இதுபோன்ற துணுக்குக் கதைகள் பிறந்து வழங்கின.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:36:55(இந்திய நேரம்)